பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Published:

madurai kallalagar in chithirai festival - 2026

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் ஸ்வாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை கடந்த இரு தினங்களில் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

இந்த வைபவத்துக்காக ஏப்.29 அன்று, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்பட்டார். மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு ‘எதிர்சேவை’ நடைபெற்றது.  அழகர், மதுரை – தல்லாகுளத்தில், வியாழக்கிழமை இரவு எதிர் சேவையில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

இந்நிலையில் சித்திரா பௌர்ணமியான இன்று அதிகாலை கருப்பணசுவாமி கோயில் முன், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்.  அவர் செல்லும் வழியில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும், பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

முன்னதாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இன்று காலை 5.50 மணி அளவில், பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார். வெள்ளிக்குதிரை வாகனத்தில், அவரை வீரராகவ பெருமாள் வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது ‛கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். 

அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், காவல் ஆணையாளர் , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாநகராட்சி ஆணையர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை நகர் காவல் நிலையத்தின் செய்து இருந்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே குடி தண்ணீர் தொட்டிகளை, மதுரை மாநகராட்சி அமைத்திருந்தது.

நாளை 2ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியும், பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். மே 4ல் கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் அழகர்கோவில் புறப்பட்டு, மறுநாள் மே 5ம் தேதி அங்கு சென்றடைகிறார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img