காமன்வெல்த் போட்டிகள் – பத்தாம் நாள் – 07.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
காமன்வெல்த் போட்டிகளில் பத்தாம் நாளான இன்று இந்தியர்கள் ஐந்து தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்கள் வென்றனர். முதலில் பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
பி.வி. சிந்து, பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் ஆட்டத்தில் சிங்கப்பூரின் ஜிய-மின்-யியோவை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குச் சென்றார். கிடம்பி ஸ்ரீகாந்த் மலேசிய வீரரிடம் அரையிறுதியில் தோல்வியடைந்தார்; பின்னர் அவர் வெண்கலப் பதக்கத்திற்கு சிங்கப்பூரின் ஜியா-ஹெங்-தே உடன் விளையாடி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
மற்றொரு வீரரான லக்ஷ்யா சென் சிங்கப்பூர் வீரரை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் இந்தப் பிரிவில் இரண்டு பதக்கங்கள் நிச்சயம். ஆண்கள் பாட்மிண்டனில் சத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி & சிராக் ஷெட்டி மலேசிய இணையை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தனர். இவர்கள் மூலம் மேலும் ஒரு பதக்கம் நிச்சயம். பெண்கள் இரட்டையர் போட்டியில் திரீஷா ஜாலி & காயத்ரி கோபிசந்த் ஜோடி மலேசிய ஜோடியிடம் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியுற்றனர்.
பின்னர் இந்த ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றனர். இந்திய குத்துச் சண்டை வீரர் அமித் பங்கல் 48-51 கிலோ எடைப்பிரிவில் இங்கிலாந்தின் கியரன் மெக்டொனால்டை வென்று தங்கப் பதக்கம் வென்றார். பெண்கள் பிரிவில் நிது கங்காஸ் 48 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்தின் டெமி ஜேட் ரெஸ்டானை வென்று தங்கம் வென்றார்.
நிக்ஹாத் ஸரீன் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். ஆண்கள் 92 கிலோ எடைப் பிரிவில் சாகர் அஹல்வாட் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் எல்டோஸ் பால் தங்கப் பதக்கமும் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் போட்டியில் ஷரத் கமல் & சத்யன் ஞானசேகரன் ஜோடி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதத்திற்கான போட்டியில் ஸ்ரீஜா அகுலா 3-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனையிடம் தோற்றுப் போனார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆட்டம் நடந்தது. ஸ்ரீஜா ஏழு ஆட்டங்கள் ஆடி மூன்றில் வென்றர்; கடைசிப் போட்டியில் 7-11 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஷரத் கமல் இங்கிலாந்தின் பால் ட்ரின்காலைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். எனவே ஒரு பதக்கம் நிச்சயம். மற்றொரு போட்டியில் சத்யன் ஞானசேகரன் தோற்றுப் போனார்.
இவர் இனி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் நாளை ஆடுவார். நாளின் இறுதியில் கலப்பு இரட்டையர் போட்டியில் ஷரத் கமல் & ஸ்ரீஜா அகுலா ஜோடி மலேசியாவின் சூங் & கரன் லின் ஜோடியை வென்று தங்கப் பதக்க்ம் பெற்றனர். அன்னு ராணி பெண்கள் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் பெற்றார். 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் இந்திய மகளிர் அணி ஐந்தாமிடம் பெற்றது. சந்தீப் குமார் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆண்கள் ஈட்டி எறிதலில் டி.பி. மனு 82.28 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஐந்தம் இடம் பிடித்தார். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் & சைரவ் கோஷல் ஜோடி ஆஸ்திரேலியா ஜோடியை வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது. மகளிர் டி20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
பத்தாம் நாள் முடிவில் இந்தியா 55 பதக்கங்களுடன் (18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம்) ஐந்தாம் இடத்தில் உள்ளது.