‘சாத்தான்’குளத்தைத் தொடர்ந்து… பொதுமக்களிடம் அத்துமீறிய 80 போலீஸார் மீது நடவடிக்கை!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
dig balakrishnan
dig balakrishnan

மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 80 போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. மேலும் அந்த உத்தரவில், நடவடிக்கைக்கு உள்ளாகும் இவர்கள், அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இவர்கள், நடத்தை சிகிச்சைக்கு பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதில் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் வந்த தொடர் புகாரை அடுத்து நடவடிக்கை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே, சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளனர்.

மேலும், மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவலர் மஹாராஜன் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின் படி, வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள்
சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

முன்னதாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரின் அடிப்படையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.