தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை – இளைஞர் தம்பதியினர் திருமணம் சார் பதிவளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28).
ஆட்டோ ஓட்டுநர், இவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுரேகா (25) என்ற திருநங்கையை சில ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
ஆனால் சட்டப்படி திருமணம் பதிவு செய்ய சென்ற போது சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கான நடைமுறை இல்லை என அதிகாரிகள் கூறினர்.
இதனையடுத்து மணிகண்டன், சுரேகா தம்பதிகள் கோவை மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் புகார் அளித்தனர். மேலும் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன், சுரேகாவிற்கு பதிவு திருமணம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை – இளைஞர் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது