ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரைசியும் பங்கேற்றாா்.
இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றார்கள்.
இதன் பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரைசி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தார்கள்.
அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டா் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த சிரமத்துடன் தரையிறங்கியதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அந்த ஹெலிகாப்டா் உசி என்ற சிற்றூருக்கு அருகில் தரையிறங்கியதாக அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டா் தரையிறங்கிய இடம் குறித்த விவரங்களில் முரண்பாடு நிலவியது. இது உலக அளவில் பல்வேறு குழப்பமான தகவல்களைக் கொண்டு சேர்த்தது.
இந்நிலையில், மீட்புப் படையினரின் ஹெலிகாப்டரைத் தரையிறக்கி, பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இதை அடுத்து, அதிபா் ரைசியின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. ஹெலிகாப்டர் அவரசரமாக தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்ட சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விபத்து நடந்து முடிந்த 17 மணி நேரத்துக்குப் பின்னர் துருக்கியின் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.