இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி – 07.08.2022
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (20 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 188 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 64, ஹூடா 38, ஸ்மித் 3/33) மே.இ. தீவுகள் அணியை (15.4 ஓவர்களில் 100 ரன்னுக்கு ஆல் அவுட், ஹெட்மெயர் 56, பிஷ்னோய் 4/16, குல்தீப் 3/12, அக்சர் 3/15) 88 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.
உலகக் கோப்பைக்கு முன்னர் அனைத்து நாடுகளும் பிற நாட்டு அணிகளுடன் டி20 போட்டிகளில் விளையாட முயற்சிக்கின்றன.
அதுபோல இந்திய அணியும் இப்போது மே.இ. தீவுகள் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த வெற்றி இந்திய அணிக்கு தேவையில்லாத தலைக்கனத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இன்று நடந்த ஐந்தாவது டி-20 போட்டியில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், புவனேஷ் குமார் போன்றோர் ஆடவில்லை. ஹார்திக் பாண்ட்யா அணித்தலைவராக இருந்தார். தினேஷ் கார்த்திக் விக்கட் கீப்பர். இந்திய அணி முதலில் மட்டையாடியது.
விளையாடிய ஏறத்தாழ அனைத்து இந்திய பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட்டும் 100க்கு மேல்தான். இந்திய அணி பந்துவீச வந்தபோது, சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரில் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழந்தார். ப்ரூக்ஸ், தேவன் தாமஸ், ஹெட்மேயார் மூவரைத்தவிர எவரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.
இந்தியாவின் பிஷ்னோய், குல்தீப், அக்சர் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் எல்லா பத்து விக்கட்டுகளையும் எடுத்தனர். அக்சர் படேல் ஆட்ட நாயகனாகவும் அர்ஷதீப் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.