ஒன்றாக இணைந்து கைதட்டுவது ஒரு செயல்முறை. அந்த ஒலி, மந்திரம் போன்று வைரஸையும் பாக்டீரியாக்களையும் அழிக்கக் கூடும் என்று தெரிவித்திருந்தார்.
திருவனந்தபுரம்: கைதட்டினால் வைரஸ் அழியும் என்று கூறிய பிரபல நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து, கேரள மனித உரிமை கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் அறுநூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த, ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா மற்றும் டிவி.சீரியல்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன், கேட்டுக் கொண்டிருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கூறியிருந்தார்.
அதோடு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதுபற்றி நடிகர் மோகன்லால், ஒன்றாக இணைந்து கைதட்டுவது ஒரு செயல்முறை. அந்த ஒலி, மந்திரம் போன்று வைரஸையும் பாக்டீரியாக்களையும் அழிக்கக் கூடும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்தனர்.
இந்நிலையில் விஞ்ஞானபூர்வமற்றத் தகவல்களை பரப்பியதாக அவர் மீது, டினு வீல் என்பவர், மாநில மனித உரிமை கமிஷனில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். இதுபோன்ற தகவல் பரப்புவோர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து மோகன்லால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், இதை கேரள மனித உரிமை கமிஷன் மறுத்துள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.