விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பங்குனி மாத திருக்கல்யாணம் திங்கட்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.காலை செப்பு தேரோட்டம். இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ தேசங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு கோவில் கொண்டுள்ள ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளன்று திருக்கோவில் முன்புள்ள ஆடிப்பூர பந்தலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழும் வண்ணம் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆண்டாள் ரெங்க மன்னார் பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. அன்று தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்க மன்னார் ரத வீதிகள் வழியே வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா இன்று (25ஆம் தேதி) காலை துவங்கியது.
ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் காலை 7 மணிக்கு மேஷ லக்னத்தில் செப்புத்தேர் எனும் கோ ரதத்தில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்கி செப்புத் தேரினை நான்கு ரத வீதிகள் வழியே இழுத்து நிலையம் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு சுவாமிகள் வீதி புறப்பாடாகியது.
முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா இரவு 7:30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சுதர்சன பட்டர் திருக்கல்யாணத்தினை நடத்தி வைத்தார். தலைமை அர்ச்சகர் ஸ்ரீ வாரி முத்துப்பட்டர் ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் மணியம் கோபி கிச்சப்பன் வெங்கடேச ஐயங்கார் ஆகியோர் பூஜைகள் நடத்தி வைத்தனர்.
திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய பாக்கெட் வழங்கப்பட்டது. ஆண்டாள் பெரியாழ்வார் ட்ரஸ்ட் சார்பில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் சிரமமின்றி திருக்கல்யாணத்தினை தரிசிக்க பல இடங்களில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
விழா ஏற்பாடுகளை மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க. செல்லத்துரை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
திருக்கல்யாண திருவிழாவில் செவ்வாய் கிழமை மாலை முத்துக் குறி ஊஞ்சல் சேவை தலபுராண வாசித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது .இவ் விழாக்களில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது