வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

annamalai welcome amit sha in combatore - 2026
  • B.R. மகாதேவன்

பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் பிரச்னை தேர்தல் வெற்றிகள், வியூகங்கள், கூட்டணிகள், லாபிகள், கொள்கைகள் தொடர்பானவை அல்ல.

அது அதிகாரப் பகிர்வு தொடர்பானது. பணி சுதந்தரம், சர்வ அதிகாரம் தொடர்பானது.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

முழு அதிகாரமும் தன்னிடம் இருக்கவேண்டும் என்பது ஹிட்லரின் விருப்பம் மட்டுமல்ல; காந்தியின் விருப்பமும் கூட (காந்தியின் உதாரணத்தை விரும்பாதவர்களுக்கு: இராஜ ராஜ சோழன் கூட ஒருவகையில் சர்வ அதிகாரம் கொண்டவர்தான்). எனவே சர்வாதிகாரம் என்பது சரியா தவறா என்பது யார் முன்வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது மட்டுமே.

அண்ணாமலை சர்வ அதிகாரத்தை / சுதந்தரத்தை விரும்பினாரா..?

அரசியல் சமரசங்களை அவர் முன் யூகித்திருக்கவில்லையா?

என்னால் கட்சியை வளர்க்க முடியும் என்று நம்பி என்னிடம் பொறுப்பை ஒப்படைக்கிறீர்களென்றால் என் வழியில் செய்ய அனுமதியுங்கள். இதுதானா அண்ணாமலையின் எளிய வேண்டுகோள்.

ஏன் இதில் மோதல் வந்தது?

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  1. முன்னாள் தலைவர்களைக் கையாண்ட விதம்.

எல்.முருகன், இல.கணேசன், சி.பி.ஆர்., தமிழிசை, ம.வெங்கடேசன் என பலரும் பல்வேறு பொறுப்புகள் கொடுத்து கெளரவமாக வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் (பொன்னார், ஹெச்.ராஜா போன்றவர்கள் கொஞ்சம் பின்னரங்குக்குச் சென்றனர்).

இதை முன்னாள் தலைவர்களுக்குச் செய்த மரியாதை என்றும் சொல்லலாம். கொஞ்சம் விலகி நில்லுங்கள் என்று கை காட்டியதாகவும் சொல்லலாம்.

உள் அரங்கில் இது தொடர்பாகப் பேசப்பட்டவை ஆரோக்கியமாக இருந்திருக்கவில்லை. இதுவே பின்னர் வெளிப்படவும் செய்தது.

*

  1. ஊழல் எதிர்ப்புப் போராட்டம்

திமுகவை எதிர்ப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட டி.எம்.கே. ஃபைல்ஸ் நடவடிக்கை முழுக்கவும் அண்ணாமலையின் விருப்பம் மட்டுமே.

மத்திய தலைவர்களும் மாநிலத்தில் சிலரும் விரும்பியிருக்கவில்லை.

இரு தரப்பினருக்கும் அவரவர் பக்க நியாயங்கள் இதில் இருந்தன.

காமன் வெல்த் ஊழல், கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என பல ஊழல்களை அம்பலப்படுத்தித்தான் பாஜக 2014-ல் காங்கிரஸையே வீழ்த்தியிருந்தது. நானும் லஞ்சம் வாங்கமாட்டேன்; யாரையும் வாங்கவும் விடமாட்டேன் என்பதுதான் நரேந்திர மோதியின் முத்திரை முழக்கம். இன்றுவரை அவர் அதை திறமையாக அமல்படுத்தியும் வந்திருக்கிறார்.

ஆனால் தமிழகத்துக்கு இந்த ஊழல் எதிர்ப்பு பலன் தராது என்று பல தலைவர்கள் சொன்னார்கள். அதற்கு அவர்களிடம் பல புள்ளிவிவரங்கள் இருந்தன.

திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழலில் கரை கண்டவை. இருந்தும் தமிழக மக்கள் மாறி மாறி இந்த இரண்டு கழகங்களின் பின்னால் மட்டுமே அணி திரண்டனர். இங்கிருந்த கம்யூனிஸ்ட்கள் கூட இந்த ஊழலை ஒரு பொருட்டாக மதித்து ஒருபோதும் களமாடியதில்லை. காங்கிரஸின் நிலைமை வேறு. விசிக, பாமக கூட ஊழலைப் பிரதான விஷயமாக முன்வைத்துக் களமாடியதில்லை.

திமுகவை எதிர்க்கப் பல வழிகள். அதில் ஊழல் எதிர்ப்பும் ஒரு ஓரமாக இருக்கும். இதுதான் தமிழக அரசியல் கள நிலைமை.

தமிழக மக்களுமேகூட ஒப்பீட்டளவில் பிற மாநிலத்தினரைவிட ஊழலில் திளைப்பவர்களே. வோட்டுக்கு காசு; டிவி, கிரைண்டர், ஃபேன் இலவசங்கள்; 2000 ரூபாய் வெள்ள நிவாரண நிதியை எட்டாவது மாடியில் இருந்தவர்கள் கூட காரில் வந்து வாங்கிச் செல்லும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகுந்தவர்கள். அமைச்சர் எவ்வழி மக்கள் அவ்வழி… அல்லது மக்கள் எவ்வழி அமைச்சர்கள் அவ்வழி.

எனவே இந்தக் களச் சூழலில் ஊழல் எதிர்ப்புக்கு இத்தனை முக்கியத்துவம் வேண்டாம் என்று மத்திய தலைமையும் மாநில சக தலைவர்களும் சொன்னபோது, நான் மேனேஜர் அல்ல என்று அண்ணாமலை தெளிவாக பதில் சொன்னார்.

அவர் ஒரு காவல்துறை அதிகாரி. அவருடைய எல்லைக்குள் முழு அதிகாரம் அவரிடமே இருக்கும். இருக்கவேண்டும். பாஜகவிலும் அதையே எதிர்பார்த்தார்.

மத்திய தலைமை இதை விரும்பவில்லை.

மக்கள் ஒருவேளை ஊழல் கட்சிகளை எதிர்ப்பதில் ஆர்வத்துடன் இருந்திருந்தால் மத்திய பாஜக நிச்சயம் அண்ணாமலையின் ஊழல் ஒழிப்பு முயற்சிக்கு முழு ஆதரவு தந்திருப்பார்கள்.

இன்னொரு வகையில் பார்த்தால், மத்திய பாஜகவுமே ஊழல் தொடர்பான முழக்கங்களை ஆட்சிக்கு வந்ததோடு நிறுத்திக் கொண்டுவிட்டார்கள்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

சுப்ரமணியம் ஸ்வாமிக்கு மத்திய தலைமையுடன் விரிசலுக்கான பல காரணங்களில் ஒன்று: ஊழல்வாதிகளைத் தண்டிப்பதில் பாஜக தீவிரம் காட்டவில்லை என்பதுதான். அண்ணாமலைக்கும் இது சார்ந்த வருத்தம் உண்டு.

போதாக்குறையாக ஊழல் வழக்குப் பேச்சு வெளியே வந்ததும் முதல்வர் உட்பட திமுகவினர் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று நேராக பிரதமரையோ நிர்மலா சீதாராமனையோ சந்தித்து காலில் விழுந்துவிட்டு வந்துவிடுவார்கள்.

காங்கிரஸ் காலத்தில் நியமிக்கப்பட்ட வருமான மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதோடு வழக்கை ஓரங்கட்டுவார்கள். அல்லது நீர்த்துப் போகவைப்பார்கள்.

இந்த விஷயத்தில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது… யார் பக்கம் குறைவாக இருக்கிறது என்ற முடிவெல்லாம் அவ்வளவு எளிதில் எடுக்கமுடியாது.

மக்கள் ஊழலைப் பெரிதாக நினைக்கவில்லை; எனவே டி.எம்.கே. ஃபைல்ஸ் முயற்சி தேவையில்லை என்று மத்திய தலைமை சொல்லியிருக்கலாம்.

திமுகவை அடக்கி வைக்க இதுவே வழி என்று அண்ணாமலை நினைத்திருக்கலாம்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது மத்திய அரசா… மாநில அரசா… மத்திய பாஜகவா… மாநில பாஜகவா..? யார் எடுக்கும் முடிவு அமலாகவேண்டும் என்ற சிக்கலாக இது மாறியிருக்கிறது.

*

  1. காட்சி ஊடகம் மற்றும் பிற ஊடகங்களைக் கையாள்வது எப்படி..?

இந்த விஷயத்திலும் அண்ணாமலை மிகத் தெளிவாக கட்சித் தலைவர் என்ற வகையில், தான் மட்டுமே ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார்.

முன்பெல்லாம் தமிழைசை கட்சித் தலைவராக இருப்பார். ஹெச். ராஜா ஒரு கருத்து சொல்வார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை சொல்வார். இப்படியாக கட்சி ஜனநாயக வழியில் இயங்கி வந்தது. இதை அண்ணாமலை விரும்பவில்லை. எனவே டி.வி. விவாதங்களில் பாஜக பெயரில் யாரும் கலந்துகொள்ளவேண்டாம் என்று சொன்னார்.

இதை அண்ணாமலையின் பிராண்ட் பில்டிங் நடவடிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம். கட்சியின் தீர்மானம் தெளிவாக, ஒன்றாக இருந்தால்தான் நல்லது. ஆளாளுக்கு ஒன்று பேசுவது சரியல்ல என்ற நடவடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், திரையுலகத்தைப் பற்றிப் பேசவேண்டாம் என்று அண்ணாமலை முடிவு செய்தார். இது நமது பிரம்மாஸ்திரத்தை நாமே பரணில் போடுவதற்கு சமம்.

உண்மையில் தமிழகத்தில் திமுகவின் பலமே அதன் பிரசார யுக்திகள்தான். அதிலும் திரை உலகமும் பிற பிரபலங்களும் திமுகவின் ஊதுகுழல்களாகவே எப்போதும் செயல்பட்டனர். மக்கள் மனதில் பாஜக மீதான விலகலை அதைக் கொண்டே செய்துகாட்டினார்கள். அப்போது நிச்சயமாக பாஜக அவர்களை அந்தக் களத்தில் மோதி வீழ்த்த முயற்சி செய்திருக்கவேண்டும்.

எதிரியின் பலம் யானைப் படையென்றால் நாமும் வலுவான யானைப் படை கொண்டு மோதியாகவேண்டும். போரின் அடிப்படை அரிச்சுவடிப் பாடம் இது.

ஆனால், அண்ணாமலை காட்சி ஊடகங்கள் பற்றிப் பேசவே கூடாது என்று சொன்னார். உண்மையில் ஊடகங்களைக் கையாள்வதில் மத்திய பாஜகவுமே பெருமளவுக்குத் தோற்றுத்தான் போயிருக்கிறது. கருத்து சுதந்தரம், கலை சுதந்தரம் என்ற பெயரில் இந்து, இந்தியா, மோதி, பாஜக, இந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ். எல்லாம் தாக்கப்பட்ட அளவுக்கு வேறு யாரும் தாக்கப்பட்டதில்லை. மத்திய பாஜகவும் இந்தப் போரில் உரிய கவனம் செலுத்தியதே இல்லை.

ஆனால், தேசம் முழுவதும் வெற்றி முகத்தில் இருந்த மத்திய பாஜக அந்த விஷயத்தில் அப்படி இருந்ததில் ஒருவகையில் எந்தத் தவறும் இல்லை. தமிழக பாஜகவும் அப்படி இருந்தது மிக மிகப் பெரிய தவறு. ஏனென்றால் இங்கு வெற்றி பெற காட்சி ஊடகப் பிரசாரங்கள், பதிலடிகள் பெரிதும் உதவியிருக்கும்.

உண்மையில் ஊழலை ஒழிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்ற வகையில் திரையுலகில் புழங்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்கவாவது களம் இறங்கியிருக்கவேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவே இல்லை. தினகரனுடனான அவருடைய நட்பைக்கூடப் புறம் தள்ளிவிடலாம். ஆனால், திரையுலகை அவர் எதிர்க்காமல் இருப்பதென்பது நம் வெற்றி வாய்ப்பை நாமே கை கழுவுவது போன்றது.

ஆளுங்கட்சி தனது அரசியல் செல்வாக்கை வைத்து திரையுலகை தன் ஏகபோக ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. இதைத் தகர்ப்பதைத் தவிர ஒரு துணிச்சலான காவலருக்கு வேறு என்ன இலக்கு இருந்திருக்கமுடியும்?

  1. பிராமணர்களுடன் அண்ணாமலைக்கு மோதலா..?
ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

இல்லை.

அண்ணாமலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எல்லா ஜாதியிலும் ஆட்கள் இருப்பதுபோல் பிராமண ஜாதியிலும் உண்டு. ஊடகங்களில் அதிகம் பேசும் எதிர்த்துப் நபர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதால் பிராமண லாபி அண்ணாமலைக்கு எதிரானது என்று திராவிட மாஃபியா அழகாக ஒரு கட்டுக்கதையை முன்னெடுத்தது. அதை திராவிட சிந்தனையில் ஊறிய பலரும் இன்றும் சுமந்துகொண்டும் இருக்கிறார்கள்.

ஊடகங்களில் பாஜக சார்பில் யாரும் பேசவேண்டாம் என்று அண்ணாமலை தன்னுடைய தலைமைக் காலத்தில் முடிவெடுத்ததென்பது பிராமணர்கள் பேசுவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்தார் என்று சொன்னால் எப்படிப் பிழையாக இருக்குமோ அதுபோன்றதுதான் பிராமண சமூக ஊடகவியாளர்கள் சிலர் எதிர்ப்பதை பிராமண லாபியின் எதிர்ப்பாகச் சொல்வதும் பிழையான பார்வையே.

*

  1. 2024 தேர்தல் முடிவுகள்.

ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டிருந்தது; ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்டிருந்தது. 400 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும் என்ற நல்லெண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு பல நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. என் மண் என் மக்கள் யாத்திரையில் அது மக்கள் மத்தில் கொண்டு செல்லப்பட்டிருந்தது (அல்லது அப்படி நம்பப்பட்டது).

திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 2016-2021 காலகட்ட மோதி எதிர்ப்பு வெகுவாக வலுவிழந்துவிட்டிருந்தது. கழகங்கள் இல்லா தமிழகம் என்ற முழக்கம் அழுத்தமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அண்ணாமலை என்ன எதிர்ப்பார்ப்புடன் தலைமைப் பதவிக்கு வந்திருந்தாரோ அதற்கான இறுதித் தேர்வு.

நம் கூட்டணிக்கு 18 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. தனியாக 11 % மாக வாக்கு அதிகரித்திருக்கிறது.

முன்பு எவ்வளவு இருந்தது?

3%.

முன்பு எத்தனை இடங்களில் போட்டியிட்டோம்?

2019-ல் ஐந்து இடங்கள். 2014-ல் 9 இடங்கள்.

2014-ல் ஒன்றில் வெற்றி… இல்லையா?

ஆமாம்.

இப்போது?

11% வாக்கு உயர்ந்திருக்கிறது.

போட்டியிட்ட இடங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறது?

ஏகதேசம் நான்கு மடங்கு.

ஆக அதனால் வாக்கு சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. கண்டெஸ்டட் வோட் ஷேரில் என்ன மாற்றம்?

  • 2009: ~7.1% • 2014: ~24% • 2019: 28.52% • 2024: 19.6%

ஆக முன்னேற்றம் எதுவுமில்லை. நல்லது நாம் கடினமாக உழைத்தோம். மக்கள் வாக்களிக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்வோம்.

இதுதான் மத்திய பாஜக 2024 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொண்ட விதம்.

எந்த நிலையிலும் கொடுத்த வாக்கை / டார்கெட்டை நிறைவேற்றவில்லையே ஏன் என்று கேட்கவே இல்லை. அமித்ஷாவும் சேர்ந்து களமாடிக் கிடைத்த தோல்வி அல்லவா? அவர்களுக்கும் அதில் பொறுப்பு இருக்கிறதே. தனிமைப்படுத்தி யாரையும் தண்டிக்க அவர்கள் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

*

  1. கடைசியாக மிக முக்கியமான விஷயம்: இறுதியாக ஏற்றப்பட்ட மயில் பீலி: அதிமுகவுடனான கூட்டணி.

அண்ணாமலை இதை விரும்பவில்லை. நான் தலைவராக இருக்கும்வரை அது நடக்காது என்றார். சரி என்று தலைமை முடிவெடுத்தது.

இங்கும் தில்லியா… தமிழகமா; அண்ணாமலையா… அமித்ஷாவா என்ற கேள்வியே எழுந்தது.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி. மத்திய அரசின் திட்டங்கள், முடிவுகளை மாநில அரசு நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அதைத்தான் மத்திய அரசு விரும்பும்.

காங்கிரஸ் தன் சொல் பேச்சு கேட்காத மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. பாஜக, ஆட்சியில் அதைச் செய்ததில்லை. கட்சியில் அதைச் செய்திருக்கிறது.

செய்யும்.

இந்தக் கூட்டணி ஜெயிக்காது என்று சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை என்று கண்ணோடு கண் பார்த்து, சொல்லாமல் சொல்லிவிட்டு அண்ணாமலை விடைபெற்றிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடு என்று அவர் சொன்னார். உண்மையில் அது தமிழ்த் திமிர்.

தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.

ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்?

விஜய்+அதிமுக கூட்டணி அமைத்திருப்பார்கள். அல்லது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக முன்பே விஜய் பக்கம் நகர்ந்திருப்பார்கள். இப்போது அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருப்பதால் இந்து வோட்டுகள் ஓரணியில் சேர்ந்துவிடும். திமுக கூட்டணி பிரிந்தால் அதிமுக வென்றுவிடும் என்று சரியாக முடிவெடுத்துத்தான் விஜயுடன் தேர்தலுக்கு முன்பாக இணையவில்லை.

பாஜகவும் அதிமுகவும் சேர்ந்திருக்காவிட்டால் எளிதில் திமுகவை கை கழுவியிருப்பார்கள். அல்லது அவர்கள் சேர்ந்து இருந்திருந்து, திமுகவே வென்றிருக்கும்.

47 இடங்களில் அதிமுக வென்றது. அதில் 44 இடங்களில் இரண்டாம் இடம் திமுக. ஆக பாஜக அதிமுக பிரிந்து நின்றிருந்தால் அதிமுக இவற்றில் தோற்றிருக்கும்; திமுக வென்றிருக்கும்.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இன்னும் சொல்லப்போனால் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால் பாஜக முழுவதுமாகத் தனிமைப்பட்டுத்தான் போயிருக்கும். தினகரன், பாமக எல்லாம் நிச்சயம் அதிமுக இருக்கும் இடத்தில்தான் சேர்ந்திருப்பார்கள். அல்லது விஜய் பக்கம் நகர்ந்திருப்பார்கள்.

உன் வழியில் போயிருந்தால் இதுதானே நடந்திருக்கும் என்று அமித்ஷாவும் கண்ணோடு கண் பார்த்துக் கேட்டிருப்பார்.

நம் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று பதில் சொல்ல முற்பட்டிருந்தால் அதை அமித்ஷா கேட்டிருக்க வாய்ப்பில்லை.

*

உண்மையில், இந்த ஆறு விஷயங்களிலும் மத்திய பாஜக பக்கம் அதாவது அமித்ஷா பக்கம் இருக்கும் நியாயங்கள் மிக அதிகம்.

அதாவது தமிழகத்தில் தொடர் தோல்விக்கான முக்கிய காரணங்கள் வேறு. அமித்ஷாவின் அணுகுமுறையா… அண்ணாமலையின் அணுகுமுறையா எது சரி என்ற கேள்விக்கே இடமில்லை. இருவருடைய அணுகுமுறையும் தோற்ற இடத்தில் யாரை உயர்ந்தவராகச் சொல்லமுடியும்?

அமித்ஷா பிற மாநிலங்களில் தொடர் வெற்றியைப் பெற்றுக் காட்டியிருக்கிறார். அந்த வகையில் அவரே பாஸ்.

மத்திய பாஜக, தமிழகத்துக்கு எவ்வளவோ செய்தும் தமிழக மக்கள் உரிய நன்றியும் மரியாதையும் காட்டாமல் இருப்பதுபோலவே தமிழக பாஜகவிலும் பலர் இருக்கிறார்கள்.

திராவிடர்களைப் போலத்தானே திராவிட பாஜகவும் இருக்கமுடியும்.

இங்கு திராவிட இயக்க அணுகுமுறையே வென்று வந்திருக்கிறது. எனவே, அண்ணாமலை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

என் மண்… என் மக்கள் என்று அவர் முழங்கியது அமித்ஷாவைப் பார்த்துத்தான் என்று இருக்கும்வரையில் இதில் வருத்தப்பட அதிகம் எதுவும் இல்லை. இரு தனி நபர் ஆளுமைகளுக்கு இடையிலான மோதல் என்று அதைத் தாண்டிவிடலாம்.

இந்திய தேசியம் நோக்கி, பாரத மாதாவை நோக்கிச் சொன்னதாக அது ஆகாமல் இருக்கவேண்டும்.

*

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது.

மாணிக் தாகூர் தொடங்கி எதிர் தரப்பில் பலரும் சொல்வது என்னவென்றால், இது பாஜகவின் நாடகம். தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்றவே முடியவில்லை என்பதால் அண்ணாமலை பிரிந்து தனிக் கட்சி காண்கிறார். பாஜகவை எதிர்ப்பதால் அவருக்கு தமிழகத்தில் செல்வாக்கு கிடைக்கும். அவர் கால் ஊன்றியபின் பாஜகவுக்கு அதை மடை மாற்றித் தருவார் என்று சொல்கிறார்கள்.

இதற்கு 100% சாத்தியம் இருக்கிறது.

ஆனால் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதுபோல் ஒரு டீலிங் செய்யப்பட்டது. அதாவது, மோதியை சல்லிக்கட்டு நாயகராக்கலாம். தமிழகத்தில் அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை பன்னீர் செல்வம்-எடப்பாடி கொண்டு நிரப்பலாம். அந்த ஆட்சியை ஐந்தாண்டு நடக்க அனுமதித்து பாஜக மெள்ள கால் ஊன்றலாம் என்று ஒரு வியூகம் வகுக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவை(யும்) இயக்கிய சர்ச் வெகு எளிதாக பாஜகவை குழிக்குள் தள்ளியது. இலங்கை பிரச்னையில் திமுகவும் காங்கிரஸும் துரோகம் செய்திருக்க, பாஜகவையும் மோதியையும் 2016-2021 காலகட்டத்தில் தமிழக விரோதிகளாகக் கட்டமைப்பதில் தமிழ் தேசிய சக்திகள் வெற்றிபெற்றுவிட்டன. இதை பாஜகவின் ஆதரவில் நடந்த அதிமுகவின் ஆட்சியை கொண்டே சாதிக்கவும் செய்தன.

இப்போதும் பாஜகவும் அண்ணாமலையும் எதிர்ப்பதுபோல் காட்டிக் கொண்டு களமாடத் தீர்மானித்திருக்கலாம். ஜாக்கி சான் படங்களில் இப்படித்தான் அவரும் அவருடைய நண்பரும் தமக்குள் சண்டைபோல் போலியாகக் காட்டிக்கொண்டு வில்லன் கையில் இருக்கும் துப்பாக்கியைத் தட்டிப் பறித்து அவனை வீழ்த்துவார்கள். இது ஒரு நல்ல போர் தந்திரம் தான்.

ஆனால், பாஜகவும் அதிமுகவும் இணைந்து நடத்திய ஆட்சியில் பாஜக வீழ்த்தப்பட்டதுபோல் இப்போதும் ஆகிவிடக்கூடாது. ஏனென்றால் எதிரி, நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தவைத்த கதைகள் ஏராளம்.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
ஆனால், மிக மோசமானதற்குத் தயாராக இருப்போம்.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories