December 4, 2024, 10:06 PM
25.6 C
Chennai

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா துவக்கம்..

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து  அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் கொடிப்படம் புறப்பாடு நடைபெற்றது.  சிறப்பு பூஜைகளுடன் காலை 5.45 மணிக்கு மீனலக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு  யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

விழாவின் 2-ம் நாளான 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு  மாலை 5.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

ALSO READ:  மதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு !

பின்னர் இரவு 9 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியபடி 30-ந் தேதி காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தானமண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர்  அங்கிருந்து மாலை 5 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

31-ந்தேதி தங்க கருடவாகனத்திலும், 1-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வரும் 2-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையைக் கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார்.

அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை காட்சியளிப்பார். 3-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார்.

ALSO READ:  பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

4-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம்(பங்குனிதேர்) அருகே இரவு 7.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார்.

5-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நம்பெருமாள் -ஸ்ரீரெங்கநாச்சித்தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. நம்பெருமாள்–ரெங்கநாயகித்தாயார் சேர்த்திசேவை  5-ந் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் நடைபெறும்.

முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்சியான பங்குனி  தேரோட்டம் வரும் 6-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.  7-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

ALSO READ:  மதுரை: வளர்பிறை பஞ்சமி; அறிவுத் திருக்கோயில் திறப்பு!
author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week