அண்ணாமலையின் அரசியல் அதிரடி பாராட்டத்தக்கது. இது நாள் வரை இப்படி எல்லாம் எவரும் தடாலடியாக இறங்கியதில்லை தான்.
ஒரு சிக்கலான விஷயத்தை, அநாயாசமாகத் தொட்டிருக்கிறார். ஊடக உலகம், மக்கள் உலகம் இதைப் பற்றி பேசாமலிருப்பதே, ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போயுள்ளது என்பதை பளிச்சிட்டுக் காட்டுகிறது. அண்ணாமலையின் பின் மக்கள் திரள்வது ஒரு பக்கம் இருந்தாலும், மத்திய ஏஜென்ஸிகள் அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருந்தாக வேண்டும். சிபிஐ, ஈடி, ஐபி என ஒட்டுமொத்தமாக ஒரு நெருக்கடி கொடுத்தால் மட்டுமே அண்ணாமலையின் முயற்சி வெற்றி அடையும். மற்ற மாநிலங்களில் செய்ய முடிகிறது, கேரளம், தெலங்கானா, தில்லி, மேற்கு வங்கம், ஜார்கண்ட் என தவறான முறையில் ஆள்பவர்க்கு நெருக்கடி கொடுக்க முடிகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் அது இயலாமல் போகிறது என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.1
ஊடகங்களில் இருந்து இத்தனை பேர் வந்தும், ஏன் எவையுமே இதைப் பேசுபொருள் ஆக்கவில்லை, நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை என்றெல்லாம் தங்கள் ஆதங்கங்களை பலரும் சமூக ஊடகங்களில் கேட்கின்றனர். உண்மைதான்! ஊடகங்களின் குரல்வளை தமிழக அரசின் கைகளில் இருப்பது போல், மத்திய அரசின் கைகளிலும் லகான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு கண்டுகொள்ளாமல், எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் சுரணையற்று வேடிக்கை பார்ப்பதால், இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். துறை அமைச்சர் இங்கு உள்ளவர். நினைத்தால் விளம்பரத்தில் கை வைக்க முடியும். வருமானத்தின் மீது மிரட்டலை கொடுக்க முடியும்… ஆனால் செய்யவில்லை! அதனால் அச்சமற்று இருக்கின்றன. அதை மாநில அரசு மிகச் சரியாகச் செய்து வருகிறது. அதனால் அச்சத்துடன் நடந்து கொள்கின்றன.
இந்த அளவுக்கு சொத்துக் குவிப்புகள் பெருகும் வரை… பார்த்துக் கொண்டிருந்தது இன்றைய மத்திய அரசும்தானே! இந்நாள்வரை பார்த்துக் கொண்டு சும்மாயிருந்துவிட்டு, இன்று கணக்கு காட்டுவது நியாயமா? என்று விரக்தியுற்ற சாமானியன் குரல் எழுப்புகிறான். அதையும் சமூக ஊடகத்தில் பார்க்க முடிகிறது.
ஊழல்வாதிகளுக்கு பொதுமக்கள் அறியும் வகையில் தண்டனை கிடைத்தால் மட்டுமே ஓரளவாவது அச்சம் ஏற்படும். இல்லாதவரை, சொத்துப் பட்டியல் ஊழல் பட்டியலெல்லாம், அவர்களின் மவுசை மக்கள் முன் ஏற்றத்தான் செய்யும். இறங்கச் செய்யாது. காரணம், காசுக்கு மதிப்பு கொடுக்கும் கூட்டம் இங்கே பெருகிவிட்டது.
இது ஊடகங்களுக்கு மட்டும்தானா என்றால், அவர்களுக்கே கூட அதான் நிலைமை. சாராய ஆலை நடத்தினால் கமிஷன் மேலிடத்துக்கு கமிஷன் போகும், இவர்கள் ஊடகத்தை நடத்தி என்ன பலன்?!
இரு வாரங்களுக்கு முன் வாணிமஹால் புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, நிகழ்ச்சி முடிந்த பின்னர், பத்திரிகையுலக நண்பர் ஒருவர் அருகே இருக்கும், புதிதாக கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயிலுக்குச் சென்று வருவோமே என்று அழைத்தார். போனோம்.
வாசலில் செருப்பைப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்த போது, பெரிய ஆரவாரம் ஏதுமின்றி, பின்னேயே வந்தார் அந்த விஐபி., இன்றைய சொத்துப் பட்டியலின் முதல் நாயகர். வைணவத்துக்காக சில பல பணிகளைச் செய்தவர் என்ற வகையில் எனக்கு அவர் மீது நல்ல அபிப்ராயமே உண்டு. ஆனாலும் அரசியல் நிலை கருதி ஒதுங்கியே இருந்தேன். வாய்ப்புகள் பல வந்த போதும், இதுவரை நேரில் சந்தித்துப் பேசியதில்லை. ஆனால் உடன் வந்த நண்பர் அவருக்கு அறிமுகமானவர். எனவே உடன் சென்று, அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, தரிசனத்துக்கு உதவி செய்து, அருகே இருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு அமரவைத்து, பிரசாதம் வாங்கி வந்து கொடுத்து… இப்படியாக உதவினார்.
அவர் இரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு நாளிதழை நடத்தி வந்தார். ஆனால் பின்னர் மூடிவிட்டார். அவருக்கு இருக்கும் பணத்துக்கு ஒரு மீடியா ஹவுஸை நடத்த முடியும். நம் நண்பரும் அதை நினைவூட்டி, பத்திரிகையை தொடர்ந்து நடத்தினீங்கன்னா… நல்ல திறமைசாலிகள் பல பேரு வேலையில்லாம இப்போ இருக்காங்க… அவங்களுக்கும் உதவின மாதிரி இருக்கும். நாங்க இருக்கோம். நல்லா பாத்துப்போம்… என்ற ரீதியில் ஏதோ காதைக் கடித்தார். கேட்டு விட்டு பதிலுக்கு அவரும், ”அதை அவங்க விரும்ப மாட்டாங்க…” என்று சொல்லி கிளம்பிவிட்டார்.
இன்றைய பட்டிலின் இரண்டாவது இடம் பெற்றவரிடம் இதே நண்பர் ஒரு முறை, திருவண்ணாமலையில் நடத்தி வரும் லோக்கல் பத்திரிகை போல, இங்க பண்ணலாமே என்று கேட்ட போது, அவரும், “என்னப்பா எனக்கு வேட்டு வைக்கணும்னு நெனச்சிட்டியா… அதையெல்லாம் அவங்க விரும்ப மாட்டாங்க” என்ற ரீதியில் சொல்லியிருக்கிறார்.
எனவே வரவுக்கு மீறிய சொத்துக் குவிப்பது கூட எவ்வளவு சிரமம், எத்தகைய தியாகம் செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தங்கள் வாக்கால் புரிய வைத்திருக்கிறார்கள். அந்த ‘அவங்க’ யாரென்றால்… ஊடகத்துறையில் தனிமுதல்வனாக இருக்க வேண்டும் என்று பல வேலைகளைப் பார்த்தவர்கள்; பார்ப்பவர்கள்.
என்றுமே எத்துறையிலுமே மோனோபாலி – சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். சர்வாதிகாரம் ஊழலின் மணிமகுடம்!