spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்"ஆதி சங்கரர் கால நிர்ணயம்-- ‘கார்பன் டேட்டிங்'முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா".

“ஆதி சங்கரர் கால நிர்ணயம்– ‘கார்பன் டேட்டிங்’முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா”.

“ஆதி சங்கரர் கால நிர்ணயம்– ‘கார்பன் டேட்டிங்’முறையில் ஊர்ஜிதப்படுத்திய பெரியவா”.

ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு-………. அட்சய திருதி59707665 885647678444715 983816019254444032 nயை ஸ்பெஷல் போஸ்ட்

(எத்தனை பெரிய விஷயத்தை, எவ்வளவு எளிமையாக மகா பெரியவா முடித்தார் என்று பார்க்க வேண்டும். மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்கிற எண்ணமே – சிந்தனையே – உணர்வே – நம் எல்லோருக்கும் மிகப் பெரிய வரப்ரசாதம்!)

கட்டுரை: பி. சுவாமிநாதன். நன்றி: ‘ராணி’ இதழ்


உலகின் பல பாகங்களில் வசிக்கக் கூடிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் போன்றோர் அவ்வப்போது காஞ்சி மாநகரத்துக்கு விஜயம் செய்து மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்று விவாதிப்பது வழக்கம்.

வருகின்றவர்கள் ஆச்சரியப்படும்படி அவர்கள் சார்ந்திருக்கிற துறை தொடர்பாக பல்வேறு தகவல்களைச் சொல்லி, அவர்களைப் பிரமிக்க வைப்பார் மகா பெரியவா.

புகழ்பெற்ற புவியியலாளர் (ஜியோலஜிஸ்ட்) ஒருவர் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்துக்கு வந்தார். அவரது பூர்வீகம், குடும்பம், உத்தியோகம் ஆகிய அனைத்தையும் பற்றிக் கேட்டறிந்தார் மகா பெரியவா. அரை மணி நேர சம்பாஷணைக்குப் பிறகு, ஆசி பெற்று கிளம்ப இருந்தவரை, ‘‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணித் தர முடியுமா?’’ என்று ஒரு குழந்தை போல் கேட்டார் மகா பெரியவா.

புவியியலாளருக்கு நம்ப முடியவில்லை. ‘உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கின்ற சிறு அசைவையும் அறிந்தவர், நம்மிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறார்?’ என்று வியந்து, மகானுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றவர், ‘‘பெரியவாளுக்கு என்னால ஏதேனும் உபகாரம் ஆகும்னு இருந்தா, அதைவிட எனக்கு சந்தோஷம் கிடையாது’’ என்று பணிவுடன் சொன்னார்.

‘‘கேரளால இருக்கிற காலடி க்ஷேத்திரம் பத்திக் கேள்விப்பட்டிருக்கியோ?’’ என்றார்.

‘‘தெரியும் பெரியவா. ஆதி சங்கரரோட அவதார பூமி ஆச்சே…’’

‘‘ஆமா… அங்கே பூர்ணா நதி ஓடறது. ஆதி சங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் அதுலதான் தெனோமும் ஸ்நானம் பண்ணுவா.’’

தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார் புவியியலாளர்.

‘‘பூர்ணா நதிலேர்ந்து நான் சொல்ற ரெண்டு எடத்துல மண்ணு சாம்பிள் எடுத்துக்கோ. அது ரெண்டையும் டெஸ்ட் பண்ணி, எத்தனை காலத்துக்கு முந்தைய மண்ணுன்னு சொல்லணும்.’’
‘‘உத்தரவு பெரியவா.’’

‘‘பூர்ணா நதி கேரளாவில் காலடி க்ஷேத்திரத்துக்குள்ள பாய ஆரம்பிக்கறது இல்லியா? அது காலடிக்குள்ள நுழையற எடத்துக்கு முன்னாடி இருக்கிற ஊர்லேர்ந்து கொஞ்சம் மண்ணு எடுத்துக்கோ.

ரெண்டு எடத்துலேர்ந்து மண்ணு எடுக்கணும்னு சொன்னேன் இல்லியா? ரெண்டாவது மண்ணை எங்கே எடுக்கணும்னா, இந்த நதி காலடி ஊருக்குள்ள பாய ஆரம்பிக்கும். காலடிக்குள்ள பூர்ணா வந்த ஒடனே ஒரு சின்ன யூ டர்ன் போட்ட மாதிரி சங்கரர் வாழ்ந்த கிரஹம் வரை வந்துட்டு, திரும்ப பழைய மாதிரி தனக்கு உண்டான பாதைல இந்த நதி பாய ஆரம்பிச்சிடும், பார்த்திருக்கியோ… அந்த எடத்துலேர்ந்து மண்ணு எடுத்துக்கோ.

நான் சொன்ன இந்த ரெண்டு எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ. ‘கார்பன் டேட்டிங்’ (பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது) முறைப்படி ரெண்டு மண்ணோட வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லு’’ என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி நிறுத்தினார் மகா பெரியவா.

தன் துறை சார்ந்த பணி என்பதாலும், மகா பெரியவாளே ஓர் உத்தரவு போல் சொன்னதாலும், மிகவும் சந்தோஷத்துடன், ‘‘நிச்சயம் பெரியவா. உடனே பண்றேன்’’ என்று சொல்லி, மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் புவியியலாளர்.

காலடிக்கு முன்னால் பாய்கின்ற ஊரிலும், காலடிக்குள் நுழைந்த பிறகு உள்ள இடத்திலும் மண் சேகரித்தார். மகா பெரியவா சொன்ன சோதனைகளை முடித்தார். பரிசோதனை முடிவுகளைக் கையில் எடுத்துக் கொண்டார். இவற்றை மகா பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்தார் புவியியலாளர்.

ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்றார் மகா பெரியவா. நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார் புவியியலாளர். அவர் சொல்லப் போகும் தகவலுக்காக ஆவலுடன் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘பெரியவா… ரெண்டு எடத்துலயும் மண்ணு எடுத்து, ‘கார்பன் டேட்டிங்’ முறைப்படி வயசைக் கண்டுபிடிச்சுட்டேன். கேரளாவில் காலடிக்குள் நுழைவதற்கு முன் உள்ள மண் சுமார் ஒரு லட்சம் வருடம் ஆனது. அதாவது, இந்த நதியின் வயது ஒரு லட்சம் வருஷம். அடுத்தது – காலடிக்குள் சங்கரர் கிரஹம் இருந்த இடம் அருகே இருந்த மண், சுமார் 2500 வருட பழமை கொண்டது.’’

புவியியலாரையும் அங்கே கூடி இருந்த பக்தர்களையும் பார்த்து மகா பெரியவா புன்னகை பூத்தார்.

‘‘இவர் கொண்டு வந்த ரிசல்ட் படி ஆதி சங்கரரோட அவதார காலம் மேலும் ஊர்ஜிதமாயிடுறது’’ என்று சொன்ன மகா பெரியவா, ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில் மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார்.

ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது 32 ஆண்டுகளே. ஆதி சங்கரரின் அவதார தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா பெரியவா வெளியிட்டார். ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் அப்போது இருந்தன. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, ஒரு புவியியலாளரை வைத்து மண்ணின் வயதைக் கணக்கிடச் சொன்னமைக்கும் ஒரு காரணம் உண்டு.

காலடியில் ஆதி சங்கரர் வசித்த இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது . சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள் நித்தமும் பூர்ணா சென்று நீராடித் திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில் நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது தள்ளாமையின் காரணமாக வழியில் மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள். இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.

‘இனி பூர்ணா செல்ல வேண்டாம். இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே நீராடுங்கள்’ என்று தன் தாயாரிடம் சொன்னார் ஆதி சங்கரர்.

ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும், நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான் நீராடுவேன்… அது எத்தனை பெரிய பாக்கியம்’ என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார்.

அப்போதுதான் ஆதி சங்கரர் கங்காதேவியைப் பிரார்த்தித்துப் பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே தனது இல்லம் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பினார்.

ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக் கொண்டு பாய ஆரம்பித்தது.

திடீரென தன் வீடு அருகிலேயே பூர்ணா ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு சந்தோஷமான சந்தோஷம்.

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான் பூர்ணா, அவரது இல்லம் அருகே பாய்ந்தது. ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின் மண்ணை சோதித்துப் பார்த்தால், ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரிந்து விடும் என்று தீர்மானித்து, புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை வெளியிட்டார் மகா பெரியவா.

காலடிக்குள் பூர்ணா நுழைவதற்கு முன் நதியின் வயது ஒரு லட்சம் வருடம்.

காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர் இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு 2,500 வருடம்.

எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து 2,500 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது ஊர்ஜிதம் ஆயிற்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe