
இந்த தலைப்ப பார்த்த உடனே ஆஹா ஒன்றிய அரசைத் திட்டறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருச்சுன்னு யாராவது கிளம்பினீங்கன்னா… ஐயாம் சாரி ஜென்டில்மேன் விஷயமே வேற.
சமீபத்திலே மந்த்ராலயம் போயிருந்தேன். அப்ப நடந்த இரண்டு சம்பவங்கள். அத வச்சு நீங்களே முடிவு பண்ணுங்க இந்திய ரயில்வே எங்கே போகிறது
சம்பவம் 1.
மந்த்ராலயம் ஸ்டேஷன். ராத்திரி ட்ரெயினை மிஸ் பண்ணக்கூடாதுங்கற முன்ஜாக்கிரதைனால 3 மணி நேரம் முன்னாடியே ஸ்டேஷனுக்கு வந்துட்டோம். மனைவி இதுக்காகவே கையோடு கொண்டு வந்திருந்த விகடன், குமுதம், ராணி வகையறாக்களை படிக்க தொடங்கினாள். நானும் என் பங்குக்கு டார்லிங்க் டார்லிங்க் படத்திலே பாக்யராஜ் மாதிரி அங்கிருந்த ஹிந்தி ஸ்டேஷன் மாஸ்டரை ஒவ்வொரு சந்தேகமாக் கேட்டு வெறுப்பேத்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியா ட்ரையின் கரெக்ட் டயத்துக்கு வந்தது. கூட காத்துக்கொண்டிருந்த மற்றவர்களுடைய ட்ரெயின் ஏதோ டெக்னிகல் காரணங்களால 5 மணி நேரம் லேட்னு தெரிஞ்ச உடனே ஏதோ நம்பளே ட்ரெயின ஒட்டி கரெக்ட் டயத்துக்கு வந்த மாதிரி ஒரு அல்ப சந்தோஷம். (நம்ப டிஸைன் அப்படி). ட்ரைன்ல ஏறி வண்டி ஸ்பீட் எடுத்தது
“ என் போனை தாம்மா, சார்ஜ் போடட்டும். ”
“ போனா நீங்க எங்கிட்ட எப்ப தந்தேள் ?”
அவ்வளவுதான் பக்கென்றாகிவிட்டது.
“நீ புஸ்தகம் படிச்சிண்டிருக்கும் போது தந்து பைக்குள்ள போடச் சொன்னேனே ?”
அவ்வளவுதான் அந்த அரையிருட்டுல எல்லா பேக்கையும் த்வம்சம் பண்ணி ஒரு வழியா போனைப் பார்த்த உடன்தான் நிம்மதியாச்சு. ட்ரைன் இப்பல்லாம் சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்துருது. டைம் டேபிள்ல Cushion Time வச்சிருப்பான்னு நினைக்கிறேன். ஒரு வழியா பெங்களூர் ஸ்டேஷன்ல இறங்கி ப்ளாட்பார்ம் ஏறி இறங்கி அடுத்த கனெக்டிங் ட்ரெயின் பிடித்து பெங்களூர் K.S.R ஸ்டேஷனுக்கு கிளம்பியாச்சு. அதுவரை நாங்கள் வந்த ட்ரெயின் அங்கேயே சமத்தா நின்னுண்டு இருந்தது. K.S.R வந்து வெயிட்டிங்க் ரூம்ல குளிச்சிட்டு I.R.C.T.C கேன்டீன்ல குறைந்த விலையிலே நிறைந்த உணவு சாப்பிட்டு விட்டு நான் கிரிக்கெட் பார்க்கும்போது பொண்டாட்டி எதையோ அவசர அவசரமா தேடறது தெரிந்தது.
“என்னத்த தொலைச்ச ?”
“கண்ணாடிய காணலை!”
மறுபடியும் பகீர். நிறைய ஆப்ஷனோட வாங்கின விலை கூடுதல் கண்ணாடி.
“நல்லா தேடு!”
“எல்லாம் தேடியாச்சு எங்கேன்னு தெரியல!”
நானும் என் பங்குக்கு எல்லாவற்றையும் கலைத்தேன். கண்ணாடி கிடைக்கவில்லை.
“கடைசியா எங்க வச்சு போட்டுண்டே?”
“நேத்தைக்கு ராத்திரி மந்த்ராலயம் ஸ்டேஷன்ல புக் படிச்சேனே!”
“ஏறும்போது கீழே விழுந்துறுத்தோ?”
“இல்லையே நான் டப்பால போட்டுட்டு பேக்ல போட்டேன்”
“எந்த பேக்ல?”
“என்னோட ஹேன்ட் பேக்லதான்!”
அந்த பேக்கை எக்ஸ்ரே செய்யாத குறையாய் தேடியாச்சு. கண்ணாடி கிடைக்கவில்லை. பக்கத்துல இருந்தவா முகத்தில எல்லாம் நமுட்டுச் சிரிப்பு இருக்கறதா எனக்கு தோணித்து அவாளுக்கெல்லாம் எதுவும் தொலஞ்சு போகலைங்கறதனாலே வரக்கூடிய அல்ப சந்தோஷம். போகட்டும் அவா டிஸைன் அப்படி.
“கண்ணாடியை பேக்ல போடறதா நினைச்சு ஸ்டேஷன்லயே வச்சிட்டேன்னு நினைக்கறேன்!”
அவள் கண்களில் கண்ணீர் அடக்க முடியாமல் வெளியேற தொடங்கியது.
“இதுக்குதான் டூரே வேண்டாம்னு சொன்னேன். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. எல்லா டிக்கெட்டையும் கேன்ஸல் பண்ணுங்கோ.
நேரா ஆத்துக்கு போயிறலாம். எனக்கு மூடே சரியில்லை.”
பெங்களூரிலிருந்து கும்பகோணம் போயி ஆலங்குடி ராதா கல்யாணம் பார்த்துட்டு மறுபடியும் பெங்களூர் போயி மாமா பேரன் சீமந்தம் அட்டெண்ட் பண்றதா ப்ளான். இது எல்லாத்தையும் கேன்சல் பண்ணினாலும் பணம் நஷ்டம்தான்.
“சரி விடு. வாங்கி 2 வருஷம் ஆயாச்சே. உனக்கும் ப்ரேம் பிடிக்கலைன்னு சொன்னே. எப்படியும் மாத்தணும். இப்ப அதுக்கு வேளை வந்துருச்சுன்னு நினைச்சுப்போம்.”
ஆனா வங்கி 1 வருஷம் 1 மாசம்தான் ஆயிருந்தது. மனைவி ரொம்ப பிடிச்சு வாங்கனது. ஏதோ சமாதானப்படுத்தறதுக்காக சொன்னது. எனக்கும் மூட் ஆப்.
அவளை தனியா விட்டுட்டு டி.வி முன்னால போய் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். என்ன பண்ணலாம். எங்க தப்பு நடந்தது. அப்பதான் ப்ளாஷ் ஆச்சு. நாம நேத்தைக்கு வண்டில ஏறினோன்ன இருட்டுக்குள்ள மொபைல தேடி பேக்ல இருந்த எல்லாத்தையும் எடுத்து வெளில போட்டோமே அதுல போயிருக்குமோ ?. இருந்தாலும் தப்பை ஒத்துக்கொள்ள ஆண் வர்க்கத்தின் ஈகோ இடம் கொடுக்க வில்லை
“ஒரு வேளை நான் மொபைல தேடும் போது கண்டா கீழே போட்டுட்டேனா ?”
“தெரியலையே நீங்க மொபைல தேடும்போது நான் அப்பர் பர்த்லன்னா இருந்தேன்.”
ஒரு வழியாக எனக்கு சம்பவம் விளங்கிவிட்டது. கண்ணாடி டப்பாவோட எடுத்து ஸீட்ல வைத்திருக்கிறேன். மொபைல் கிடைத்தவுடன் திருப்பி வைக்க மறந்திருக்கிறேன். உல்லன் போர்வைக்குள்ள எங்கேயோ ஒளிஞ்சிண்டிருக்கு. இப்ப என்ன பண்ண. எப்படியும் ட்ரைன் அட்டெண்டர் பார்த்திருப்பான். அவன் அதை எடுத்திருந்தா கண்டிப்பா ஸ்டேஷன்ல கொடுத்திருப்பான். ஹசன் ஸ்டேஷனுக்கு போன் அடித்தேன். யாரும் எடுக்கவில்லை. பேட் லக்.
ட்விட்டர்ல வேணும்னா ரயில்வேக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் அனுப்பிரலாம்னு கூகிள்ல சர்ச் பண்ணினா ரயில் மதத்னு ஒரு வெப்சைட் இந்திய ரயில்வே 24 x 7இயக்குவது தெரிந்தது. அதில் லாகின் செய்து மொபைல் ஒ.டி.பி கொடுத்தவுடன் நீங்கள் கடைசியாக மந்த்ராலயத்திலிருந்து பெங்களூர் சென்றிருக்கிறீர்கள் அந்த பயணதில் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டது. அதில் உள்ள பிரச்சனைகளில் காணாமல் போன லக்கேஜ் என்று என்னுடைய விபரத்தை அடித்தேன். நேராக மனைவியிடம் சென்று அமர்ந்தேன்.
“ரயில்வேக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கிறேன். பார்க்கலாம் பெரிசா நம்பிக்கையில்லை. மயி__ க் கட்டி மலையை இழுக்கிற மாதிரிதான். கிடைச்சா யோகம். இல்லாட்டாலும் கவலைப்படாதே. ஊருக்கு போயிட்டு புதுசு வாங்கி தரேன். அதுக்காக டிக்கெட்லாம் கேன்சல் பண்ண வேண்டாம். ஆலங்குடி ராதா கல்யாணம்பார்க்கணும்னு ரொம்ப நாள்ஆசைப்பட்டு வந்திருக்கோம். அதை மிஸ் பண்ண வேண்டாம்.”
வேற வழியில்லாமல் இரண்டு பேரும் மனசே தேத்திண்டா கூட டூர் போகும் போது இப்படி நடந்தா அது என்ஜாய்மென்டை கண்டிப்பா பாதிக்கும்னு தெரிஞ்சது.
ஆனா கதைல அங்கதான் கடவுள் ட்விஸ்ட் வச்சார். (கடவுள் இருக்கான் குமாரு)
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது
“ஹம் ரேல் மதத் ஸே பாத் கர்த்தே ஹேன். ஆப் ஷரவண் ஜி ஹேன்”
ஏதோ அந்தக்காலத்திலே கத்துண்ட ஹிந்தியும் அடிக்கடி பார்க்கற அமீர்கான் படமும் கை கொடுத்ததால நம்ப கம்பெளெய்ண்ட்டுக்காக கூப்படறான்னு புரிஞ்சது. ஆனா நமக்குதான் திருப்பி ஹிந்தில பதில் சொல்லணும்னா மனசுக்குள் தமிழ்ல யோசிச்சு ஹிந்தில ட்ரான்ஸ்லேட் பண்ணி பேசணுமே
“ஐ டோன்ட் நோ ஹிந்தி. கேன் யு ஸ்பீக் இன் இங்க்லீஷ்.
அவன் கஷ்டம் அவனுக்கு. அவாளுக்கு இங்க்லீஷ் தெரிஞ்சுருத்துன்னா ஹிந்தி திணிப்புங்கற கோஷத்துக்கே விலையில்லாம போயிருமே.
“க்யா ஆப் அங்க்ரேஜி மேம் பாத் கர் சக்தே ஹேன்”
“அங்க்ரேஜி நஹி. ஆப் கா பாஷா க்யா ஹை”
“தமிழ்”
அடுத்த நிமிடம் ஒரு நபர் என்னிடம் தமிழில் பேசினார்
“சார். நான் ரயில் மததிலிருந்து பேசறேன்…உங்க பேர் சரவணனா?”
ஆமா சார்”
“ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கீங்களே என்ன விஷயம்?”
“என்னுடைய கண்ணாடி காணாமல் போயிருச்சு. ஆக்சுவலா நான் சீட்லயே மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”
“உங்க ட்ரைன் குண்டக்கல் ஸ்டேஷன் லிமிட்ல வருது. இன்னும் 5 நிமிஷத்துக்குள்ள உங்கள அங்கேர்ந்து கூப்பிடுவாங்க”
அடுத்து 5 நிமிஷத்துக்கள் குண்டக்கல் ரயில்வே போலீஸிலிருந்து கால்
“மே குண்டக்கல் ஆர்.பி.எப் ஸே இன்பெக்டர்_ பாத் கர் ரஹா ஹூம். க்யா ஆப் கம்ப்யெண்ட் ………”
மறுபடியும் ஹிந்தி.. மறுபடியும் இங்கிலிஷ் பேசச்சொன்னா மறுபடியும் தமிழில் ஒருவர் பேசினார்
“சார் நான் குண்டக்கல் ஆர்.பி.எப் ஸ்டேஷன்ல இருந்து பேசறேன்.
ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கிறீர்கள். என்ன விஷயம்?.”
“கண்ணாடி தொலைந்து விட்டது.”
“ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. உங்க ட்ரைன் எங்க போயிட்டிருக்குன்னு பார்க்கிறேன்…………….
உங்க ட்ரைன் ஹசன் ஸ்டேஷன் என்டர் ஆயிட்டிருக்கு. நான் மேட்டரை அவங்களுக்கு தெரிவிக்கிறேன். உங்கள் பொருள் கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.”
10 நிமிஷத்துக்குள் ரயில்வேயிலிருந்து இவ்வளவு ரெஸ்பான்ஸா. எதிர்பார்ப்பே இல்லாமல் நான் கொடுத்த கம்ப்ளெய்ன்ட்டின் மேல் நம்பிக்கை லேசாக துளிர் விட ஆரம்பித்தது.
அரைமணி நேரத்திற்குள் ஹசன் ஸ்டஷன் இன்ஸ்பெக்டர் என்னிடம் பேசினார். மீண்டும் ஹிந்தி, தமிழ் என்று போரடிக்காமல் விஷயத்திற்கு வருகிறேன்
“சார் உங்களுடைய பொருள் பத்திரமாக கிடைத்து விட்டது. நீங்கள் எங்கிருக்கிறீர்கள்.”
“மேடம் நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன். ஆனால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கும்பகோணத்திற்கு சென்று விடுவேன்.”
“அப்ப என்ன செய்யலாம்.”
“மேடம் நான் திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூர் கே.எஸ்.ஆர் ஸ்டேஷனுக்கு வருவேன்”
“அப்ப நான் ஒன்னு செய்யறேன் சார். உங்கள் பொருளை பெங்களூர் ஆர்.பி.எப் ஸ்டேஷனில் சேர்த்து விடுகிறேன். அங்கு நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வரும்போது வாங்கிக் கொள்ளுங்கள்.”
“சரி மேடம் ரொம்ப நன்றி”
எனக்கும் மனைவிக்கும் நம்பவே முடியவில்லை. இவ்வளவு விரைவாகவா. மீண்டும் மாலை 5 மணிக்கு ஒரு கால் பெங்களூர் கே.எஸ்.ஆர் ஸ்டேஷன் ஆர்.பி.எப் லிருந்து
“சார் உங்களுடைய ஐட்டம் வந்து விட்டது நீங்கள் எப்போது வருகிறீர்களை அப்போது உங்கள் ஐ.டி. கார்ட் காண்பித்து வாங்கிக் கொள்ளுங்கள். ”
ஞாயிறு காலை 4 மணிக்கு ஸ்டேஷனில் அந்த பார்சலை வாங்கி பிரித்து கண்ணாடியை பார்க்கும் வரை மனைவிக்கு நம்பிக்கை இல்லவே இல்லை.
இப்போ சொல்லுங்கள் எங்கே போகிறது இந்திய ரயில்வே?
சம்பவம் 2
இதே பயணத்தில் கும்பகோணத்திலிருந்து பெங்களூர் செல்லும்போது ஒரு கால் வந்தது.
“சார் நான் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து பேசுகிறேன்.”
“சொல்லுங்க மேடம்”
“நீங்க சமீபத்திலே புனே எக்ஸ்பிரஸ்ல மார்த்தாண்டத்திலிருந்து மந்த்ராலயம் போயிரூந்தீங்க இல்லையா?”
“ஆமா மேடம்.”
“கோச் க்ளீனிங்கெல்லாம் கரெக்டா பண்ணினாங்களா சார்?”
“ஆமா மேடம்”
“நீங்க கோச் க்ளீன் பண்ணதா கையெழுத்து போட்டு கொடுத்திருக்கீங்க. அதை கன்பர்ம் பண்ணதான் இந்த கால். தேங்க் யூ சார்.”
இந்த மேட்டரை நான் மறந்தே 5 நாளாச்சு. பெரிய பெரிய கம்பெனிகள், ஆஸ்பத்திரிகளில் பீட் பேக் குப்பைத் தொட்டிக்கு செல்வதைத்தான் பார்த்திருக்கிறேன். இரயில்வே பீட் பேக் உண்மைதானா என்பதை கால் செய்து கன்பர்ம் வேறு செய்கிறார்கள்.
இப்ப சொல்லுங்க எங்கே போகிறது இந்தியன் இரயில்வே
இந்திய இரயில்வே உலகத்தரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய உதாரணங்கள்தான் இவை. இதையெல்லாம் கண்கூடாக பார்த்த பிறகும் சீனியர் சிட்டிசன்களுக்கு லோயர் பர்த் கொடுக்கவில்லை என்று நாம் நொள்ளை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்களும் எத்தனையோ முறை விளக்கம் கொடுத்தாகி விட்டது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதுதான் தார்மீக ரீதியில் சரியானது. ட்ரையின் நீளத்தையும், வெயிட்டையும் பேலன்ஸ் செய்வதற்காக ஒரே கோச்சில் அலாட்மென்ட் செய்யாமல் செய்யப்படுகிறது. கண்டிப்பாக லோயர் பர்த் இல்லாவிட்டால் பயணிக்க முடியாதவர்களுக்கென்று லோயர் பர்த் கிடைக்காவிட்டால் புக் பண்ண வேண்டாம் என்ற ஆப்ஷன் இருக்கிறது. அதை யூஸ் பண்ணவும்.
பின் குறிப்பு
ரயில் மதத் சேவையை ட்ரையின் கழிவறை சுத்தம், ஊழியர்களின் நடத்தை, ஆக்கிரமிப்பு, உணவு, தண்ணீர், போதை ஆசாமிகள் தொல்லை போன்ற அனைத்து கம்ப்ளெய்ன்டுக்கும் பயன்படுத்தலாம்
- Saravanan Seetharaman