மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடம் செய்தி பரவியது. இப்பகுதி மக்கள் திடீரென பெரும் நில அதிர்வை உணர்ந்தனர். இதனால் பொது மக்கள் மத்தியில் இது குறித்த செய்திகளும் அதிகம் பகிரப்பட்டன.
இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் திருலோக்கி பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறியபோது, இன்று காலை சுமார் பதினோரு மணி அளவில் மயிலாடுதுறை பகுதியில் அதிபயங்கர வெடி சத்தம்போல் பெரும் சத்தம் கேட்டது. அப்பொழுது சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லா ஊர்களிலும் நிலம் அதிர்ந்துள்ளதாகத் தெரியவந்தது. நண்பர்கள் இது குறித்து தகவல்கள் பரிமாறிக் கொண்டனர். இப்பொழுது எங்களுக்கு, மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
அந்நேரம், பல பகுதிகளில் கண்ணாடிகள் சிதறி விழுந்தன. ஓட்டு வீடுகளில் ஓடுகள் சரிந்தன. சிமெண்ட் ஷீட் போட்ட இடங்களில் அதிரும் சப்தம் அதிகமாகக் கேட்டது. தீவிரமான நிலநடுக்கம் என்றுதான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். குறிப்பாக மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த அதிபயங்கர சப்தத்தால், சுற்றுப் பகுதியில் உள்ள கிராம மக்கள் என்ன ஏது என்று தெரியாமல் குழம்பிப் போய் திணறினார்கள். இது குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்களும் உரிய பதில் ஏதும் சொல்லவில்லை. எனினும் போலீஸார் நில அதிர்வு குறித்து தங்களுக்கும் பொதுமக்களின் புகார்கள் வந்ததாகக் கூறினார்கள். உறுதியான தகவல் தெரியவில்லை…” என்றார்.
நில அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்காக அரசுத் தரப்பில் இருந்து வரும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறோம் என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜெட் விமானம் பறந்ததால் ஏற்பட்ட நில அதிர்வு தான் அது என்று காவல் துறை தகவல் தெரிவித்தது.
தஞ்சாவூர் விமானப்படை ஏவுதளத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது போன்று உணரப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட காவல்துறை தகவல் வெளியிட்டது. மேலும் ஜெட் விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் போது சில நேரம் நிலம் அதிரும் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.
திடீரென ஏற்பட்ட இந்த பலத்த சத்தம் மற்றும் அதிர்வால் மயிலாடுதுறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் மனதில் கலவரமடைந்தனர்!