spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம்., அனைத்தையும் போக்கும் ஷட்திலா ஏகாதசி!

பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம்., அனைத்தையும் போக்கும் ஷட்திலா ஏகாதசி!

- Advertisement -

காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப் பற்றி, சிவ பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக்கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

மாசி மாத தேய்பிறை ஏகாதசி “ஷட்திலா” என்று அழைக்கப்படுகிறது. இன்று பசியால் வாடுபவர்களுக்கு அன்னதானம் செய்தால், நமக்கு அடுத்து வரும் சந்ததியினரும் வறுமை, பசி என்னும் நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.

மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் “ஷட்திலா” என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

வாழ்வில் விரக்தி நிலையை நீக்கும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற மாசி மாத ஏகாதசி வழிபாடு உதவும்.

ஒருசமயம் தாலப்ய ரக்ஷி புலஸ்திய முனிவரிடம், முனிசிரேஷ்டரே! பூமியில் மக்கள் அறியாமையின் காரணமாக கொலை, கொள்ளை, அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், போன்ற மகாபாபமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பின்னர் அதனை எண்ணி சிலர் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நரகத்திலிருந்து மீள வழி இருக்கிறதா என்று வினவினார். பிரம்மஹத்தி, பசுவைக் கொன்ற பாவம் அடுத்தவர் பொருட்களைத் திருடிய பாவம் போன்றவை தீர என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து சொல்லுங்கள்!” என வேண்டினார்.

புலஸ்தியர் பதில் சொல்லத் தொடங்கினார்: ”தால்ப்யரே! மாசி மாத ஆரம்பத்தில், பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி கைகளில் ஏந்த வேண்டும். அதனுடன் எள் மற்றும் பருத்திக்கொட்டை ஆகிய வற்றைச் சேர்த்து, தூய்மையான ஓர் இடத்தில் (வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அல்லது மாட்டுக் கொட்டகையில் ஒரு பக்கமாக) வைக்க வேண்டும்.

அந்தக் கலவை, பௌர்ணமி வரை காயாமல் ஈரப் பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத்தும் விலகும்!” என்ற புலஸ்தியர், ஷட்திலா ஏகாதசி பூஜை முறையைப் பற்றியும் கூறினார்.

பூசணிக்காய், தேங்காய், கொய்யாப் பழம், கொட்டைப் பாக்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் ஸ்வாமியை பூஜை செய்ய வேண்டும். வேத வல்லுநர் ஒருவரை மகா விஷ்ணுவாக பாவித்து, அவருக்குத் தண்ணீர்ச் சொம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், கறுப்புப் பசு ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வேண்டும்.

எள்ளை அரைத்து உடலில் பூசிக் கொள்வது, அரைத்த அதே எள்ளுடன் நீராடுவது, எள்ளை தானமாகக் கொடுப்பது, எள்ளை வைத்து ஹோமம் செய்வது, எள்ளையும் நீரையும் சேர்த்து தானமாகக் கொடுப்பது, எள் கலந்த உணவை உண்பது என ஆறு வகையாக எள்ளை உபயோகிப்பதால், இது ‘ஷட் திலா’ எனப்படுகிறது. இந்த பூஜையை முறைப்படி செய்தால், நீங்கள் சொன்ன பாவங்கள் எல்லாம் விலகும்!” என்றார் புலஸ்தியர்.

தில ஹோமம் என்பது கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி அடையவும் செய்யப்படுகிறது.

இறந்தபின் ப்ரேதத்தை எரித்து அதன் அஸதியை கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்து விட வேண்டும் என்கிறது வேதம். எந்த ஒரு ப்ரேதத்திற்க்கு சரியான முறையில் அந்திம கிரியை எனும் ப்ரேத ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்யப்படவில்லையோ அந்த ஆன்மா அஸ்தி எனும் எலும்பை சுற்றி வரும்.

விபத்துகளில் மரணம் நேரும்போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய தகுதியற்ற நிலையே அடைந்துவிடுவதால் அந்த பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை.

அந்தகைய ஆன்மாக்கள் அந்த அஸ்தி கிடக்கும் இடத்தையே ஆவிகளாக சுற்றிவருகின்றன. மரித்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்களும் (நியமனங்களை கடைபிடிக்காததால் ஏற்பட்ட) தோஷத்துடன் இருத்தல், ஆக்ஸிடென்ட் போன்ற செயற்கை மரணத்தால் மரித்தவர்களுக்கு கர்மாக்களால் (தக்க பரிஹாரம் செய்யாததால்) த்ருப்தி ஏற்படாமல் பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல், வருஷா வருஷம் முறையாக ச்ராத்தம் செய்யாமல் இருத்தல், செய்யும் ச்ராத்தத்தை முறை தவறி செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும்.

சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது.

எனவே சனீஸ்வர பகவானின் தான்யமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள்.

மேலும் எள்ளை மகாவிஷ்னுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது நமது வேதம்.

ப்ரேதத்தின் கடைசி நிலை அஸ்தி எனும் எலும்பாகும். எலும்பின் காரகர் சனைஸ்வர பகவானாவார். எலும்பில் இருக்கும் சுண்ணாம்பு சத்து எனும் கால்ஷியத்திற்கும் காரகர் சனைஸ்வர பகவானாவார்.

எள்ளில் 95% கால்ஷியம் நிறைந்திருப்பதாக அறிவியல் கூறுகிறது. எள்ளின் காரகரும் சனைஸ்வர பகவானாவர். எனவே ப்ரேத சம்ஸ்காரம் செய்து அஸ்தி விஸர்ஜனம் செய்ய இயலாமல் போகும்போது தில ஹோமம் செய்வது அந்த தோஷத்தை போக்குகிறது.

thirupathi 1

பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம்.

இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும். மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மரித்தவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதிமையில் ப்ரேத ஸ்வரூபியாக “ஆயாது பிதர:” என கூறி ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்ய கூடாது.

ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்க பட்டினம் போன்ற புண்ணிய க்ஷேத்ரங்களில் பஜனை மடம் போன்ற பொதுவான இடங்களில் செய்யவேண்டும்.

ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு ப்ரதிமைகளை ஸமுத்ரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும்,

இதனால் பித்ரு தோஷம் விலகி, காலத்தில் குழந்தைகள் பிறந்து, தீர்காயுஸ்ஸுடன் வாழ்வார்கள்.

ஜோதிட ரீதியாக பித்ரு தோஷத்தை சூரியன் மற்றும் சந்திரனோடு ராகு கேது சேர்க்கை, 1-5-9 ஆகிய வீடுகளில் ராகு மற்றும் கேது நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை குறிக்கும்.

ஜெனன ஜாதகத்திலோ அல்லது ப்ரசன்ன ஜாதகத்திலோ மாந்தி இருக்கும் நிலையை வைத்து ப்ரேத தோஷத்தை அறியமுடியும். மேலும் மாந்தி எந்த கிரகத்தோடு சேர்க்கை பெற்றிருக்கிறதோ அந்த கிரக சம்மந்த உறவினால் ப்ரேத தோஷம் ஏற்பட்டிருப்பதை அறியமுடியும்.

ஜன்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்ர காரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை – பார்வை – இருந்தாலோ குழந்தை பாக்யம் இருக்காது. அல்லது குழந்தைகள் தங்காது, இது பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமம் செய்வது சிறந்ததாகும்.

பெண் ஒருத்தி மோட்ச லோகம் செல்லும் வரம் பெற்றாள். அதுவும் அவளின் உடலோடு. ஐம்பூதங்களாலான இந்த மனித உடலோடு மோட்ச லோகத்துக்குச் செல்ல எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும். அங்கு அத்தனை வசதிகளும் இருந்தன.

தங்குவதற்குப் பெரிய அரண்மனை, பணி செய்ய சேவகர்கள். தங்கமும் வைரமும் அங்கே கொட்டிக் கிடந்தன. ஆனாலும் அவளுக்கு ஒரு பெரும் குறை, அவள் பசியார உணவு ஏதும் அங்கில்லை. பசியால் வாட ஆரம்பித்தாள்.

பூலோகத்தில் வாழ்ந்தபோது, தான் செய்த அத்தனை தான தருமங்களை நினைத்துப் பார்த்தாள். மேற்கொண்ட விரதங்களை நினைத்துக்கொண்டாள். அத்தனை நியமங்களைக் கடைப்பிடித்தும்தான் இன்று இப்படி சொர்க்கத்தில் அல்லல்படுவது ஏன் என்று திகைத்தாள். அப்போது ஶ்ரீமன் நாராயணன் ஒரு துறவியின் வேடம் கொண்டு அங்கே வந்தார்.

உடனே அந்தப் பெண் அந்தத் துறவியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அவரும் அவளுக்கு ஆசீர்வாதம் செய்தார். துறவியிடம் தனது துயரத்தைத் தெரிவித்தாள்.

“ஐயா, மண்ணுலகில் நான் வாழ்ந்த நாள்களில் அனைத்து விரதத்தையும் கடைப்பிடித்தேன். பொன்னையும் மணியையும் தானமென எல்லோருக்கும் வழங்கினேன். அந்தப் புண்ணிய பலனாலேயே இந்தச் சொர்க்க வாழ்வில் புகுந்தேன் என்று இறுமாந்திருந்தேன். ஆனால் இது பெருமை அல்ல… சாபம் என்று அறியாமல் இருந்துவிட்டேன்.

இங்கு எனக்கு எல்லா வசதிகளும் இருந்தும் உண்ண உணவென்பது இல்லை. நான் இந்த உடலோடு இங்கு வரப் பெற்றிருக்கும் வாழ்வென்பது சாபம்தானா… எனக்கு ஏன் இந்தக் கீழ்நிலை..? தாங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்”

மாய வேடதாரியான நாராயணனோ புன்னகையோடு அவளைப் பார்த்தார்.

“பெண்ணே, உன் தர்மத்தின் பலனாகவும் விரத மகிமையினாலுமே மனித வாழ்வில் பெறற்கரிய பெரும்பேறு பெற்றாய். எனவே, இதைச் சாபம் எனக் கொள்ளலாகாது. ஆனால், நீ செய்ய மறந்த ஒரு தானமே உன்னை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.

மண்ணுலகில் மிகப் பெரிய பிணி, பசிப்பிணி. பிறந்த கணத்திலிருந்து இறக்கும் கணம் வரைக்கும் பசிப்பிணி பீடித்தேயிருக்கும். எந்த வசதியும் ஆடம்பரமும் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம்.

ஆனால், பசிக்கு உணவில்லாமல் வாழ இயலாது. எனவேதான் பிறவிகளில் உயர் பிறப்பான மானுடப் பிறப்பில் பசிப்பிணி நீக்குதலையே தலையாய தர்மமாக வேதங்கள் வகுத்துள்ளன.

அன்னதாதா சுகிபவா என்னும் பெரும்பொருளை நீ அறியவில்லை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே… நீ எத்தனை தானம் செய்த போதும், போதும் என்று சொல்லாது மனித மனம். அதுவே, அன்னதானம் என்றால் ஓர் அளவுக்கு மேல் கொள்ளவும் முடியாது. எனவே எல்லோராலும் எல்லோருக்கும் நிறைவாக தானம் செய்யமுடியும் என்றால் அது அன்னதானமே.

நீ அத்தகைய அன்னதானத்தைச் செய்யாது விட்டாய். இத்தனைக்கும் உனக்கு அதன் மகிமையை உணர்த்த ஒரு துறவி உன் இல்லம் தேடிவந்தார். நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.

துறவியின் பேச்சைக் கேட்டு வருத்தமுற்றவளாகிய அந்தப் பெண்

“ஆம். அன்றைய நாளில் என் இல்லம் தேடி அந்தத் துறவி வந்தார். தானம் கேட்டு வந்தவருக்கு நான் பிறபொருள்களை தானம் தர முன்வந்தும் வேண்டாம் என்று சொல்லி அன்னம் வேண்டி நின்றார். அன்று அதுவரை நான் சமையல் ஏதும் செய்திருக்கவில்லை. அதனால் உண்டான ஆத்திரத்தில் மண்ணைத் திரட்டி அவரின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டேன்” என்றாள்.

துறவியோ, “சரியாகச் சொன்னாய். நீ இட்ட மண்தான் இந்த மாளிகையாக மாறியிருக்கிறது. ஆனால், அவர் கேட்ட பசி தீர்க்கும் உணவு இங்கு இல்லை.”அந்தப் பெண் தன் தவற்றை உணர்ந்து வருந்தினாள்.

இந்தப் பாவத்திலிருந்து தப்பிக்க வழி உண்டா என்று கேட்டாள்.நல்லவளும் உத்தமியுமான அந்தப் பெண்ணின் பாவத்தைப் பொறுத்தருளிய பெருமாள், அவளுக்கு அருள் செய்ய தீர்மானித்தார்.`

பெண்ணே, மண்ணுலகில் பாவம் தீர்க்கும் விரதம், ஏகாதசி விரதம். அதில் ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு பலன் தரும். குறிப்பாக மாசிமாதம் தேய்பிறையில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க சகல பாவங்களும் நீங்கும்.

அன்றைய திதியில் விரதமிருந்து அன்னதானம் செய்ய அன்னத்துக்குக் குறைவே வராது. பசிப்பிணி போக்கும் அருமருந்து ஷட்திலா ஏகாதசி.

உன்னைப் பற்றித் தகவல்கள் கேட்டு உன்னை தரிசிக்க தேவலோகத்திலிருந்து பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நீ அவர்களிடம் எப்படியாவது அவர்கள் மேற்கொண்ட ஷட்திலா ஏகாதசி விரத பலன்களைக் கேட்டுப் பெற்றால் இந்தப் பிணி நீங்கப் பெறுவாய்” என்று சொல்லி மறைந்தார்.

வந்து வழிகாட்டியவர் அந்த நாரணனே என்பதை அறிந்த அந்தப் பெண், தேவலோகப் பெண்கள் வருமுன் சென்று அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.

அவர்கள் வந்து இவள் தரிசனம் வேண்டினர். தனக்கு ஒருநாள் ஷட்திலா ஏகாதசி விரதபலனைத் தந்தால் நான் தரிசனம் தருகிறேன்’ என்று சொன்னாள். வேறு வழியின்றி அவர்களும் ஒத்துக்கொள்ள அவள் அந்தப் புண்ணிய பலனைப் பெற்றுத் தன் பசிப்பிணி போக்கிக்கொண்டாள்.

ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைவரும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்

சனிப்பிர தோஷம் போல பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்கள் அன்று வரும் ஏகாதசியும் முக்கியத்துவம் பெற்றது.

ஏகாதசி அன்று கடவுளை வழிபட சிறப்பான பூஜைகளை மேற்கொள்வது நல்லது. ஆனாலும் இயலாதவர்கள் ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பதால், உடல் சோர்வை அதிகரித்துக்கொள்ளாமல் வீட்டிலேயே இறைவனை தியானித்து, விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றை படிக்கலாம்.

உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக கொண்டு, பரமாத்மாவை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe