
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – நான்காம் நாள் – 19.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று டாஸ்மேனியா ஹோபர்ட் மைதானத்தில் குரூப் B பிரிவின் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் விளையாடின; இரண்டாவது ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் அணியும் ஜிம்பாபே அணியும் விளையாடின. இந்த இரண்டு ஆட்டங்கள் தவிர மூன்று பயிற்சி ஆட்டங்களும் விளையாடப்படுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த மூன்று பயிற்சி ஆட்டங்களும் நடைபெறவில்லை.
முதல் ஆட்டம் ஸ்காட்லாந்து-அயர்லாந்து
ஸ்காட்லாந்து அணி (176/5, மைக்கேல் ஜோன்ஸ் 86, பெர்ரிங்க்டன் 37, க்ராஸ் 28, கேம்பர் 2/9) அயர்லாந்து அணியிடம் (19 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 180 ரன், கேம்பர் 72, டாக்ரெல் 39, டக்கர் 20) ஆறு விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜியார்ஜ் முன்சி இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோன்ஸ் 19ஆவது ஓவர் வரை விளையாடி 55 பந்துகளில் 86 ரன் அடித்தார். அவருக்குத் துணையாக கிராஸ் (21 பந்துகளில் 28 ரன்), பெர்ரிங்க்டன் (27 பந்துகளில் 37 ரன்), லீஸ்க் (13 பந்துகளில் 17 ரன்) ஆகியோர் நன்றாக விளையாடினர். 20 ஓவர் முடிவில் ஸ்காட் லாந்து அணி 176 ரன் எடுத்திருந்தது.
அதன் பின்னர் ஆடவந்த அயர்லாந்து அணி ஒரு நிச்சயமான தோல்வியை சாதனை வெற்றியாக மாற்றியது. அந்த அணி 9.3 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 61 ரன் எடுத்திருந்தது. வல்லுநர்கள் அச்சமயத்தில் அயர்லாந்தின் வெற்றிக்கு 10% வாய்ப்பு மட்டுமே இருப்பதாகக் கருதினர். ஆனால் கர்டிஸ் கேம்பர், டாக்ரெல் இருவரும் அடுத்த 10 ஓவர்களில் அணியின் தலையெழுத்தை மாற்றி, 19 ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
இரண்டாவது ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகள்-ஜிம்பாபே
மேற்கு இந்தியத் தீவுகள் அணி (153/7, சார்லஸ் 45, ரோவ்மென் போவெல் 28 ராசா 3/19) ஜிம்பாபே அணியை (18.2 ஓவர்களில் 122 ஆல் அவுட், லூக் ஜான்வே 29, வெஸ்லீ மத்வீரே 27, அல்சாரி ஜோசப் 4/16) 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து விளையாடும் தன்னுடைய நம்பிக்கையை இன்று தக்கவைத்துக்கொண்டது. இன்றைய ஆட்டம் அவர்களின் சிறந்த ஆட்டங்களில் ஒன்று எனக் கூற முடியாது. ஆனாலும் வெற்றி பெற்றுவிட்டார்கள். இரண்டு விக்கட் இழப்பிற்கு 90 ரன் என்ற நிலையில் இருந்து 6 விக்கட் இழப்பிற்கு 101 ரன்கள் என்ற நிலைக்கு இறங்கி, இறுதியில் 7 விக்கட் இழப்பிற்கு 153 என்ற ரன் கணக்கில் அவர்கள் ஆட்டத்தை முடித்தார்கள். பேட்டர்களில் சார்லஸ் மட்டுமே சிறப்பாக ஆடினார்.
ஜிம்பாபே அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினார்கள். ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் 18.2 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆயினர். 21ஆம் தேதி நடக்கும் இரண்டு ஆட்டங்கள்தான் இந்த குரூப்பில் யார் அடுத்த சுற்றிற்கு முனேறுவர் என்பதைத் தீர்மானிக்கும்.