ஆதி திராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்ற ஆய்வுகுழு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

ஆதிதிராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு,ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மீண்டும் ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு. தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் நீதிபதி ஜனார்தனம் கமிட்டி அமைத்து 2011 ஜனவரியில் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த அந்தக் குழு கலைக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் சுமதி தலைமையில் மானுடவியல் ஆய்வுக் குழுவை முதல்வர் பழனிச்சாமி அமைத்தார், அக்குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தாசில்தார்களிடம் ஆய்வு செய்து அறிக்கை கேட்கப்பட்டது. அந்த அறிக்கைகளும் முதல்வர் அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும். இல்லையென்றால் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று பாஜக, அதிமுகவோடு தோழமையாக இருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்தார்.

பிரதமர் மோடி மதுரை பாஜக தேர்தல் கூட்டத்தில் தமிழக அரசுக்கு இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின், பரமக்குடியைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரத்திலும் அறிவித்தார்.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் மூன்றாவதாக மீண்டும் ஒரு புதிய மூவர் ஆய்வுக் குழுவை அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.