
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – மூன்றாம் நாள் – 18.10.2022
இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று கீலாங் மைதானத்தில் குரூப் A பிரிவின் இரண்டு டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நமீபிய அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி ஐக்கிய அரபு எமிரேட்டு அணியை வென்றது.
முதல் ஆட்டம் நமீபியா – நெதர்லாந்து
முந்திய ஆட்டத்தில் இலங்கையை வென்ற நமீபிய அணி (121/6, ஜான் ஃப்ரைலிங்க் 43, மைக்கேல் லிங்கன் 20, பாஸ் டி லீட் 2/18) இன்று நெதர்லாந்து அணியிடம் (19.3 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 122 ரன், விக்ரம்ஜித் சிங் 39, மேக்ஸ் ஓ டவுட் 35, பாஸ் டி லீட் 30, ஜே.ஜே.ஸ்மித் 2/24) தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற நமீபிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஜே ஃப்ரைலிங்க் இன்று சிறப்பாக ஆடி 43 ரன் அடித்தார். ஆனால் அணியின் பிற வீரர்கள் சரியாக ஆடவில்லை எனவே நமீபிய அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்தது. அடுத்து ஆடவந்த நெதர்லாந்து அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. ஆனால் 16ஆவது ஓவரிலும் 17ஆவது ஓவரிலும் மளமளவென விக்கட்டுகள் விழ நமீபியா வெற்றிபெறுமோ எனத் தோன்றியது. இருப்பினும் 19.3 ஓவரில் 122 ரன்கள் அடித்து ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி நமீபிய அணியை வென்றது.
இரண்டாவது ஆட்டம், இலங்கை – ஐக்கிய அரபு எமிரேட்டு
இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி (152/8, பதும் நிசங்கா 74, தனஞ்சய டி சில்வா 33, குசால் மெண்டில் 18, கார்த்திக் மெய்யப்பன் 3/19) ஐக்கிய அரபு எமிரேட்டு அணியை (17.1 ஓவரில் 73 ஆல் அவுட், வனிந்து ஹசரங்க 3/8) 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டாஸ் வென்ற ஐ.அ.எ. அணி, இலங்கை அணியை மட்டையாடச் சொன்னது. முதல் 14 ஓவர்கள் இலங்கை அணியின் வீரர்கள் கைக்குள் ஆட்டம் இருந்தது. அதன் பின்னர் ஐ.அ.எ அணியின் ‘கார்த்திக் மெய்யப்பன்’ ஒரு ஹாட்ரிக் எடுத்தார்; அதனால் ஆட்டம் மாறிப்போனது. கார்த்திக் மெய்யப்பன் முதல் இரண்டு ஓவர்களில் 14 ரன் கொடுத்திருந்தார். தனது மூன்றாவது ஓவரில் பானுகா ராஜபக்ஷா, அசலங்கா, தசுன் ஷனகா ஆகியோரை வரிசையாக ஆட்டமிழக்கவைத்தார். 117/2 என்ற நிலையில் இருந்து 117/5 என்ற நிலைக்கு வந்து பின்னர் எட்டு விக்கட் இழப்பிற்கு 152 ரன் என்ற நிலையில் இலங்கை அணி ஆட்டத்தை முடித்தது.
இரண்டாவதாக ஆடவந்த ஐக்கிய அரபு எமிரேட்டு அணிக்கு இன்று ஒரு ‘பேட்டிங் கொலேப்ஸ்’ என்று சொல்ல வேண்டும். மேட்ச் இன்னும் விரைவாக முடிந்திருக்கும்; ஆனால் இலங்கை வீரர்கள் சில கேட்சுகளைப் பிடிக்கத் தவரியதால் ஆட்டம் 18ஆவது ஓவர் வரை நீடித்தது.