சினிமா போஸ்ட் புரொடெக்சன் பணிகளுக்கு அரசு அனுமதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்
cinema theatre
cinema theatre

கொரோனா ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சினிமா படத்தயாரிப்பி்ல் போஸ்ட் புரொடெக்சன் எனப்படும் பிந்தைய தயாரிப்புப் பணிகளுக்கு  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்தப் பணிகளும் நடைபெறாமல் தமிழ்த் திரையுலகம் முற்றிலுமாக முடங்கியது. மேலும் தமி்ழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், ஏராளமான திரைத்துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது. இத் தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை செய்வதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்திருந்தனர்.
 இதையடுத்து வரும் 11 ஆம் தேதி முதல் படத்தொகுப்பு, குரல் பதிவு, கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ், டிஐ எனப்படும் நிறகிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளுக்கு மட்டும் அதிகபட்சம் 5 பேருடன் பணியாற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு தயாரிப்பாளர்கள் கூட்டாக நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 அதில்,”கொரோனா பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மே 4-ம் தேதி குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட் புரொடெக்சன் பணிகளுக்கு வழங்கினால், ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து இந்தப் பணிகளுக்காக 50 நாட்களாகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவற்றை முடித்து, படங்களைத் தயார் செய்ய முடியும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

எங்களின் கோரிக்கையை கனிவாகக் கவனித்து உடனே நடவடிக்கை எடுத்து, நாங்கள் கேட்டுக்கொண்டது போலவே தமிழ்த் திரைப்படத் துறை இறுதிக்கட்டப் பணிகளை மே 11-ம் தேதி முதல் செய்து கொள்ள முதல்வரும், அமைச்சரும் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவைக் காக்கும் செயலை செய்ததற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையை பாரதிராஜா, கலைப்புலி தாணு, டி.ஜி.தியாகராஜன், கேயார், கே.முரளிதரன், டி.சிவா, கே.ராஜன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பி.எல்.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், ஞானவேல்ராஜா, ஹெச்.முரளி, கே.விஜயகுமார், தனஞ்ஜெயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், சஷிகாந்த், ஜே.எஸ்.கே, சி.வி.குமார், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்ததற்காக, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்களுக்கு அவர் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

அதில், தயாரிப்பாளர்கள் எங்களுடைய உறுப்பினர்கள் பணி செய்கின்ற இடங்களில், கண்டிப்பாக 5 அடி சமூக இடைவெளி மற்றும் மருத்துவ – சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முகக் கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். மேலும் டப்பிங் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கம்ப்யூட்டர் கருவிகள் சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களை ஆர்.கே. செல்வமணி கேட்டுக் கொண்டுள்ளார்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.