தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் இன்று ஆனி கார்த்திகை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது. .திரளான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி முருகப்பெருமானை வழிபாடு செய்து சென்றனர் .
தென்காசி மாவட்டம் என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அருவிகள், ஆறுகள், அணைக்கட்டுகள், பச்சைப் பசேல் விவசாய விளை நிலங்கள் என பார்க்கப் பார்க்க ரம்மியமாக இருக்கும்.
அதுவும் இந்த தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் தென்காசி மாவட்டம் முழுவதுமே இதமான தட்பவெப்ப நிலையும் சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசும்.
இந்த தென்காசி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் மட்டுமல்லாது, ஆன்மீகத் தலங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் இங்கு தமிழ்க் கடவுள் முருகனுக்கு பிரசித்தி பெற்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளன. அவற்றில் பல குன்றும் மலையும் சூழந்த இயற்கைச் சூழலில் அமைந்திருக்கின்றன.
இந்த ஆலயங்களில் ஒவ்வொரு மாத கார்த்திகை தினத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தியும் ஆனி ஆடி மாத கார்த்திகை தினங்களில் வழிபாடு நடத்துவது சிறப்பம்சம் ஆகும்.
இன்று ஆனி கார்த்திகை நாளையொட்டி சிவகிரியில் பிரபலமான கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது .
மூலவர் பாலசுப்பிரமணியர் உத்ஸவர் ஆறுமுகக் கடவுள் ஆகியோருக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இந்த பூஜை வழிபாட்டில் பங்கெடுத்தனர் .
இதுபோல் அருகில் உள்ள மிகப் பிரபலமான முருகன் கோயிலாக ராயகிரி கூடலூர் நாதகிரி முருகன் கோவில் உள்ளது. இதுவும் மலை மீது உள்ள கோவில்! இக்கோவிலிலும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் அதி விமர்சையாக நடைபெற்றது.
சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை தவிர கேரளாவிலிருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இதுபோல் புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆய்குடி முருகன் கோவில் ஆகியவற்றில் பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
குற்றாலம் அருகில் உள்ள இலஞ்சி குமாரகோவில், செங்கோட்டை அருகே மலை மீது அமர்ந்துள்ள திருமலைக்கோவில் குமாரசாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அதி விமர்சையாக ஆனி கார்த்திகையை ஒட்டி நடைபெற்றது.
மேலும் தென்காசி அருகில் உள்ள தோரணமாலை முருகன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பாலசுப்ரமணியருக்கும் ஆனி கார்த்திகை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் விரதம் இருந்து முருகப் பெருமானுக்கு பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.