spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: நாமம் நல்ல நாமம்!

ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: நாமம் நல்ல நாமம்!

- Advertisement -

நாராயணரின் தசாவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாராயணர் எடுத்த அவதாரமே ராம அவதாரம். பெற்றோர் பேச்சை மீறக் கூடாது, உடன் பிறந்தோரிடம் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிரையும் உறவாக நினைக்க வேண்டும், பகைவனிடமும் பரிவு காட்ட வேண்டும் என்னும் தர்ம நெறிகளை பின்பற்றி வாழ்ந்து காட்டிய அவதாரமே ராம அவதாரம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் நடையில் நின்றுயர் நாயகன் என ராமனை போற்றுகிறார். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்பது தர்மத்தின் வழிக்கு கிடைத்த பாராட்டு பட்டம்.மனிதனாக வாழ்ந்த அவதாரம் ஆனதால் அவரது நாமமே இன்று நற்பலன்களைத் தருகிறது.

கலியுகத்தில் மானுடம் கடைத்தேற சொல்லப்பட்ட எளிய தர்மம் நாம ஜெபம்.

ஒரே நாமத்தை திரும்பத் திரும்ப சொல்வதால் மந்திர ஆற்றல் அதிகரித்து நன்மையளிக்கும்.

ஒலிக்கு அதிர்வலை உண்டு. அது நேர்மறையாக இருக்கும் போது நேர்மறை ஆற்றலை தருகிறது. நமது அகமும் புறமும் ஆற்றலைத் தந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நாமங்களில் மிக சக்தி வாய்ந்த நாமம் ராம நாமம்.

இந்த நாமம் காட்டில் திருடனாக இருந்தவரை காவியம் பாட வைத்தது – வால்மீகி

வைகுந்த பதவியே வலிய வந்தாலும் ஏற்காமல் ராம தரிசனமே போதும் என்று சொல்ல வைத்தது – அனுமன்

காவிரிக்கரையில் அமர்ந்து கொண்டு பக்திப் பெருக்கான கீர்த்தனைகளில் திளைக்க வைத்தது – தியாகப் பிரம்மம்

இன்னும் பல ஆயிரம் உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த மந்திரத்திற்கு தாரக மந்திரம் என்று பெயர்.

‘மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன்’ என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்.’

இது வாலி ராம நாமத்தைப் பற்றி சொல்லுவதாக கம்பர் தந்த பாடல். நண்பர்கள் பாராட்டுவதில் என்ன சிறப்பு? பகைவன் பாராட்டும்படி வாழ்வதல்லவா சிறப்பு. இங்கு பகைவனே பக்தன் ஆகி பாராட்டி சொன்ன வரிகளே அதற்கு சாட்சி.

தாரக மந்திரம் என்றால் பிறவிகளை தாண்டச் செய்யும் சிறப்பு பெட்ரா மந்திரம் என்று பொருள். யோக நிலையைக் கூட சுலபத்தில் பெற இந்த நாமம் உதவும். ரா என்ற மூலாதாரத்தில் தொடங்கி மா என்ற தலை உச்சியில் உள்ள ஆயிரம் இதழ் தாமரை (சகஸ்ராரம்) வரை குண்டலி சக்தியை எழுப்ப பெரும் துணை செய்யும்.

ஸ்ரீராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட ஹனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ஸ்ரீராம நாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற ஹனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்த போது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல ஹனுமனுக்கு உதவியது
ஸ்ரீராம நாமம்தான்.

அவ்வளவு ஏன், ஸ்ரீராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும் பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்

இந்த நாமத்தை மூன்று முறை சொல்ல விஷ்ணு சகஸ்ரநாமம் படித்த பலன் கிடைக்கும். ரா என்ற எழுத்து 2 என்ற எண்ணிக்கையையும், மா என்ற எழுத்து 5 என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். ராமா – 2 X 5 = 10, ஒரு முறை ராமா என்ற நாமம் சொல்ல 10. ராமா, ராமா, ராமா – 10 X 10 X 10 = 1000. எனவே சகஸ்ர நாம அர்ச்சனை செய்த பலன் மூன்று முறை ராம நாமம் சொல்வதால் வரும்.

ராமனை பற்றி எழுதும் போது ஒரு ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடப்படுவது உண்டு. அது நீலகண்டனால் உமையம்மைக்கு எடுத்துரைக் கப்பட்டதாகும். அதை உச்சாடனம் செய்வதால் ஜெயமேற்படும், மங்களம் உண்டாகும், பிறவி பயனைப் பெறலாம், வாழ்வில் நன்மை பயக்கும், அதுதான் ராம மந்திரம்.

அழகிய முகமுடைய பர்வதராஜ புத்திரி! யாம் எப்போதும் ராம, ராம, ராம என்ற புண்ணியமிக்க மந்திரத்தை மனனம் புரிவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்று கேட்பாயானால் அப்படி ஜபிப்பதால் மாதவனின் ஆயிரம் பெயர்களையும் முறையாகச் சொல்வதற்குச் சமமாகும்! என்றுரைக்கிறார் கைலைநாதர், இதிலிருந்தே அந்த ராம மந்திரத்தின் மகிமையை உணரலாம்.

அந்த மந்திரம்

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

இதன் பொருள்:

ராம, ராம = ராம,
ராமேதி = இந்த ராம எனும் பெயர்,
ரமே = மகிழ்ச்சியடைகிறேன்,
ராமே =பெயரைத் தியானிப்பதில், மனோரமே = ஆழ்நிலை தியானத்தில் மன நிறைவு தருகிற,
சகஸ்ரநாம = விஷ்ணுவின் 1000 பெயர்களை,
தத்துல்யம் = சொல்வதற்கு ஈடாகும்.
ராம நாம = பவித்திரமான ராமசந்திர மூர்த்தியின் ராம எனும் பெயர்,
வர = அழகிய,
ஆனனே = முகம், கொண்டவனே.

இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது கீழ் வரும் சம்பவம்:

பிரம்மாஸ்திரத்தை வீழ்த்திய ராம நாமம்.

ஒரு மரத்துக்குப்பல கிளைகள் பரந்து விரிந்து இருப்பது போல் இதிகாசப் புராணங்களிலும் அதன் கதாபாத்திரங்களைப் பற்றிய மேல் விவரங்களும், கிளைக் கதைகளும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

ராமபக்த அனுமன் சம்பந்தமுடைய பல சுவாரசியமான நிகழ்வுகள் விவரிக்கப்படுவதையும் படிக்கலாம். சுயநலமற்ற செயல்களால் தன் தானை தலைவன் ராம ச்சந்திர மூர்த்தியாலேயே சிரஞ்சீவியாகத் திகழ வரம் பெற்றவர்.

திரேதா யுகத்தில் ராம நாமம் ஜபித்தவாறு ராமனுக்குத் தாசனாய் இருந்தவர். துவாபரயுகத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுடனிருந்து அதே பாக்கியத்தைப் பெற்றவர்; கலியுகத்திலும் ராமகாதை பிரவசனம் செய்யுமிடத்திலும், ராமநாமம் கேட்குமிடமெல்லாம் ராமனை நேரில் தரிசிக்க முயற்சித்துச் சுற்றிச் சுற்றி வருகிறார்.

அப்படி பட்ட மாருதிராயனை ஒருமுறை சோதிக்க எண்ணினார் மூவுலகைச் சுற்றும் விசேஷ தேவதூதர் நாரதமுனி.

இலங்கை யுத்தம் முடிந்து அயோத்தி நகர் திரும்பிய ராமர், வெற்றி விழா மற்றும் பட்டா பிஷேகக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு அரச சபையில் ரிஷி, முனிவர்கள் கூடியிருந்தனர். நாராயணா, நாராயணா என்ற கோஷத்துடன் நாரதரும் வந்து சேர்ந்தார்.

அனைத்து மகான்களையும் வணங்கியவரின் பார்வை, பவ்யமாக அங்கு நின்றிருந்த ஆஞ்சநேயரின் மீது விழுந்தது. குறும்புச் சிரிப்புடன் நெருங்கியவர், அஞ்சனை மைந்தா, போர்க்களத்தில் தசரதராமனுக்கு நீ ஆற்றியப் பணி மிகச் சிறப்பானது, இதோ இங்கே குழுமியிருக்கும் மகான்களிடம் ஆசி பெற்றுக் கொண்டாயா, இல்லையா? என்று வினவி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தார்.

அதற்குத் தான் காத்திருக்கிறேன் தாங்களும் வந்து சேர்ந்துவிட்டீர், தேவ ரிஷி! இதோ போகிறேன் என நகரலானான் அனுமன்.

கொஞ்சம் பொறு, ஆஞ்சநேயா! அவசரப் படாமல் நான் சொல்வதைக் கவனமுடன் கேட்டு விட்டுச் செல்! என்றவர் மேலும் கூறலானார். அனைவரையும் வணங்கி ஆசி பெற்றுக் கொள், ஆனால் ஒருவரை மட்டும் நீ தவிர்க்க வேண்டும். அதோ வலப்புறம் தனியாக அமர்ந்திருக்கும் ராஜரிஷி விஸ்வாமித்திரரை மறந்து விடாதே! என்றார்.

முனிவரே! இதென்ன தர்ம சங்கடம், இது அபசாரமில்லையா? என் பிரபுவின் குருநாதர் அல்லவா அவர்? பிரபு என்ன நினைப்பார்? எனத் திகைப்புடன் கேட்டான்.

கவலைப்படாதே! நான் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. அவருக்குரிய ராஜ மரியாதையைப் பிறகு அளிக்கலாம். முதலில் மற்றவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்! எனக் கூறி அவனை அனுப்பி வைத்தார்.

அனுமனும் அவ்வாறே செய்து முடித்தான். விஸ்வாமித்திரர் சிறிதும் சலனப்படவில்லை. ஆனால் அவர் தனிமையில் இருக்கையில் நாரதர் அவரிடம் அனுமனின் அடாத நடவடிக்கையை எடுத்துக் கூறி மகரிஷிக்கு சினமேற்பட வைத்து, நன்றாகச் சிண்டு முடியும் வேலையையும் கனகச்சிதமாகச் செய்து விட்டார்.

ராமனிடம் இதைச் சொன்ன ரிஷி, ஆஞ்சநேயருக்குத் தகுந்த படிப்பினை வழங்க உத்தர விட்டார். தர்மம், நீதியை நிலை நாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்ட ராமன், தன் குருவுக்கு நேர்ந்த மரியாதைக் குறைவுக்கு மரண தண்டனையே ஏற்றது என தீர்மானித்து, அனுமனை அம்பெய்து கொல்ல ஆணையிட்டான்.

சற்றும் சிந்திக்காமல் தான் நடந்து கொண்டு விட்டதை எண்ணி வருத்தமுற்ற ஆஞ்சநேயர், ராமச் சந்திர பிரபுவின் பாதங்களைச் சரணடைவதே உகந்தது என்று கருதி ராம, ராம, ராம எனத் தியானிக்க தொடங்கினார்.

அந்த தெய்வீக ஒலி எங்கும் வியாபித்தது. வில்லாளிகளின் கூரிய கணைகள் அனுமனுக்குத் தீங்கொன்றும் இழைக்க முடியாமல் மழுங்கி வீழ்ந்தன! முடிவில் தாசனுக்குத் தானே தண்டனை வழங்க முன் வந்தார் ராமன்.

முன்னாளில் வாலியைக் கொன்ற அவரது அம்புகள் இப்போது மாருதியின் முன் செயலிழந்து போயின. ராமன் சற்று திகைத்துதான் போனார். ஒரு முடிவுக்கு வந்தவர் குரு விஸ்வாமித்ரரின் அனுமதி பெற்று பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தார்.

அனுமன் உச்சரித்த ராமநாம மந்திர ஒலி அதிர்வலைகளுக்கு முன், பயங்கர அழிவை உண்டாக்கும் அந்த அஸ்திரம் கட்டுண்டு நின்று அதில் அமிழ்ந்தும் போயிற்று!

பிரம்மாஸ்திரத்தை வலுவிழக்க வைக்கும் பிரம்மசீர்ஷ அஸ்திரம், அதையும் முறியடிக்கும் பிரம்மாண்ட அஸ்திரம் ஆகியவற்றுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்பது நிதரிசனமாக புரிந்து விட்டது.

ராம் என்ற மந்திர ஒலி அதிர்வுகள் அனுமனை அரண்போல் காத்து நின்றன என்பதே உண் மை, நமக்கு இப்படிப்பட்ட ஒரு தாசனா என்று நெகிழ்ந்து விட்ட ராமன் அனுமனை ஆரத்தழுவிக் கொண்டார். தன்னை வணங்கிய ஆஞ்சநேயருக்கு மனமுவந்து ஆசி வழங்கினார். கவுசிகர்.

இதுவரை குழந்தையை கிள்ளி வேடிக்கை பார்த்த நாரதர் முனி, இப்போது தொட்டிலை ஆட்டிச் சமாதானம் செய்யும் நோக்கில் ராஜ ரிஷியை அணுகித் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

நாரதரே! கலகமூட்டி நன்மை செய்து வைத்ததில் உமக்கு இப்போது திருப்தி தானே? ராமநாம மந்திரத்தின் மகிமையை அனைவருக்கும் புரியவைத்து விட்டீர், அல்லவா? என்று புகழ்ந்துரைத்தார் ராஜரிஷி. எல்லாம் அந்தக் கேசவன் செயல், நம் கையில் என்ன இருக்கிறது? நாராயண, நாராயண! என்றவாறு விண்வெளியில் ஏகினார் நாரதர்.

ராம என்ற சொல் புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்கு சமமானது..

ஒருமுறை சொன்னாலே கோடி கோடி நன்மை தரும் ராம நாமத்தை சொல்லுங்கள். எளிதாக எல்லா நன்மைகளும் பெறும் வழி அதுவே.

ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.
கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.

கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா. பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.

பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.

ராம நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து. நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும்.

பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம். நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.

நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.

நாமம் தாய்-தந்தை போன்றது.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.

சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை, ஸ்வதர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால்தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.

நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும். காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.

நாமம் சொன்னால் பகவானே வந்துவிடுவார்
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.

நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.

நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.

நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.
நாமத்தை பரபிரும்மாக நினைப்பவன், பரபிரும்மாகவே ஆகிவிடுவான்.

இதை எழுதும்போது நற்பலன் கிடைக்கும். ஸ்ரீராம ஜெயம் என்று சேர்த்துத்தான் எழுத வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்றும் பின்னர் ராம ராம ராம என்றும் எழுதக் கூடாது. ஸ்ரீராமர் போரில் வெற்றி பெற்ற தகவலை சீதைக்கு சொல்ல அனுமனால் உச்சரிக்கப்பட்ட நாமா இந்த ஸ்ரீராம ஜெயம் என்பது. அதை பிரித்து பிரித்து எழுதினால் பொருள் தராது. சேர்த்து எழுதுவதே சிறப்பு. எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் சொல்லுவதற்கு தகுதி படைத்த நாமம் இது. சொன்னாலும், கேட்டாலும் பலன் உண்டு. வாயார சொல்லி, மனமார நினைத்து செவி குளிர கேட்டு இன்புறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe