
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமாக நீடிக்கிறது சிவகங்கை. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் ஊடுருவி வருவதால் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில், கடந்த வாரம் வரை சிகிச்சையிலிருந்த அத்தனை பேரும் படிப்படியாக வீடு திரும்பினர். கடைசியாக சிகிச்சையிலிருந்த ஒரே ஒரு நபரும் கடந்த வாரம் வீடு திரும்பியதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது சிவகங்கை.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அங்குள்ள பலரும் தங்களது பாதுகாப்பு கருதி சொந்த மாவட்டங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.
இப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை மற்றும் திருமணம் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி பொய்யாக இ- பாஸ் பெற்று பயணிப்பதாகச் சொல்லப் படுகிறது. காவல்துறை உள்ளிட்ட பணியில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தியும் சொந்தபந்தங்களை மாவட்டம் விட்டு மாவட்டம் அனுப்பி வைப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படி கடந்த ஒரு வாரத்தில் சென்னைவாசிகள் சிலர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்ட்ரமாணிக்கம், காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படி வந்தவர்கள் அது பற்றிய விவரங்களை பொதுசுகாதாரத் துறைக்கு தெரிவித்து தங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அரசின் உத்தரவு.
ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்குள் அப்படி வந்தவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அரசுக்குத் தெரிவித்ததாகவும் தெரியவில்லை. அப்படித் தெரிவித்தால் தங்களை தனிமைப்படுத்திவிடக் கூடும் என்பதால் தங்களின் வருகையை அரசுக்குச் சொல்லாமல் மக்களோடு மக்களாக அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாக ஆங்காங்கே தகவல்கள் கசிவதால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.