
- இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தரமுடியுமா உன்னால?
- தண்டம் தண்டம்னு திட்டு வாங்கிய வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு, ஒரு இஞ்ஜினீயர் மூலம் வேலை கிடைக்க, பெரியவா காட்டிய பரிவு
- ‘தண்டத்துக்கு’ அற்புத விளக்கம் கொடுத்த பெரியவா
கட்டுரையாளர்: ரா.வேங்கடசாமி
தொகுப்பு: வரகூரான் நாராயணன்
பரமாசார்யா தஞ்சாவூர் பக்கத்துல முகாம்.தரிசனம் தர ஆரம்பிச்சு மூணு,நாலு மணி நேரம் இருக்கும். வரிசைல நின்னுண்ட இருந்த பக்தர்கள் கூட்டத்துல யாரோ லேசா விசும்பறாப்புல சத்தம் கேட்டுது. நேரம் ஆக ஆக அந்த விசும்பல் சத்தம் அழுகை சத்தமா மாறி பெரிசா கேட்கவும் பலரும் திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சா.
இருபது,இருபத்திரண்டு வயசு இருக்கும் அந்தப் பையனுக்கு பார்க்க படிச்சவனாட்டம் இருந்தான். அவன்தான் அப்படி அழுதுண்டு இருந்தான்.பொதுவா வயசானவாளோ இல்லைன்னா, மனசுல பெரிசா பாரம் ஏதாவது உள்ளவாளோதான் இப்படி பரமாசார்யா தரிசனத்தைக் கண்டதுமே அழுவா.
இவனோ இளைஞன். படிச்சவன் மாதிரி நாகரீகமாவேற இருக்கான். அப்படி இருக்கிற இவன் ஏன் அழறான்? இந்தக் கேள்வி எல்லாருக்குமே எழுந்தது.அவனோட அழுகை உச்சஸ்தாயில ஒலிச்ச சமயத்துல,;
‘அவனைக் கூப்பிடுங்கோங்கற மாதிரி தன்னோட ஒற்றைவிரலை அசைத்தார்,பரமாசார்யா. அந்த அர்த்தத்தைப் புரிஞ்சுண்டு, அந்தப் பையனை உடனடியா ஆசார்யா முன்னிலையில் கூட்டிண்டுபோய் நிறுத்தினார் ஒரு சீடர்.பரமாசார்யா முன்னால் போய் நின்னதும் பெரிசா அழறதை நிறுத்திட்டு, கேவிக்கேவி அழ ஆரம்பிச்சான் அந்த பையன்.
அவனோட கண்ணுலேர்ந்து அருவி மாதிரி ஜலம் கொட்டியது.”இந்தாப்பா…அழாதே..அதான் பெரியவா முன்னால வந்துட்டியோல்லியோ…உன்னோட பாரம் என்னன்னு இறக்கிவைச்சுடு!” அப்படின்னு சிலர் குரல் கொடுத்தா.”இருந்த எல்லாத்தையும் அழுது கொட்டிட்டியா? இப்போ சொல்லு.உன்னோட குறை என்ன?” அன்பா கேட்டார் ஆசார்யா
..”பெரியவா..நான் படிச்சு முடிச்சு ரெண்டு வருஷம் ஆறது. ஆனா,எனக்கு இன்னும் வேலை கிடைக்கலை. அதனால ஆத்துல எல்லாரும் என்னை தண்டம் தண்டம்னு கூப்பிடறா…நானும் போகாத கம்பெனி இல்லை. தேடாத வேலை இல்லை. ஆனா ஏனோ…!” வார்த்தையை முடிக்க முடியாம மறுபடியும் அழ ஆரம்பிச்சுட்டான் அவன்.”சரி, கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்து இரு!” அவ்வளவுதான் சொன்னார் ஆசார்யா.
அந்தப் பையன் ஒரு ஓரமா ஆசார்யா பார்வையில் படறமாதிரியான இடத்துலபோய் உட்கார்ந்துண்டான்.பக்தர்கள் வந்துண்டே இருந்தா.அந்த சமயம் சென்னைலேர்ந்து பெரிய கம்பெனியோட இன்ஜினீயர் ஒருத்தர் வந்தார்.கொண்டு வந்திருந்த பழத்தட்டை பெரியவா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணின அவர்கிட்டே,; “நோக்கு இது என்னன்னு தெரியுமோ?” அப்படின்னு கேட்டு, தன்னோட கையில வைச்சுண்டு இருந்த சன்யாச தண்டத்தைக் காட்டினார் ஆசார்யா.
என்னடா இது. சம்பந்தமே இல்லாம தன்கிட்டே இதைப்பத்தி கேட்கிறாரே ஆசார்யான்னு அவருக்கு திகைப்பு. மத்தவாளுக்கோ, பரமாசார்யா ஏதோ சொல்லப் போறார்ங்கற எதிர்பார்ப்பு.
“இது சன்யாசிகள் வைச்சுக்கற துறவறத் திருக்கோல்!” சொன்னார் இன்ஜினீயர்.
“திருக்கோல்னு சொன்னா எப்படி? இதுக்குன்னு பிரத்யேகப் பேர் இருக்கோல்லியோ,அதைச் சொல்லு!”-பெரியவா.
“தண்டம்னு சொல்லுவா!”–இஞ்சினீயர்
“சரியாச் சொன்னே…இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தரமுடியுமா உன்னால?” கேட்ட பெரியவா கொஞ்சம் நிறுத்த, எல்லாரும் விஷயம் என்னன்னு புரியாம விழிக்க, ஓரமா உட்கார்ந்திருந்த அந்தப் பையனை கையசைச்சுக் கூப்பிட்டார், ஆசார்யா.
“இதோ இவன்தான் அந்த தண்டம். இவனை அப்படித்தான் கூப்பிடறாளாம், பாவம், இவனுக்கு உன் கம்பெனில் ஒரு வேலை போட்டுத் தரியா?” சொன்னார் பெரியவா
“பெரியவா உத்தரவு. நிச்சயம் வேலை போட்டு குடுத்துடறேன். இப்பவே கூட்டிண்டு போறேன்!” சொன்னார் இன்ஜினீயர்.
“எல்லாரும் தண்டம்னா,ஒண்ணுத்துக்கும் உதவாததுனு நினைச்சுக்கறா. ஆனா இந்த தண்டம் இல்லைன்னா, எதுவுமே முறைப்படி நடக்காது. சன்யாசிகளுக்கு தீட்சா தண்டம்தான் காப்பு. பிரம்மசாரிகளுக்கும் தண்டம் உண்டு ஏன், நாட்டை ஆள்ற ராஜா கையில இருக்கிற செங்கோல் கூட ஒரு தண்டம்தான். அது ராஜ தண்டம். யாரா இருந்தாலும் அதுக்கு கட்டுப்படணும். நீதி, தர்மத்தை பரிபாலனம் பண்றதே அதுதான். புரிஞ்சுதா?”.
பரமாசார்யா சொல்லி முடிக்கவும், புறப்பட உத்தரவு வேண்டியும் ஆசிர்வாதம் வேண்டியும், அவரை மறுபடியும் நமஸ்காரம் பண்ணினான் அந்தப் பையன். இப்பவும் அவன் கண்ணுலேர்ந்து ஜலம் வழிஞ்சது. அது ஆனந்த பாஷ்பம்.
- குமுதம் லைஃப் 10-05-2017 தேதியிட்ட இதழில் வெளியானது