நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்றஅனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
ஒன்பதாம் பாசுரத்தில் தன் தோழியின் தாயாரிடம், உன் மகளை எழுப்பிவிடு என்று கோரிய ஆண்டாள், அப்படியும் அவள் எழாதது கண்டு, ராமபிரானால் தோல்வியுற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உன்னிடம் கொடுத்துச் சென்றானோ என்று மயக்கம் கொண்டு தன் தோழியிடம் வினவுகிறார் பத்தாம் பாசுரத்தில்!
நோன்பினை நோற்று, சுவர்க்கம் போன்ற சுக அனுபவம் பெறுபவராய்த் திகழும் அம்மே! இவ்வளவு கூறியும் வாசல் கதவைத்தான் திறக்காதவராய் இருக்கின்றீர்கள், ஆனால், பதிலுக்கு ஒரு வார்த்தையும் சொல்லாமல் இருக்கலாகுமோ? நறுமணம் வீசும் துளசி எனும் திருத்துழாய் மாலை அணிந்துள்ள திருமுடியைக் கொண்டவன் அந்த நாராயணன். நம்மால் மங்களாசாசனங்கள் பண்ணப் பெற்று, அதனாலே மகிழ்ந்து நமக்கு அனைத்து விதமான நலன்களையும் தந்தருள்பவன்.
அவன் தர்மமே வடிவு கொண்டாற்போன்று, ராமபிரானாய் இங்கே எழுந்தருளினான். முன் ஒரு காலத்தில் யமன் வாயில் விழுந்த இரையாக அந்த ராமபிரானால் நற்கதி அடைந்த கும்பகர்ணன், தான் தோற்று அதுவரை தான் கொண்டிருந்த பேருறக்கத்தை உனக்கேதான் கொடுத்துவிட்டானோ? மிகுந்த உறக்கம் உடையவளே! பெறுவதற்கு அரிய ஆபரணம் போன்றவளே! உறக்கம் கலைந்து, உள்ளம் தெளிந்து உடனே வந்து கதவைத் திறந்திடுவாய்! – என்று தோழியை விரைந்து எழுந்து கதவைத் திறந்து வெளிவருமாறு கூறுகிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்
திரà¯à®®à®¾à®²à¯ திரà¯à®µà®°à¯à®³à¯ பொழிக!