
காமன்வெல்த் போட்டிகள் – 08.08.2022
முடிவுக்கு வந்தன போட்டிகள்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
காமன்வெல்த் போட்டிகள் இன்று பதினோராம் நாளில் முடிவுக்கு வந்தன. இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று பாட்மிண்டன், டேபிள்டென்னிஸ், ஆண்கள் ஹாக்கி ஆகிய இறுதிப்போட்டிகளில் விளையாடினர்.
முதலில் பி.வி. சிந்து பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் கனடாவின் மிச்சேலை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின்னர் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் லக்ஷ்யா சென் மலேசிய வீரர் ட்ஸே-யோங்-நக் என்பவரை வென்று தங்கம் வென்றார்.
இந்தியா ஆண்கள் ஒற்றையரிலும் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. பிரகாஷ் படுகோனே, சையது மோடி, பி. கஷ்யப் ஆகியோருக்குப் பிறகு லக்ஷ்யா சென் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்கிறார். பி.வி. சிந்துவுக்கு முன்னர் சாய்னா நெஹ்வால் 2010 மற்று 2018இல் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறார்.
ஆண்கள் இரட்டையர் பாட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் லேன் & சியன் வெண்டி ஜோடியை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றனர். இது இந்தியாவின் முதல் காமன்வெல்த் தங்கப் பதக்கமாகும்.
டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் பெற்றார். அசந்தா ஷரத் கமல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் லியம் பிட்ஸ்ஃபோர்டை வென்று தங்கப்பதக்கம் பெற்றார். இதோடு சேர்த்து ஷரத் இதுவரை 7 காமன்வெல்த் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்.
ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 0-7 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றது. எனவே இப்போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 17 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 62 பதக்கங்கள் பெற்று தரவரிசையில் நாலாம் இடத்தில் உள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களின் டார்கெட் ஒலிம்பியம் போடியம் திட்டம், கேலொ இந்தியா திட்டம் ஆகியவற்றால் நமது விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றனர்; நல்ல உணவு, தங்கும் வசதிகள் பெற்றனர்.
இதனால் வீரர்கள், வீராங்கனைகளின் திறன் மேம்பாடு அடைந்திருக்கிறது என்பதை இந்தப் பதக்கங்களே சொல்லுகின்றன. நாடு மக்கள் அனைவருடனும் இணைந்து தினசரி இணையவழி நாளிதழ் போட்டியில் வெற்றி பெற்ற, கலந்துகொண்ட அனைத்து இந்திய விளையாடு வீரர், வீராங்கனைகளுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.