மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:

election polling machine tskrishnamurthy - 2026

தேர்தல்: சிறப்புப் பேட்டி

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சந்திப்பு: எஸ். சந்திரமெளலி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

19 வயதில் பாங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தவர். அதன்பின் 1963ல், இந்திய வருவாய்த்துறையில் சேர்ந்தார். டெல்லியில் மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் திறம்படப் பணியாற்றியவர். 2000 முதல் 2004வரை தேர்தல் ஆணையராகவும், 2004 பிப்ரவரி முதல் 2005 மே வரை தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பணியாற்றியவர்.

தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம் இவர்தான். இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் குறித்து இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மனைவி கீதா ஒரு வீணைக் கலைஞர்.


*உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கே 18 வயது நிரம்பிய குடிமக்கள் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, மே. வங்காளம், அஸ்ஸாம், மற்றும் புதுச்சேரி சட்ட மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூடு பறக்கிறது.

இந்தியாவின் தேர்தல் ஆணையராகவும், அதனையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. தற்போது சென்னையில் வசித்து வரும் அவர் அமுதசுரபிக்கு அளித்த தேர்தல் சிறப்புப்பேட்டி!


“தேர்தல் கமிஷன் ஒரு சுதந்திரமான அமைப்பு என்று உறுதிப்படுத்தியதில் டி.என்.சேஷனின் பங்கு முக்கியமானது. அப்படி ஒரு நிலை ஏற்பட இந்தியா சுதந்திரம் பெற்று அத்தனை காலம் ஆனதற்கு என்ன காரணம்?”

“திரு. டி.என்.சேஷனுக்கு முன்பும் கூட தேர்தல் கமிஷன் பாரபட்சமில்லாமல்தான் நடந்துகொண்டது. அந்தக் காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் எண்ணிக்கை அதிகமில்லை. தேர்தல் காலத்தில் அந்தக் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று புழுதிவாரித் தூற்றிக் கொண்டதில்லை.

எனவே, முந்தைய தேர்தல் கமிஷனர்களுக்கு, தேர்தல் நடத்துவது அத்தனை கஷ்டமாக இல்லை.

அதே சமயம், தேர்தல் கமிஷன் வரலாற்றில், அது ஒரு சுதந்திரமான அமைப்பு என உறுதிப்படுத்தியதில் திரு. சேஷனுக்கு முக்கியமான பங்கு உண்டு.

அவரது காலகட்டத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைதான் அவர் தேர்தல் கமிஷன் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதை உறுதிப் படுத்தவேண்டிய கட்டாயமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

அரசியல் கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் அதைச் செய்தார். அதன் மூலமாக சில நல்ல மாற்றங்களும் ஏற்பட்டன.

இன்று ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்ட அவலம் நிலவுகிறதே?”

“கம்பெனிகள், அரசியல் கட்சிகளுக்கு சில விதிமுறைகளின்படி லாபத்தில் ஒரு பகுதியை நன்கொடை தரலாம் என இருந்தது. ஆனால், அதை மாற்றி, தேர்தல் பத்திரத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அன்னிய நிறுவனங்கள் கூட பொய்யான பெயரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரலாம்; கறுப்புப் பணத்தையும் தரலாம். இது தவறு என சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது.

தேர்தல் பத்திரம் சரியான வழி இல்லை என்பதுதான் என் கருத்தும். கம்பெனிகள் பணம் கொடுப்பது களங்கமான அரசியலுக்கு வழி வகுக்கும்.

தேசிய அளவில் தேர்தல் நிதி அமைப்பு என்று ஓர் அமைப்பினை உருவாக்கி, அந்த அமைப்பு நன்கொடைகள் பெற்று, விதிமுறைகள் வகுத்து, அதன்படி அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலுக்கு செலவு செய்ய நிதி கொடுக்கலாம் என நான் ஓர் ஆலோசனை சொல்லி இருக்கிறேன்.

ஜெர்மனியில் கூட இதுபோன்ற ஓர் ஏற்பாடு அமலில் உள்ளது. மேலும், இன்று ஏராளமாக பணம் வைத்திருப்பவர்கள்தான் தேர்தலில் நிற்கமுடியும் என்ற நிலைமை இருக்கிறது. இது வருத்தத்துக்குரியது.

“ஊழல் செய்து குறிப்பிட்ட காலம் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க தடை செய்யும் சட்டம் நம் நாட்டில் இருக்கிறது. ஆனாலும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் அதிக அளவில் அதன் கீழ் தண்டனை பெறவில்லையே?”

“அதற்கு நம் நீதித்துறை நடைமுறைகளில் குறிப்பாக தேர்தல் தொடர்பான வழக்குகள் விஷயத்தில் நிறைய மாற்றங்கள் தேவை.

தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஒரு வருடத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் தேர்தல் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.

அத்தகைய வழக்குகளை ஐந்தாறு ஆண்டுகளுக்கு இழுத்துக்கொண்டே போனால், அதன் அடிப்படை நோக்கமே தகர்ந்து போய்விடுகிறது.

தேர்தல் முடிவு வந்து 45 நாட்களுக்குள் அது குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என விதி உள்ளது. ஆனால் அந்த வழக்கை இவ்வளவு காலத்தில் முடிக்க வேண்டும் என விதி ஏதுமில்லை.

பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் காலம் முடிந்த பிறகும், அவை தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வருவதில்லை.

பிரேசில் நாட்டில் தேர்தல் கமிஷனும், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியும் சேர்ந்து, தேர்தல் டிரிபியூனல் ஒன்றை அமைத்து இத்தகைய வழக்குகளில் உடனடியாக முடிவுகள் எடுக்கிறார்கள்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

“ஓட்டுக்குப் பணம் என்பது ஜனநாயகத்துக்கு கேவலம் இல்லையா?”

“ஆமாம்! ஆமாம்! அதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

“மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து சில கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?”

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் எந்தவிதமான தவறும் இல்லை. அதை தவறாகப் பயன்படுத்த முடியாதபடி அதில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

அந்த இயந்திரங்கள் பாதுகாப்புத் துறை தொடர்பு உடைய பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களால் இல்லை.

அமெரிக்காவில், ஒருமுறை தனியார் நிறுவனம் மூலமாக வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரித்தார்கள். ஓர் அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுத்த கம்பெனி என்பதால், இயந்திரங்களின் நேர்மையும், பாதுகாப்பும் கேள்விக்குள்ளாயின.

வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்பட்டபோது வாக்குச் சாவடிகளில் ஏராளமான தில்லுமுல்லுகளும், வாக்குச் சாவடிகளையே கைப்பற்றும் வன்முறைகளும் நடந்தன. பீகார், மே. வங்காளம் போன்ற சில மாநிலங்களில் இது வெகு சகஜம்.

எனவே, நாம் ஒரு போதும் வாக்குச் சீட்டுப் பயன்பாட்டுக்குப் போகக் கூடாது. இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் நிறைய அனுகூலங்கள் உள்ளன. அதில் இப்போது “வி பாட்” போன்ற இன்னும் சில கூடுதல் வசதிகளும் வந்துள்ளன.

வாக்களிப்பு துவங்குவதற்கு முன்பு, மாதிரி வாக்குப் பதிவு நடத்தி எல்லாம் சரியாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தும் செலவு கணிசமாகக் குறைகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை.

“தேர்தல் காலத்தில் பண நடமாட்டத்தைக் கண்காணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் உண்மையிலேயே பலனளிக்கிறதா?”

“கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை வரவேற்கலாம். ஆனால், இதன் மூலமாக பண நடமாட்டத்தை முற்றிலுமாக நிறுத்திவிட முடியாது.

இப்போதுதான், டோக்கன் கொடுத்துவிட்டு, தேர்தலுக்குப் பின் பணம் கொடுப்பதாகவும், கண்காணிப்பாளர்களை திசைதிருப்பிவிட்டு, பணத்தைக் கொண்டு போவதாகவும் தெரிய வருகிறதே!

“தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்கள் என்று பலர் மீது வழக்குகள் பதியப்படுகின்றன. தேர்தலுக்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆகின்றன?”

“ஆட்சிக்கு வரும் கட்சி தங்கள் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை கண்டுகொள்ளவே மாட்டார்கள். எதிர்க் கட்சியினர் மீது என்றால், பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் நேரத்தில், ஒரு சில விஷயங்களில் மட்டுமாவது உடனடி நடவடிக்கை எடுத்து, தண்டனையும் வழங்க வேண்டும். அப்போதுதான் அந்த வழக்குகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும். நடவடிக்கை இல்லாது போனால், ஒருவரும் அந்த நெறிமுறைகளுக்கு மதிப்பளிக்கமாட்டார்கள்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

“தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே நடந்துகொள்வதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்களே!”

“தேர்தல் கமிஷனைப் பொறுத்தவரை இது போன்ற குற்றச்சாட்டுக்கள் வாடிக்கையானவைதான். என்னைக் கூட பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சில கட்சியினர் சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரை தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களில் 90% உண்மையானவை இல்லை. தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டுக்களில் பல ஆதாரமில்லாதவை. புகார் சொல்பவர்களால் நிரூபிக்க முடியாதவை.

தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையம் என்றாலும், அது தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்வது மாநில அரசு அதிகாரிகளும், ஊழியர்களும்தான்.

ஆங்காங்கே சில குளறுபடிகளும், தவறுகளும் நிகழலாம். ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்தின் நேரடிப் பார்வையில்தான் அவை நடக்கின்றன என்று சொல்வது தவறு.

“வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் குறித்த சர்ச்சைகள் பற்றி?”

“நான் இருந்த காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டுக்கு வீடு சரிபார்ப்புப் பணி நடக்கும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடக்கவில்லை.

அரசியல் சாசனப்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இந்தியக் குடிமக்கள்தான் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். ஆகவே, தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி அவசியமாகிவிட்டது.

அது தேர்தல் கமிஷன் செய்யவேண்டிய முக்கியமான கடமை. அது துவங்கிய நேரம் குறித்த சர்ச்சைக்குள் நான் போகவிரும்பவில்லை.

“தமிழக வாக்காளர்களுக்கு உங்கள் அறிவுரை?”

“வாக்களிப்பது உங்கள் தேசியக் கடமை. எனவே, தவறாமல் வாக்களியுங்கள். ஊடகங்கள், அரசியல் கட்சிகள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு, வேட்பாளர்களின் யோக்யதாம்சங்களைத் தெரிந்துகொண்டு, நீங்களே சிந்தித்து, நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!

தேர்தல் நாளன்று வாக்களிப்பதைவிட முக்கியமானதாக வேறு எதையும் கருதாதீர்கள்!

(அமுதசுரபி ஏப்ரல் 2026 இதழிலிருந்து.)

Related articles

Recent articles

spot_img