
முறையாகப் பராமரிக்கப்படாததால் செங்கோட்டை குளத்துக் கரை வலுவிழந்ததால் அருகேயுள்ள ஏ.கே.நகரில் குளத்து நீர் புகுந்தது. இதனால் இங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதையடுத்து ஆய்வு நடத்திய கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, குளத்துக்கரையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
செங்கோட்டை நகரின் மத்தியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கோட்டை குளமானது, குண்டாறு அணையில் இருந்தது உபரியாக கிடைக்கப்பெறும் தண்ணீரால் நிரம்புவது வழக்கம்.
இக்குளத்தையொட்டி அமைந்துள்ள ஏகே நகரில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனிடையே முறையாக பராமரிக்கப்படாததால் இக்குளத்தின் கரை வலுவிழந்தது.
இதனால் இங்கு பெருக்கெடுத்த நீர் அருகேயுள்ள ஏகேநகரில் புகுந்தது. இதனால் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கிநின்றது. இவ்வாறு தேங்கிநிற்கும் தண்ணீரில் கழிவுநீரும் சேரும் நிலையில் உருவாகும் கொசுக்களால் நோய்கள் பரவும் அபாயம் உருவானது.
கடந்த ஒரு மாதமாக இந்நிலை நீடிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, கள ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி வலுவிழந்து காணப்படும் இந்த குளத்தின் கரையை முழுமையாக சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
ஆய்வின்போது அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகையா, கந்தசாமி பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் ஆய்க்குடி செல்லப்பன், ராமச்சந்திரன், வசந்தம் முத்துபாண்டியன் கடையநல்லூர் நகரச் செயலாளர் முருகன், பேரூர் செயலாளர்கள் முத்தழகு, பாலசுப்பிரமணியன், சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் ஞானராஜ், ஜாகீர் உசேன், கிட்டுராஜா, அருள்ராஜ், பூசைராஜ், ராஜா, கணேசன், சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.