சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும்.
ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள்.
புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும்.
தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். “இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை” என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள்.
ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது..
- சிருங்கேரி சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள். .