புதனும் சரி வெள்ளியும் சரி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் சூரியனின் தாக்கம் பெருமளவு இருக்கும். ஆகவே அங்கே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு. மூன்றாவதாக இருப்பது நம்முடைய பூமி. அதற்கு அடுத்த இடத்தில் செவ்வாய். செவ்வாயை தாண்டினால் சூரியனின் வெப்பம் அதிகம் இருக்காது.
இதனால் அதிக குளிர்ந்த கோள்களாகவே வியாழன், சனி ஆகியவை இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் காரணங்களால் தான் செவ்வாய் கோளின் மீது விஞ்ஞானிகளின் போக்கஸ் உள்ளது. அங்கே ஏலியன் போன்ற உயிர்கள் வாழ்கின்றனவா, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை தேடி தேடி பார்க்கின்றனர்.
அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும் கண்டுள்ளனர். அந்த வகையில் செவ்வாயை ஆராய்ச்சி செய்ய நாசாவால் களமிறக்கப்பட்டது தான் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம்.
இதில் பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. துல்லியமாக படம்பிடிக்கும் சூப்பர் கேமரா, செவ்வாயில் கேட்கும் சத்தங்களைப் பதிவுசெய்யக்கூடிய அதிநவீன மைக்ரோபோன்கள், பறந்துகொண்டே செவ்வாயை படம்பிடிக்க குட்டியான ட்ரோன் ஹெலிகாப்டர், செவ்வாய் நிலத்துக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டறிய RIFMAX எனும் கருவி என பல்வேறு தொழில்நுட்பங்களுடன் தான் செவ்வாயில் களமிறங்கியிருக்கிறது பெர்சர்வரன்ஸ் ரோவர்.
கிட்டத்தட்ட செவ்வாயை உளவு பார்க்கும் உளவு விண்கலமே இந்த ரோவர். இந்தாண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கிய ரோவர் தொடர்ந்து பல்வேறு புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
அதேபோல செவ்வாயிலுள்ள பாறைகள், வண்டல் மண் படுகைகள், நீர் இருந்ததற்கான ஆதாரம் என தனக்கு கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்து வருகிறது
. அந்த வகையில் தற்போது செவ்வாயில் கேட்கும் சத்தங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறது. செவ்வாயின் காற்று, செவ்வாய் மீது ரோவரின் சக்கரங்கள் உருளும்போது வரும் சத்தம், மோட்டார்கள் சுழலும்போது எழும் சத்தம் என 5 மணி நேரம் சத்தங்களை ரோவர் பதிவுசெய்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது.
இதன்மூலம் புதிய ஆராய்ச்சிகளுக்கு வழி பிறக்கும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.