
காமன்வெல்த் போட்டிகள் – ஆறாம் நாள் – 03.08.2022
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்றைய தினத்தின் முதல் பதக்கமாக பளுதூக்குதல் போட்டியில் லவ்ப்ரீத் சிங் 109 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்திய வீராங்கனை துலிகா மான், ஜூடோ 78+ எடைப்பிரிவில் நியூசிலாந்தைச் சேர்ந்த சிட்னீ ஆண்ட்ரூஸை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் பிரிவில் தீபக் தேஸ்வால் 100 கிலோ எடைப் பிரிவில் ஃபிஜி வீரரிடம் தோல்வியுற்றார். அவருக்கு ரீப்பேஜில் வாய்ப்பு இருக்கிறது. குத்துச் சண்டையில் 48 கிலோ எடைப் பிரிவில் நீத்து அயர்லாந்து வீராங்கனை நிக்கோல் க்ளைடைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார்.
ஆண்கள் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முகம்மது ஹுஸ்ஸாமுதீன் நமீபிய வீரரைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார். இருவருக்கும் ஒரு பதக்கம் நிச்சயம். ஜோஷ்வா சின்னப்பா, ஹரிந்தர் பால் சிங் இருவரும் ஸ்குவாஷ் போட்டியில் இலங்கை வீரர்களைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடத் தகுதி பெற்றனர்.
இந்திய மகளிர் அணி ஹாக்கிப் போட்டியில் 3-2 கோல் கணக்கில் கனடா அணியைத் தோற்கடித்தது. ஆண்கள் அணி கனடாவை 8-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணியைச் சேர்ந்த மிருதுல் போர்கோஹைன் ஸ்காட்லாந்து வீரரை மூன்றாவது சுற்றில் வென்றார்.
சௌரவ் கோஷல் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய மகளிர் டி20 கிரிக்கட் போட்டி தொடங்கியிருக்கிறது.