
- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்
ஆடி மாதம் என்றவுடனே பாய்ந்து வரும் நதிகளே நமக்கு நினைவில் வருகின்றன. நதிகள் நமக்கு வாழ்வியலுக்கு தேவையான பல அற்புத விஷயங்களை விளக்குகிறது.
நதிகளானது பாகுபாடில்லாம் அனைவருக்கும் உபயோகமாய் இருப்பது, தன் பாதையில் வரும் சங்கடங்களையும் கடந்து, வேண்டாதப் பொருட்களையும் எடுத்துச் செல்வதையும் தனக்கு இடப்பட்ட ஒரு கடமையாகவே செய்கிறது. முன்னாலேயே பயணிக்கும் நதிகள் ஒரு போதும் பின்னோக்கி பார்ப்பதில்லை – ஆகியவை நதிகள் நமக்கு தரும் சில வாழ்வியல் தத்துவங்கள்.
நதிகள் இருக்கும் நகரங்களில் விவசாயத்திற்கு நல்ல வாய்ப்பு அமைகிறது. நதிகள் உள்ள இடங்களில் கால்நடைகளும் செழிப்பாக இருக்கும். கால்நடைகள் செழிப்பாய் இருந்தால் அந்நகரத்து மக்களின் வாழ்வு சிறக்கும் என்பது பெரியோர்களின் வாக்கு.
கடவுளின் அருளினால் என் வாழ்க்கையிலும் நதிகளின் பங்கு சிறுவயதிலிருந்தே இருந்து வருகிறது. இறைவன் என்னுள் வைத்த கலையை வளர்த்துக் கொள்ள அந்தந்த நகரங்களின் பாய்ந்தோடும் நதிகளின் தண்ணீரே உரமாய் இருந்து இருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ?
பத்திரிகையாளராய், பல சமயங்களில் மொழிபெயர்ப்பாளராய் தேவையானவர்களுக்கு உதவும் போது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நான் எழுதிய ஒரு படைப்பை இங்கே பகிர்கிறேன்.
கரை புரண்டோடும் தாமிரபரணியில் ( திருநெல்வேலி) தவழ்ந்து
காவிரிக் கரைதனிலே ( மாயவரம்) கல்வியை பயின்றேனம்மா;
கரையில்லா கல்வியையும் கடலென கற்றேனம்மா;
கடமை பின்தொடர எந்தையும் என்னவரை-
காந்தி- வினோபா பாவே கர்ம பூமியில் (வர்தா) தேர்ந்தெடுக்க
கனிவாய் நானும் கணவரகம் புகுந்தேனம்மா;
கனிவான இந்தியும், மராட்டியும் எட்டாக்கனியாக; களைத்திருந்த எனக்கு கைகொடுத்தால் ஒரு சகி;
களைத்தெறிந்தேன் என்னுள் இருந்த இயலாமையை;
களிப்புடன் கற்றேன் அவ்விரு மொழிகளை;
கற்ற மொழிகளினால் நாளிதழும் கைகொடுத்ததம்மா;
கருத்துடனே என் மொழிபெயர்ப்பினால் வளர்ந்தேனம்மா;
கவிதை நடையும் கைகொடுக்க களிப்படைந்தேனம்மா;
இப்போது கோதாவரி கரைதனில் இருந்து ( நாந்தேட்) நான்
கவிஞர்களுடன் கவிபாடும்
கொடுப்பினையும் பெற்றேனம்மா!
இது தான் நதிகளினால் நான் அடைந்த பயன்கள்
இதனால் நதிகளின் அருமையை அறிந்து நதிகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த என் படைப்புகளின் மூலம் முயற்சி செய்து வருகிறேன். இயற்கையை பாதுகாக்க வேண்டிய தருணம் இது.