ஒருநாள் போட்டிகளில் எப்போது இரட்டைச் சதம் அடிக்கப்படும்னு உலகம் ஒருகாலத்தில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அதுவரை பாகிஸ்தானின் சயித் அன்வர் அடித்த 194 ரன்தான், ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்துவந்தது.பிறகு ஜிம்பாப்வே வீரர் ஒருவர் 194* ஐ தொட்டார்.ஆனால் அவராலும் 200 ஐ தொட முடியாமல் நாட்டவுட்டில் மட்டுமே இருக்கமுடிந்தது.
தள்ளி போய்க்கொண்டிருந்த இரட்டைச்சதம் சாதனையை முதன் முதலாக தொட்டது சச்சின் டெண்டுல்கர்தான்.2010 ம் ஆண்டில் தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிராக இச்சாதனையை அவர் நிகழ்த்தினார்.அதன்பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் இரட்டை சதத்தை அடித்திருந்தார்கள்.
இந்தியர்களில் சச்சினுக்கு அப்புறம் ஷேவாக், ரோஹித், சமீபத்தில் இஷான் கிஷன் என்று தொடரும் பட்டியலில் இன்று சுப்மன் கில் ம் இணைந்திருக்கிறார். இந்த முதல் நடந்த போட்டியில் ஓவர்வேற முடியப்போகிறது..200 சாத்தியப்படுமா என்று நினைக்கையில்…தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார் சுப்மன் கில்.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் பத்துமுறை இரட்டை சதங்கள் அடிக்கப் பட்டுள்ளன.அதில் ஏழு இரட்டை சதங்கள் இந்தியர்களால் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா மூன்று முறையும்,மற்ற வீரர்கள் தலா ஒருமுறையும் அடித்துள்ளார்கள்.
அதிகபட்சமாக ரோஹித் சர்மா அடித்த 264 ரன்தான் தற்போதைக்கு உலக சாதனையாக உள்ளது. ஒரு காலத்தில் கடினமாக இருந்துவந்த இந்த இரட்டைசத சாதனைகள் எல்லாம் இப்போ மானாவாரியாக அடிக்கப்பட்டு வருகிறது.இனி பலரின் எதிர்பார்ப்பு ஒருநாள் போட்டிகளில் “முச்சதம்” அடிக்கப்போகிற அந்த முதல்வீரர் யார் என்பதில் திரும்பியிருக்கிறது.
முதல் இரட்டை சதத்தை இந்தியாவின் சச்சின் அடித்ததுபோல், முதல் முச்சதமும் இந்திய வீரரால் அடிக்கப்பட்டால் மகிழ்ச்சியே! அந்த முச்சதம் அடிக்க போகும் இந்திய வீரர் யார்?
- வேலாயுதம் விக்னேஷ்