spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இந்தியா யார் பக்கம்?

இந்தியா யார் பக்கம்?

- Advertisement -

இந்தியா யார் பக்கம்…???? இப்படி தான் ஊடகங்களில் உருட்டி கொண்டு இருக்கிறார்கள்.

உலக அளவில் தற்போது பரவலாக பேசப்படும்….. சமூக வலைதளங்களில் விவாதிக்க படும் விஷயம் உக்ரைன் ரஷ்யா பிரச்சினை தான். ஆனால் ரஷ்யாவோ அப்படி ஒரு சமாச்சாரமே இல்லை என்கிறார்கள்.

ஜோபைடனோ…… கொஞ்சம் பார்த்து பண்ணுங்க எஜமான்…நிறைய செலவு இருக்கிறது என்கிற விதத்தில் இறங்கி சென்று இருக்கிறார் இந்த விஷயத்தில்…… காரணம் இதனை காட்டித் தான் அவர் அங்கு அமெரிக்காவில் தற்போது அரசியல் செய்ய வேண்டி இருக்கிறது….. அவ்வளவு கடன் சுமை இருக்கிறது அங்கு…… கிட்டத்தட்ட 30 டிரில்லியன் டாலர்கள் என்கிறார்கள். அதாவது இந்தியாவில் இருந்து மேற்கு உலக நாடுகளை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டவர்கள் சுமார் இருநூறு ஆண்டுகளாக இங்கு நம் தேசத்தில் கொள்ளை அடித்து சென்ற செல்வங்களின் மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு தொகை இது.

நம்மிடம் இருந்து இவர்கள் கொண்டு சென்றது நாற்பத்தைந்து ட்ரில்லியன் டாலர்கள் என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.

இப்படி கொண்டு சென்றவர்களின் வம்சாவழியினர் பலர் இன்று அமெரிக்க பிரஜைகள். இன்றுள்ள இவர்களின் அடுத்த தலைமுறையினர் பலரும் நாளைய கடனாளிகள். இது ஒரு தனி விஷயம். போகட்டும் நம் சமாச்சாரத்திற்கு வருவோம்.

கடந்த சில பதிவுகளுக்கு முன்னர் நம் பதிவில் நாம் பார்த்த உக்ரைன் ரஷ்யா பிரச்சினையில் இந்திய நிலைபாடு தான் மிக வலுவான காரணியாக இருக்கும்…… இருக்கும் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தோம்.
அதற்கு பலரும் அது எப்படி?????? இதென்ன மொட்டை தலைக்கும் முழங்கால் முடிச்சு சமாச்சாரமாக இருக்கிறதே என்றெல்லாம் கேள்வி கேட்டு புரிந்து கொள்ள தலைப்பட்டு இருந்தனர். அவர்களுக்கான புரிதலாக இப்பதிவினை கொள்ளலாம்.

கடந்த வாரத்தில் அதாவது உக்ரைனை ரஷ்யா பிப்ரவரி 16 ஆம் தேதி கைப்பற்ற போகிறது என்று மேற்கு உலக ஊடகங்களில் நாள் குறித்து பூச்சாண்டி காட்டி வந்த வேளையில்…. இந்தியா பிப்ரவரி 12 ஆம் தேதி உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகள் அங்கு இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர கேட்டு கொண்டது. இந்த ஒரு விஷயம் காட்டுத்தீ போல் பரவியது….. பங்கு சந்தை வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. இதற்கான ஒற்றை காரணம்….. நம் இந்திய வார்த்தை….. உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் அப்படி பட்டது.

இது நம்மில் பலருக்குமே அதிகப்படியான வார்த்தை ஜாலம் போலவே தெரிந்தாலும் இதன் பின்னணியில் உள்ள அர்த்தமும்….. அதற்கான உழைப்பும் அளப்பரியது. இது நம் இந்திய ராஜதந்திர நகர்வு மற்றும் நடவடிக்கைகளுக்கு உலக அரங்கில் கிடைத்திருக்கும் மரியாதை.

எவ்விதம் எனில்….. உக்ரைன் ஜனாதிபதி இந்த ஒரு வார்த்தையை மேற்கோள் காட்டி தங்களை நேட்டோ அங்கத்துவ நாடாக அங்கீகரிக்க வேண்டி கேட்டுக் கொண்டு இருக்கிறார். அதாவது அவர் தம் வார்த்தையில் சொன்னது இந்திய அரசு நிர்வாகமே சொல்லி விட்டது என்றே தான் ஆரம்பித்தார்.

சரி இதற்கு ரஷ்யா எப்படி எதிர்வினையாற்றியது……

இதனை சற்றே நுட்பமாக அவதானிக்க வேண்டும். இன்றுள்ள சூழ்நிலையில் ரஷ்யாவிற்கு உக்ரைன் எல்லைகருகில் ஒரு சிக்கலும் இல்லை என்பது போலான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.அந்தளவுக்கு அவர்களின் ராஜதந்திர நகர்வுகள் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ராஜாங்க அணுகுமுறை தான்.

உடனே இந்தியா ரஷ்யாவின் பக்கமாக… பக்கபலமாக இருக்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொண்டால் அது தவறு. காரணம் அவர்களுக்கு நம் இந்திய இருப்பே சீனாவிடம் விலை பேச சௌகரியமாக இருக்கிறது…இல்லை என்றால் சீனாவிடம் விலை போய் விடும் சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. இன்றுள்ள சூழ்நிலையில் சீனாவின் பொருளாதார பலம் அசூரத்தனமானது…… ரஷ்யாவை காட்டிலும் மிக பெரியது மற்றும் வலுவானது.

சீனாவிற்கோ… .தற்போது உலக அளவில் அதனை அங்கீகரிக்கவோ…. ஆதரிக்கவோ …… அதற்கு இருக்கும் ஒரே நாடு ரஷ்யா தான். அது கொடுக்கும் தைரியத்தில் தான் ஆனானப்பட்ட அமெரிக்காவையே சீண்டி பார்க்கிறது….பகடி செய்கிறது…. ஏளனம் பேசுகின்றனர்.

இது அமெரிக்காவிற்கு புரியாமல் இல்லை….. அதன் பொருட்டே அவர்கள் ரஷ்யாவை முடக்க காய் நகர்த்தினார்கள்… அப்படி தான் முதலில் இதில் ஜோபைடன் நிர்வாகம் களத்தில் இறங்கியது….. ஆனால் அது தற்போது அவர்களையே பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது. காரணம் ஜோபைடன் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்தது போலான உலக அரசியல் இல்லை.

இது நம் பக்கத்தில் சொல்வார்களே….. சும்மா கிடந்த சங்கை…..அது போன்ற கதையாகிவிட்டது தற்போது இருக்கும் அமெரிக்காவிற்கு……

ஏனெனில் இது தற்போது உள்ள ஜோபைடன் காலத்து அரசியல் இல்லை….. அதற்கு முன்னரும் இந்த பிரச்சினை இருந்தது….. அதனை அப்போது இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நுட்பமாக செயல் படுத்திக் கொண்டு இருந்தார்…. இந்திய பங்களிப்பை இந்த பிராந்தியத்தில் அதிகப்படுத்துவதே சிறந்தது என்பது அவரது வியூகம்.

இதனை தற்போது உள்ள ஜோபைடன் ரசிக்க வில்லை. சீனாவோ இந்திய ஆளுமையை இந்த பிராந்தியத்தில் ஏற்கவில்லை. அதனை கணித்து ரஷ்யாவை காய் அடிக்க தீர்மானித்தார் போலும் பைடன் தரப்பில்.

இதையெல்லாம் தாண்டி தான் அன்றே… தற்போதுள்ள இந்திய தலைமை வலுவான அடித்தளத்தை அமைத்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. தூங்கி கிடந்த குவாட் கூட்டமைப்பு தட்டி எழுப்பியது… ஒற்றை தேசமாக சீன ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை அல்ல… சுவரே எழுப்பியது.

இதற்கு ஆக சிறந்த உதாரணம் தான்…. காலங்காலமாக சொல்லி வந்த ஆசிய-பசபிக் கடல் பிராந்தியம் என்பதை இந்தோ-பசபிக் கடல் பிராந்தியம் என மாற்றீடு செய்து அழைக்கவும் செய்தது தான்.

ஆனால் ஜோபைடனின் கட்சியின் அரசியல் விளையாட்டு காரணமாக தற்போது இதனை வலுவிழக்கச் செய்தனர். ரஷ்ய அதிபரின் சீன விஜயத்தின் போது மீண்டும் அவர்கள் ஆசிய-பசபிக் என்றே இந்த பிராந்தியத்தை குறிப்பிட்டனர்……. அதாவது ரஷ்யாவின் தற்போதைய அரசியல் நகர்வை சொல்லாமல் சொன்னார்கள்.

குறித்து வைத்துக் கொண்டது நமது தேசம். அதன் பொருட்டே உக்ரைன் ரஷ்யா பிரச்சினையில் கருத்து எதனையும் சொல்லாமல் மவுனமாக இருந்தது. ஆனால் அரசியல் சதுரங்கத்தில் பேசாமல் இல்லை…..காய்களை வேக நகர்த்தி வந்தனர். அதாவது பிரான்ஸை உள்ளே நுழைந்து விட்டார்கள். அதற்கு தோதாக அவர்கள் வசம் தற்போதைய தலைமை வந்திருக்கிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைமை பதவி. இது சுழற்சி முறையில் வரும் பதவி. இந்த ஆண்டு இதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தலைவராக இருப்பார்.

இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரிடையாக சந்தித்து உக்ரைன் தொடர்பான விஷயங்களை கேட்டறிந்தார். இவரது கூற்றை…… வாதத்தை புடின் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை….. இங்கு உள்ள ஊடகங்கள் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட போது அமர்ந்து இருந்த நாற்காலி மேஜையின் தூரம் பற்றி சொன்னவர்கள் ……. பேச்சு வார்த்தை பற்றி வாயே திறக்கவில்லை.

இதனை தொடர்ந்து தான் இந்திய அரசு நிர்வாகம் உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகள் அங்கு இருந்து வெளியேறும் படி கேட்டுக் கொண்டது என்பதும் இவர்களுக்கு புரியவில்லை. ரஷ்யாவே இதனை எதிர்பார்க்கவில்லை.

அவர்களுக்கும் சேர்த்தே செக் வைத்து இருக்கிறார்கள் நம்மவர்கள். சாதுர்யமாக இவர்களின் காய் நகர்த்தலை இங்கு உள்ள யாருமே சிலாகிக்கவில்லை….. காரணம் இவர்களுக்கு அது புரியவில்லை.

இந்திய நகர்வுகளுக்கு பிறகே ரஷ்யா தனது படைகளை பயிற்சிகளை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்று காணொளி காட்சிகளை எல்லாம் வெளியிடப்பட்டது. ஆனால் அது பொய் என்று வாதிட்டனர் மேற்கு உலக நாடுகள். நேட்டோவோ தனது ராணுவ துருப்புக்களின் எண்ணிக்கையை இந்த பிராந்தியத்தில் அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

சரி…. என்ன தான் நடக்கிறது அங்கு…யார் சொல்வது நிஜம்….??????
யாருடைய கை ஓங்கி இருக்கிறது அங்கு?

சந்தேகமே இல்லாமல் மூக்கை உடைத்து கொண்டு இருக்கிறார்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோவை ஆதரிக்கும் மேற்கு உலக நாடுகள்.

குறைந்த பட்சம் உக்ரைனில் இவர்களே ஒரு போலியான தாக்குதல் ஒன்றை நடத்தியாவது ரஷ்யாவை காட்சிக்குள் கொண்டு வர பிரம்ம பிரயத்தனங்களை எல்லாம் இன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் அங்கு நிலவும் நிஜமான சூழல்.

பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு முன்பாக 15 ஆம் தேதி இவர்களாகவே உக்ரைனில் சைபர் தாக்குதல் எல்லாம் நடத்தினார்கள்……. ரஷ்யாவிடம் இவர்கள் பருப்பு வேகவில்லை. இதனை நம்பி ஏகப்பட்ட செலவு எல்லாம் செய்து விட்டு தற்போது அலை மோதிக் கொண்டு இருக்கிறார்கள் மேற்கு உலக வாசிகள்.

உக்ரைனோ பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது….. அங்கு உள்ள மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது மேற்கு உலக நாடுகளை சேர்ந்த சிலர் இந்தியாவை எப்படியாவது காட்சிக்குள் கொண்டு வர சதிவலை பின்னிக்கொண்டு இருக்கிறார்கள்… அதற்காக அவர்கள் கையில் எடுத்து இருப்பது தான் இந்தியா பங்கு பெற்று இருக்கும் குவாட் கூட்டமைப்பு.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இந்தியா தனது காஷ்மீர் பிரச்சினையில் குவாட் கூட்டமைப்பு கொண்டு வந்தது போல் இம்முறை நாங்கள் உக்ரைன் ரஷ்யா பிரச்சினையில் குவாட் கூட்டமைப்பை கொண்டு வருகிறோம் என்கிறார்கள். அவர்களின் அந்த வாதம் தவறானது….. ஆப்கானிஸ்தானில் நிலவிய தாலிபான்கள் ஆட்சி மாற்ற சமயத்தில் அமெரிக்கா ஏற்படுத்திய குழப்பத்தின் காரணமாகவே குவாட் கூட்டமைப்பை இந்தியா உள்ளே கொண்டு வந்ததே தவிர காஷ்மீர் பிரச்சினையில் இல்லை என்பது தான் நம்மவர்களின் வாதம்.

அப்படி என்றால் உக்ரைன் விஷயத்தில் இந்திய நிலைபாடு என்ன என்பதே அவர்களின் அடுத்த கேள்வியாக இருக்கிறது…..

அந்த கேள்விக்கு பதிலாக… நம்மவர்களின் சாதுர்யமாக செயல்பாடு தான் அவர்களை வாயடைக்க செய்து இருக்கிறது.

இது உக்ரைன் ரஷ்யா பிரச்சினை இல்லை….. உக்ரைனில் அவர்களின் ஆட்சியை எதிர்த்த டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள டொனட்ஸ் மற்றும் லுஹான்ஸ் பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினை… என்று சொல்லி அதன் ஆணி வேரை தொட்டு இருக்கிறார்கள்.

இந்த வாதத்தின் அடிப்படையில் அங்கு நேட்டோ அங்கத்துவ நாடுகளின் ராணுவத்தினருக்கு வேலை இல்லை…… அதுபோலவே டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள டொனட்ஸ் மற்றும் லுஹான்ஸ் ஆகிய நாடுகள், தங்களை தாங்களே சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட சமயத்தில் அதனை ரஷ்ய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்காத….ஏற்காத போது ரஷ்ய படைகளுக்கும் அங்கு வேலை இல்லை என்று சொல்லாமல் சொல்லி அதிரடித்திருக்கிறார்கள். இதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைமை பதவியில் உள்ள பிரான்ஸ் ஆரவாரமாக வரவேற்பு தெரிவித்து இருக்கிறது.

அதாவது உலகின் பார்வையில் இத்தனை நாளும் தெரிந்த உக்ரைன் ரஷ்யா மோதல் அதன் இறுதி கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இஃது மேற்கு உலக நாடுகளில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய வாதத்தின் அடிப்படையில் உக்ரைன் நேட்டோ அங்கத்துவ நாடாக இல்லாத போது அங்கு நிலை கொண்டு உள்ள நேட்டோ ராணுவ துருப்புக்களுக்கு என்ன வேலை…???? அவர்களுக்கு அங்கு செல்லும் அதிகாரத்தை கொடுத்தது யார் என்று கேள்வி கேட்டு இருப்பதாக எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுபோலவே உக்ரைனில் இருந்து பிரிந்ததாக தங்களுக்கு தாங்களே அறிவித்து கொண்ட டொன்பாஸ் பிராந்தியத்தை ரஷ்யா அங்கீகரிக்காத போது ரஷ்ய ராணுவ துருப்புக்களுக்கு அங்கு போக என்ன அவசியம் வந்தது…. யாருடைய அழைப்பின் பேரில் அவர்கள் அங்கு செல்ல இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டு இருப்பதாக இவர்கள் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு உடனடியாக ரஷ்யாவிடம் எதிர்வினை தெரிந்தது…… ரஷ்ய பாராளுமன்றத்தில் இந்த டொன்பாஸ் பிராந்தியத்தில் வரும் டொனட்ஸ் மற்றும் லுஹான்ஸ் ஆகிய பகுதிகளை தனித் தனி குடியரசு நாடுகளாக அங்கீகரிக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். அதாவது ரஷ்யா அங்கீகாரம் வழங்கும் தீர்மானத்தை கையில் எடுத்தது போல் இனி இதன் மீது ஐநா முடிவு எடுக்க வேண்டியது தான் பாக்கி.

தனி நாடாக அங்கீகரித்து….அவர்கள் ரஷ்யாவிடம் உதவி கோரினால்… அப்போது ரஷ்ய ராணுவ துருப்புக்கள் உள்ளே சென்றால்…. யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது.

ஒரு வேளை ஐநா அப்படி அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றால்….. நேட்டோ அங்கத்துவ நாடாக இல்லாத உக்ரைனில் அவர்களின் படைகளுக்கு அங்கு என்ன வேலை என்கிற ரீதியிலான கேள்வி வரும்.

ஒரு வேளை நேட்டோ அங்கத்துவ நாடுகளில் பட்டியலில் உக்ரைனை சேர்த்துக் கொண்டால் அதற்கு செலவு செய்து பாதுகாக்கும் அளவிற்கு போதுமான நிதி வசதி தற்போது உள்ள எந்த ஒரு மேற்கு உலக நாடுகளுக்கும் கிடையாது.
வேஷம் கலைந்து இத்தனை நாளும் நிழல் உருவமாக மறைந்து நின்று கொண்டு இருந்த அமெரிக்கா வெளியே வந்தால் உடனடியாக ரஷ்யா காரியத்தில் இறங்கும்.

அமெரிக்காவின் தெற்கில் உள்ள வெனின்சுலா மற்றும் சில தென்னமெரிக்க நாடுகளில் தனது முன்னாள் தளங்களில் ரஷ்யாவின் அதி நவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கொண்டு போய் நிலை நிறுத்தி விடும். க்யூபாவில் விளாடிமிர் புடின் தான் பதவிக்கு வந்த புதிதில் மூடிய ராணுவ தளங்களை….. மீண்டும் புதுப்பிக்க உத்தரவு கொடுத்து விடும்.

வேலியில் போறதை எடுத்து……கதை தான்.

ஆக மொத்தத்தில்….
இந்தியா இனி யார் பக்கம் என்கிற ரீதியிலான கேள்விகளே இல்லை…
உலக அரசியலில் இந்திய நிலைபாடு என்ன என்பதே இனி வரும் காலங்களில் உற்று நோக்கும் படியாக இருக்கும்.

இதற்கு அத்தாட்சியாக பலமிழந்த குவாட் கூட்டமைப்பிற்கு பதிலாக இந்தியா பிரான்ஸ் தலைமையிலான அமைப்பே இனி வரும் காலங்களில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கோலோச்ச இருக்கிறது. அது போலவே அந்த பக்கம் மத்திய தரைக்கடல் பகுதியில் பிரான்ஸ் இஸ்ரேல் இந்தியா கூட்டாக இணைந்து உருவாகும் அமைப்பே இனி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க இருக்கிறது. இதற்காகவே சவூதி அரேபியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் சவூதி மன்னரின் விருப்பத்தின் பேரில் இந்தியா வந்து நம் முப்படைகளின் தற்போதைய தளபதி திரு எம் எம் நரவானேவை வந்து சந்தித்து விட்டு சென்று இருக்கிறார்.

இன்னமும் இந்த ரஸவாத சேர்க்கைகள் முற்று பெறவில்லையே தவிர….அதனை நோக்கிய காரியங்கள் கன கச்சிதமாக வேக வேகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கான செலவினங்கள் மற்றும் நிதி ஆதாரங்களுக்கு தான் தற்போதைய இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நம் தேச பாதுகாப்பிற்கான ஆயுத தளவாடங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை காணப்பட்டுள்ளது. அப்படி தயாராகும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும்… வருவாய் ஈட்டவும் அட்டவணை தயார் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் அடுத்த ஆண்டு இறுதியில் வெகு நிச்சயமாக நம் வானில் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் பரிசோதனை பறத்தலை மேற்கொள்ளும் என்கிறார்கள். சரியாக சொன்னால் திட்டமிட்ட காலத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பறத்தலை நம் இந்திய தயாரிப்பு ஐந்தாம் தலைமுறை விமானங்கள் பறக்க இருக்கின்றன.

இவையனைத்தும் வெறும் சாம்பிள் மாத்திரமே…… என்பது தான் இதில் உள்ள ஹைலைட்டான விஷயம்.

உக்ரைனை தொட்டு அஸ்தமிக்க இருக்கும் உலக வல்லரசு ஆளுமை ….. இனி வரும் காலங்களில் உலக பொருளாதார பேரரசின் அங்கமாக…… அதில் கோலோச்சும் ஆளுமையாக….. அது பாரத தேசத்தில் உதிக்க இருக்கின்றது என்பது தான் இன்றுள்ள நிதர்சனமான உண்மை. அதற்காக சமிக்ஞைகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டது.

நம் அனைவருக்கும் அது குறித்து அவதானிப்பு மாத்திரமே தேவையாக இருக்கிறது. காரியங்கள் கன ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள சட்டதிட்டங்களே அதற்கு கட்டியம் கூற இருக்கின்றது.

வலுவான பாரதம் வெறும் ஏட்டளவில் இல்லை…. இனி அது செயலில்…..

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீ ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe