ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியுள்ளது.
கணவர் ரங்கமன்னாருடன் பிறந்த வீட்டில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு காய்கறிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசைகளை படைத்து வரவேற்பு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில். மேலும் மார்கழி மாதத்தில் பாடப்படும் திருப்பாவை அருளிய ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலம்.
அதோடு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரும் அவதரித்த புனித பூமி. பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களில் முக்கியமான கோவில். ஸ்ரீஆண்டாள், இக்கோவிலில் சயன திருக்கோலத்தில் உள்ள வடபத்ரசாயி பெருமாளை நினைத்து தான் திருப்பாவையை இயற்றியுள்ளார்.
108 திவ்ய தேசங்களிலும் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை இல்லாமல் நடைபெறாது என்பது தனிச்சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா புகழ்பெற்றதாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி பகல்பத்து திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் பகல்பத்து மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரங்கமன்னார் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள் பிறந்த வீடான வேதபிரான் பட்டர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் வீட்டிற்கு வருகை தந்தனர்.
அப்போது பச்சை காய்கறிகள் பரப்பி ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து பெரியாழ்வார் குடும்பத்தின் சார்பில் சுதர்சனம் தலைமையில் வரவேற்றனர்.
விருந்து வைத்த வேதபிரான் பட்டர்
தம்பதிகளுக்கு விருந்தாக வெல்லப்பாகு சேர்த்த கொண்டைக்கடலை பருப்பான மணிபருப்பும், திரட்டுப்பாலும் அளிக்கப்பட்டது. வேதபிரான் பட்டர் வீட்டுத் திண்ணையில் பூசணிக்காயிலிருந்து நெல்லிக்காய் வரை மற்றும் கரும்புக்கட்டு, பழவகை வரை அனைத்தையும் சீர்வரிசையாக பரப்பி வைத்திருந்தனர். இதனை பச்சை பரப்பு என்று சொல்கின்றனர்.
இந்த பச்சைப்பரப்பு சீர்வரிசையை தரிசனம் செய்தால் நம்முடைய வீட்டிலும் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்பது நம்பிக்கை. தாய் வீட்டிற்கு கணவர் ரங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் ஆண்டாள்,ரங்கமன்னார் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தை வந்தடைந்தனர். இதையடுத்து அரையர் வியாக்கியான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஜனவரி 13 சொர்க்கவாசல் திறப்பு
நாளை மறுநாள் 6 தேதி பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்தில் வைத்து எண்ணெய் காப்பு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறுகிறது. வரும் 13ஆம்தேதி காலை 7.35 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மார்கழி நீராட்ட உற்சவத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, முக கவசம் அணிந்து வர வேண்டும் என கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.