spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: மார்க்கண்டேயனைக் காத்த கதை!

திருப்புகழ் கதைகள்: மார்க்கண்டேயனைக் காத்த கதை!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 33
கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

மார்கண்டேயரின் திருவரலாறு தொடர்கிறது…

மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றார்; அபிஷேகம் புரிய குளிர்ந்த நீரிருக்கிறது; அர்ச்சிக்க நறுமலரிருக்கிறது; ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன; இயமனை வென்று வருவேன் நீங்கள் அஞ்சன்மின்” என்று கூறி விடைபெற்று,  மணிகர்ணிகையில் நீராடி, சிவலிங்கத்தைத் தாபித்து, நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர்.

என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர்முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா!  நினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,

ஐயனே அமலனே அனைத்தும் ஆகிய
மெய்யனே பரமனே விமலனே அழல்
கையனே கையனேன் காலன் கைஉறாது
உய்யநேர் வந்து நீ உதவுஎன்று ஓதலும்      —கந்தபுராணம்.

“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரமிரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

மார்க்கண்டேயர் காலந்தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து இயமதூதன் விண்ணிடை முகிலென வந்தான். சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி அருகில்செல்லமுடியாதவனாய் திரும்பி சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனிடம் கூறினான்.

இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டேயன் என்ன முடிவில்லாத இறைவனா?” என்று தனது கணக்கராகிய சித்திரகுப்தரை வரவழைத்து மார்க்கண்டேயரது வாழ்க்கைக் கணக்கைச் சொல்லுமாறு பணித்தான்.

சித்திரகுப்தர் “இயமதர்மராஜரே மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவருமில்லை; ஆயினும் மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியினை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன்.

அவனும் பூலோகம் வந்து மார்க்கண்டேயரின் கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புரிந்து கொண்டு, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துளன். உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவன். வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “இயம்தர்மராஜனின்மந்திரியே சிவனடிக்கன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.”

நாதனார் தமது அடியவர்க்கு அடியவன்  நானும்
ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
வேதன்மால் அமர்பதங்களும் வெஃகலன், விரைவில்
போதிபோதி என்று உரைத்தலும் நன்றுஎனப் போனான்.

அது கேட்ட அந்த மந்திரி நமன் பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவனல் போல் கொதித்து, புருவம் நெறித்து, விழிகளில் கனற்பொறி சிந்த, எருமை வாகனத்தில் அமர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிக் காலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன்.

அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும் ஆகாயத்து நட்சத்திரங்களை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு கமலாசனுக்கும் உண்டு. எனக்கும் உண்டு. ஆகவே பிறப்பு இறப்பற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும் மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டல்லது மீண்டிடேன். விரைவில் வருதி” என்றனன்.

மார்க்கண்டேயர் “அந்தக! அரனடியார் பெருமை அறிந்திலை; அவர்களுக்கு முடிவில்லை. முடிவு நேர்கினும் சிவபதமடைவரே அன்றி, நின் புரம் அணுகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார். தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார். அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என்னாவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.

தீதுஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க
ஓதா நின்றாய்,மேல் வரும்ஊற்றம் உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். — கந்தபுராணம்

 “இவ்விடம் விட்டு விரைவில் போவாயாக” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி (இயமன்) மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றாயா? என் வலிமையைக் காண்பாயாக” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசினான். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர்.

கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர்வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர்.

இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவைக் கூறி, அவர்கள் துன்பத்தை நீக்கினர்.

நெடுங்காலத்துக்குப் பின் மரணாவத்தை இன்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.

இந்தச் செய்தியை
சிதைத்தான் வாமச் சேவடி தன்னாற் சிறிது உந்தி
உதைத்தான், கூற்றன் விண் முகில்போல் மண் உறவீழ்ந்தான்
– என கந்தபுராணம் கூறுகிறது.

அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத
      அவனைக்காப்பது காரணமாக
வந்தகாலன் தன்ஆருயிர் அதனை
      வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்
எந்தை!நீ எனைநமன் தமர்நலியில்
      இவன்மற்றுஎன்அடி யான்எனவிலக்கும்
சிந்தையால் வந்துஉன் திருவடி அடைந்தேன்
      செழும்பொழிலு திருப்புன் கூர்உளானே
-என சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe