ஐபிஎல் 2024 – 25.03.2024 – பெங்களூரூ
ராயல் செலஞ்சர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பஞ்சாப் அணி (176/6, ஷிகர் தவான் 45, ஜிதேஷ் ஷர்மா 27, பிர்ப்சிம்ரன் சிங் 25, சிராஜ் 2/26, மேக்ஸ்வெல் 2/29) பெங்களூரு அணி (விராட் கோலி 77, ரபாடா 2/23, ஹர்பிரீத் ப்ரார் 2/13)
இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே பெங்களூருவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் (45 ரன்), ஜிதேஷ் ஷர்மா (27 ரன்), பிரப்சிம்ரன் சிங் (25 ரன்) நன்றாக ஆடினர். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் பிந்தைய ஓவர்களில் சிறப்பாக ஆடினர்.
முதல் 42 பந்துகளில் 50 ரன்களும், அடுத்த 33 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் எடுத்தனர். அடுத்த 31 பந்துகளில் 150 ரன்னையும் மீதமுள்ள 14 பந்துகளில் 26 ரன்களையும் அந்த அணி சேர்த்தது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது. பந்துவீச்சாளர்களில் முகம்மது சிராஜ் மற்றும் யஷ் தயால் இருவரைத் தவிர மற்றவர்கள் ரன் அதிகம் கொடுத்தனர்.
இரண்டாவதாக ஆடவந்த பெங்களூரு அணியில் ட்யு பிளேசிஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழந்தனர். ரஜத் படிதர் 18 ரன் எடுத்தார். கிளன் மேக்ஸ்வெல் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் நன்றாக ஆடிய விராட் கோலி 16ஆவது ஓவர் முடிவில் 77 ரன்னுக்கு (49 பந்துகள், 11 ஃபோர், 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அனுஜ் ராவத்தும் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். அப்போது 22 பந்துகளில் 47 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக், மஹிபால் லோமரும் அதிரடியாக ஆடி பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை சென்னையில் சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.