spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது?

ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது?

- Advertisement -

 

ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது?

அடியேன் பல நாட்கள் பலரிடம் கேட்டு விடை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்த ஒரு அற்புத விளக்கத்தை பெங்களுர் பிரபல உபாத்யாயர் மேல்கோட்டை ஸ்ரீநிவாஸன் (இதை அவரிடம் கேட்டுச் சொன்னவர் மற்றுமொரு ஸ்ரீநிவாஸன் – அம்பாசமுத்ரம்/மேல்கோட்டை) சில தினங்களுக்கு முனி தெரிவித்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப் படுகிறது?

இதோ அதற்கான விடை. மேலும் சில விளக்கங்கள் வரவேற்கப் படுகின்றன.

பெரிய திருவத்யயன மஹோத்ஸவம் – இயல் கோஷ்டி 13ஆம் நாள் கரும்புவில்லும் குடமும்

ஒரு மனிதன் எடுக்கும் பிறவிகளிலேயே மிகச் சிறந்ததாய்க் கருதப்படுவது ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறப்பது. உலகத்தில் பல்வேறு வகைச் சமயங்க ளிருக்கின்றன. அச்சமயங்களைப் பற்றி அச்சமய நூல்களிற் சொல்லப்படும் தெய்வங்களை வழிபடுகின்றவர்களும் பலரிருக்கின்றனர்.

இந்தச் சமயநெறிகளினின்றும் தப்பி ஸ்ரீவைஷ்ணவ சமயச் சார்பினனாகப் பிறப்பது அரிது.

இவ்வரிய சமயச் சார்பினனாகப் பிறந்தானொருவன் ‘ஸ்ரீமந் நாராயணனையே பரதெய்வமாக’ நினைத்து, அவ்விறைவன் விஷயத்திற் செய்யும் ‘கைங்கர்யமே’ பரம புருடார்த்தமாகக் கொண்டொழுகுவான்.

இந்த வைஷ்ணவனுக்கு அகச்சுத்தி , புறச்சுத்தி என்ற இரண்டு சுத்தியுமிருத்தல் வேண்டும். அவற்றுள் அகச் சுத்தியாவது – மனத்திலுள்ள காம க்ரோதாதிகளாகிய அழுக்கற்று எம்பெருமானிடத்தில் அன்புற்றிருத்தலாம்.

புறச்சுத்தியாவது – சங்க சக்ராதி இலச்சினைகளைப் பெறுதலாம். இவையும் பஞ்ச ஸம்ஸ்காரத்தில் அடங்கும். பஞ்ச ஸம்ஸ்காரங்களாவன
“தாப: புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:” என்கிறபடியே
தாபம் புண்ட்ரம் நாமம் மந்த்ரம் யாகம் என்பன.

இவற்றை ‘அறிவொழுக்கங்களிற் சிறந்த ஆசார்யன்’ மூலமாகப் பெற்றுக்கொள்ளக்கடவன்.
இது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமே அமையப்பெற்றுள்ள முதல் தர்மமாகும்.

பூர்வ ஜன்ம கர்மங்களின் அடிப்படையில் வெவ்வேறு குலங்களில் பிறந்தாலும், ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ‘ப்ரபந்நர்கள்’ என்று கொண்டாடப்படுகிறார்கள்.

சாதாரண சாஸ்த்ரங்களில் அதாவது வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்பவர்கள் அதன்வழியாகவே பலன் அடையலாம் என்று நம்புபவர்கள்.
இவர்களுக்கு சாஸ்த்ரிகள் என்று பெயர்.

பெரிய திருமந்த்ரமாகிய திருவெட்டெழுத்தின் உண்மையான பொருளை அறிந்தவர்கள் ‘ஸாரஜ்ஞர்கள்’ என்று கொண்டாடப்படுகிறார்கள்.

இந்த ஸாரஜ்ஞர்களாகிய ப்ரபந்நர்கள் எம்பெருமான் திருவடிகளிலே ஆத்ம ஸமர்ப்பணம் செய்து, ஆத்மா இந்த உடலிலிருந்து விடுபட்டு மேலுலகம் செல்லும் காலத்தை எதிர்நோக்கி இருப்பர்கள்.

அவர்களுக்கு மரணபயம் கிடையாது. ஏனெனில் எம்பெருமான் ‘மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் ஆவான்’.

இந்தக் கருத்தையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், தம்முடைய ‘ஆசார்ய ஹ்ருதயத்தில்’ கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“சாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே இரண்டையு மிடுக்கிப் பிறவிக்கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத்திலிருப்பாரைப்போலே
இருகையும் விட்டுக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்” –
(ஆசார்ய ஹ்ருதயம் – நூற்பா 19).

ஒருவனுடைய வாழ்நாளில் அவன் உடல், உள்ளம் ஆகியவை எம்பெருமானுக்கும், எம்பெருமான் அடியார்களுக்கும் தொண்டு செய்திருக்கக் கூடுமானால், அவனுடைய ஆத்மா அந்த உடலைவிட்டு பிரிந்து சென்றபிறகு, அந்த உயிர் பிரிந்த உடல், ஓர் புனிதப் பொருளாக கருதப்படுகிறது.

அந்த உடலை சிதையிலே வைப்பதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடு களின்படி, சில ஸம்ஸ்காரங்களை செய்வது ஒரு காலத்தில் அனைத்து வர்ணத்தைச் சார்ந்தவர்களின் முக்கியமான சடங்காக அமைந்திருந்தது.

அதனுடைய ஓர் எச்சம்தான் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருமாளிகைகளில் நடைபெற்றுவரும், ஸ்ரீசூர்ண பரிபாலனம் என்னும் நிகழ்ச்சி.

அப்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒன்றுகூடி, நம்மாழ்வாருடைய முதற்பிரபந்தமாகிய திருவிருத்தம் நூறு பாட்டுக்களை ஸேவித்தும்,

ஓர் மரஉரலில் ஸ்ரீசூர்ண கலவையை இடித்து, இறந்தவருடைய புனித உடலுக்கு ஸ்நாநம் செய்வித்த பிறகு, அவருடைய திருமேனியில் பன்னிரெண்டு திருமண் காப்புகளை சாற்றிய பின்னர் ஈமச்சடங்குகளைத் தொடர்ந்து செய்வர்.

இந்தச் சடங்கும் எம்பெருமானார் தர்சனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அமைந்துள்ள இரண்டாவது தர்மமாகும்.

மூன்றாவது தர்மந்தான் ஸ்ரீவைஷ்ணவனுக்கு, (ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந் தாலும்) அதாவது பஞ்சஸம்ஸ்காரம் ஆனவர்களுக்கு (எக்குலத்தவராயினும்) அவர்கள் பரமபதித்து ஓராண்டு நிறைபெறுவதற்குள் (வருஷ ஆப்திகத்திற்கு முன்) அவர்களுக்காகச் செய்யும் சடங்கு ‘கரும்புவில்லும் குடமும்’ என அழைக்கப்படும் திவ்யப்பிரபந்த பாராயண, ததீய ஆராதன (ததீ நெடில், ததி குறில் என்பது தயிர்) வைபவம் (திருமால் அடியார்களுக்குச் செய்யும் விருந்தோம்பல்).

பரமபதித்த சேதனின் பொருட்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, மூன்று நாள்கள் அல்லது ஐந்து நாள்கள் நடைபெறும்.

திருவாய்மொழி மட்டுமோ அல்லது நாலாயிர திவ்யப்பிரபந்தம் சேவையினை நடத்தலாம்.

அதற்கு அங்கமாக ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், ஸ்ரீராமாயணம், ஈடு, ரஹஸ்யக்ரந்தங்கள் முதலானவை அனுஸந்திக்கப்படுகின்றன.

‘கரும்பும் வில்லும் குடமும்’ என்கிற நிகழ்வு முழுக்க முழுக்க ததீயர்களை (திருமால் அடியார்களை) ஆராதிக்கும் வைபவமாகும்.

இதனையே நம்மாழ்வார் “உலகில் ஏந்து பெருஞ்செல்லவத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே” என்கிறார்.

இந்த பாகவத ஆராதனத்தின் மூலம் பரமபதித்த சேதனன் நற்கதியினை அடைவான் என்கிறது பகவச்சாஸ்திரம்.

இந்த பாகவத ஆராதனத்தைப் பற்றி, “தர்சன தர்மம்” (அதாவது எம்பெருமானார் தர்சனத்தைச் சார்ந்தவர்களுக்கே உரியது) என்று ‘ஸ்ம்ருதி ரத்னாகரம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார் தோழப்பர்.

இச்சடங்கினை பெரியதிருவத்யயன உத்ஸவம் என்றும் வழங்குவர். இச்சடங்கினைச் செய்யும் கர்த்தாக்களான ஸ்ரீவைஷ்ணவர்கள், பராயணம் நடைபெறும் இருவேளைகளிலும் நீராடி அகத்தூய்மையோடும், புறத்தூய்மையோடும், அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களை வரவேற்று, திருவடிகளை அலம்பி, திருவொற்ற ஆடை ஸமர்ப்பித்து, ஆஸனம் ஸமர்ப்பித்து, அர்க்ய, பாத்யங்களால் உபசரித்து, பாராணயம் நடைபெறும் போது பால், இளநீர் முதலானவைகளை ஸமர்ப்பித்து, பாராயணம் முடிந்த பின்னர் போஜனம் செய்வித்து திருமால் அடியார்களை பூசித்தொழுவர்.

இந்த ஆராதனத்தின் சாற்றுமுறை தினத்தன்று, காலை திருவிருத்தம் எனும் பிரபந்தம் சேவிக்கப் படுகிறது. எண்ணெய், சுண்ணம் (மஞ்சள்பொடி) அடியார்கள் அனைவருக்கும் பிரசாதமாக அளிக்கப்ப டுகிறது.

இதன் தாத்பர்யம் என்னென்னில், முக்தனான இந்த சேதனன் பரமபதத்திலே பிறப்பதாக ஐதிஹ்யம்.

மேலும் சரமதிருமேனியில் ஸ்ரீசூர்ணபரிபாலனம் செய்வதென்பது ஆரம்ப நாளாகும்.
இந்த நாள் அவப்ருதம் (தீர்த்தவாரி) கண்டருளும் தினமாகும். ஆதலால் மஞ்சள் எடுத்துக்கொண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தாஸவ்ருத்திகளுக்கான துறையிலே நீராடச்செல்வர்.

அவர்கள் நீராடிய பின்பு, அந்தத் துறையிலே இந்த பெரியதிருவத்யயனம் எனும் மஹோத்ஸவத்தை நடத்தும் கர்த்தாக்கள் புனிதநீராடி, ஸ்ரீவைஷ்ணவர்கள் தரித்த திருமண்காப்பு, ஸ்ரீசூர்ணம் ஆகியவற்றின் மீதத்தை இவர்கள் சாற்றிக் கொண்டு, திருமால் அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தை குடத்திலே நிறைத்து, அக்குடத்தினை தலையிலே ஏந்தியபடி திருமாளிகைகள் தோறும் செல்வர்.

இயல் கோஷ்டியினர் கரும்பைப் பிடித்தபடி இராமானுச நூற்றந்தாதி சேவித்தவண்ணம், தீர்த்தக் குடத்திற்கு முன்பே செல்வர். வேத பாராயண கோஷ்டியார் கரும்பைப் பிடித்தபடி பின்னே செல்வர்.

ஸ்ரீவைஷ்ணவ திருமாளிகைகள் தோறும், உபய கோஷ்டியாருக்கும், தீர்த்தக்குடம் ஏந்தி வருகின்ற கர்த்தாவிற்கும், ஆஸனமிட்டு திருவடிகளை விளக்கி, அர்க்ய பாத்யங்களை ஸமர்பித்து, தூப தீபங்களாலே ஆராதித்து, புஷ்பம், தேங்காய், கனிகள், தாம்பூலாதி தக்ஷிணை, ஆரத்தி ஸஹிதமாக ஸ்ரீகோஷ்டியை அலங்கரித்து பூசிப்பர்கள்.

பாகவத ஆராதனம் நடைபெறும் அந்தத் திருமாளிகை வாசலிலே சென்றவுடன், கோஷ்டியினருக்கு அனைத்து உபசாரங்களையும் செய்து, ஆரத்தி முதலான மரியாதைகளைச் செய்வர்.

பின்னர் இராமானுச நூற்றந்தாதி சாற்றுமுறை நடந்து, உடையவர் ஸம்பாவனை எடுக்கப்படும்.

(ஸ்ரீபராசரபட்டர் கூரத்தாழ்வானுக்கு இயல் நடத்தி, உடையவர் ஸம்பாவனை பிரசாதிக்கும் போது, ஸாக்ஷாத் உடையவரே ஸ்வீகரித்ததாக பெரியார்கள் பணிப்பர்).

பின்பு கரும்பில் வில்போல் வளைந்துள்ள மேற்பகுதியை முறித்து திருமாளிகையின் மேற்கூரையை நோக்கி எறிவர்.

(இதன் தாத்பர்யம் என்னவென்னில் கரும்பில் 14 கணுக்கள் அமைந்துள்ளன. முக்தனான சேதனன் 14 லோகங்களைத்தாண்டுவதை இது குறிக்கிறது. அதற்கு மேல் தோகைபோல் வளைந்து காணப்படும் பகுதியை முறித்து மேல் நோக்கி எறிவதால், ப்ரஹ்ம கபாலம் பிளந்து கொண்டு வைகுண்டத்தை அடைகிறான் என்பதைக் குறிக்கும்).

இவ்வாறு திருமால் அடியார்கள், யாருக்காக இந்த பெரியதிருவத்யயனம் நடத்தப்படுகிறதோ அந்த ஜீவன் முக்தியடைய வேண்டிக்கொள்கிறார்கள். ஓர் அடியவனின் வேண்டுதலால் பாகவதாபசாரம் முதலான பாபங்கள் அனைத்தும் நீங்கப்பெற்ற ஜீவன்,

(“அநாவ்ருத்திƒ†ப்3த3õத3நாவ்ருத்தி: †ப்3த3õத் – 4-4-22, முக்தன் ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை;

என்று வேதச்சொற்றொடர் அப்படிக் கூறுகையால்). பரமபதத்தை அடைகிறான்.

பகவதபசாரத்திற்கு ப்ராயச்சித்தம் சுலபம். எம்பெருமான் என் அடியார் அது செய்யார் என்று தானே அந்த அபசாரத்தைப் போக்கி விடுகிறார் .

ஆசார்ய அபசாரமும், அந்த ஆசார்யனின் நற்குணங்களாலே தீர்ந்துவிடும். உயர் பிறப்பு, ஞானம், அனுஷ்டானம், நற்குணங்கள் பூரணமாயுள்ள ஆசார்யன், சீடனின் அபசாரங்களை பொறுத்து நற்கதியை அளித்திடுவார்.

ஆனால் எக்குடியில் பிறந்திருந்தாலும், எத்தனை வித்யைகளை அறிந்ததிருந்தாலும், எத்தனை முறை எம்பெருமானை அச்சித்தாலும், ‘பாகவதாபசாரம்’ செய்த ஒருவன் ஸந்நியாஸியாகவே இருந்தாலும், அவன் நற்கதியை அடையமாட்டான் என்று சாஸ்திரம் விதிக்கிறது.

பரம வைதிகனாயிருந்தாலும், பாகவதாபசாரத்தால் முக்தியடைய தடை ஏற்படுமாகில், பெரியதிருவத்யயனம் (கரும்புவில்லும் குடமும்) உத்ஸவம் நடத்தி திருமால் அடியார்களை ஆராதிப்பதால் பாகவதாபசாரம் நீங்கி நற்கதியடைகிறான் என்பதனை ஸ்ரீபாஞ்சராத்திரம் கூறுகிறது.

இந்த உத்ஸவத்தின், ஆழ்வார்கள் அருளிச்செய்த பிரபந்தங்களுள் திருவிருத்தம் எப்போது தொடங்கி சேவிக்கப்பெறுகிறது என்பது முன்பே கூறப்பட்டடுள்ளது.

திருவிருத்தம் ஏன் சேவிக்கப் பெறுகிறது என்றால், “மாறி மாறி பல பிறப்பும் பிறந்து இறந்து ஸம்ஸாரம் என்னும் துன்பக்கடலில் தவிக்கும் ஜனங்களை, துக்கம் தொடராமல் மோக்ஷ ஸாம்ராஜயம் பெற வேண்டும் என்றால், திருவிருத்தத்தின் ஓரடியையாவது கற்றுக் கொள்ளுங்கள் என்பது திருவிருத்தத் தனியன் தரும் செய்தியாகும்.

மேலும் “மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று ஆழ்வார் அனுஸந்திப்பது, திருக்குருகூரிலே நிற்கின்ற வராசநாயனாரைப் பார்த்தே அவ்வாறு சொன்னார் என்று பொருள் கொள்ளலாம்.

ஏனெனில் திருக்குருகூரிலே வராகநாயனாரின் திருவருளுக்கு இலக்கானவர் நம்மாழ்வார். “மெய் நின்று கேட்டருளாய், மெய் விண்ணப்பத்தை” என்று அந்வயம் கொண்டால், உள்ளதை உள்ளபடி உரைக்கும் இந்த கூற்றை, திருமேனி வடிவோடே எங்கு அலைந்து திரியாது நின்றவண்ணம் கேட்டருளாய்” என்று ஆழ்வார் உரைப்பதாகக் கொள்ளலாம்.

(அதாவது ப்ரளய காலத்தில் மூழ்கிப்போன பூமியை மேற்கொணர்ந்தது போல், ஸம்ஸாரக்கடலில் அழுந்தும் என்னை ஈடேற்றுதற்கு தஞ்சமாக உன்னை பற்றியிருக்கிறேன் என்று ஞானப்பிரானைச் சரணடைகிறார் நம்மாழ்வார்). –

“அஹம் ஸ்மராமி மத்3ப4க்தம் நயாமி பரமாம் க3திம்” – “என்னுடைய பக்தனை (அவன் சாகும் சமயத்தில்) நான் நினைக்கிறேன். மேலான கதிக்கு (அவனை நான்) அழைத்துச் செல்லுகிறேன்.) என்பது வராஹநாயனாரின் திருவாக்காகும். ஆதலால் மற்றைய இரண்டு சரம ச்லோகங்களிற் காட்டில், ‘வராஹ சரம ச்லோகமே’ முக்தியை சுலபமாக நல்குவதாகத் தேறுகிறது.

திருவிருத்தத்தின் முதலிலும் முடிவிலும் ஞானப்பிரானையே தஞ்சமாகப் பற்றியிருக்கிறார் நம்மாழ்வார்.

ஆதலால்தான் இந்த பிரபந்தத்தினை சேவித்து, வராக நாயனார் தஞ்சமாக அருளிய வார்த்தையை ஸ்மரித்து, “பரமபதித்த இந்த ஜீவனையும் திருவடிவாரங்களில் சேர்த்துக் கொள்வாய்” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவிருத்த சாற்றுமுறையிலே ப்ரார்த்தித்து, பெரியதிருவத்யயன உத்ஸவம் யாருக்காக நடத்தப் படுகிறதோ அந்த ஆத்மாவுக்கு நற்கதி அடைய வேண்டுகிறார்கள். எம்பெருமானும் அடியார்களின் வேண்டுகோளை செவிசாய்த்து நற்கதியளிக்கிறான்.

இவ்வாறு அனைவரும் நற்கதி அடைய வேண்டும் என்கிற நோக்கில் பெரியதிருவத்யயன உத்ஸவத்தை இராமானுச தர்சனத்தைச் சார்ந்தவர்கள் தொன்றுதொட்டு நடத்தி வருகின்றனர்.

  • கிருஷ்ணமாசாரி வாசுதேவன், ஶ்ரீரங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe