“நாட்டு மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நாட்டு மக்களின் சேமிப்பு மற்றும் சொத்துக்களை குறி வைத்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், யார் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறார்கள், யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை விசாரணை செய்வோம் என்று காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார்.
நம் தாய்மார்களிடமும், சகோதரிகளிடமும் தங்கம் உள்ளது. திருமணத்திற்கு முன்னர் தன் தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்த ‘ஸ்ரீதனம்’ புனிதமாக கருதப்படுவதோடு, சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றும் கூட. இப்போது சிலரின் கண்கள் திருமாங்கல்யத்தின் மீது உள்ளது. தாய்மார்களிடமிருந்தும், சகோதரிகளிடமிருந்தும் தங்கத்தை கொள்ளையடிப்பதே அவர்களின் நோக்கம்.
உங்கள் ஊரில் பூர்வீக சொத்து இருந்து, நீங்கள் தற்போது வாழும் இடத்தில் சொந்தமாக ஒரு வீடும் இருந்தால், இரண்டில் ஒன்றை பறித்து கொண்டு விடுவார்கள். இது தான் மாவோயிஸ சிந்தனை, இது தான் கம்யூனிஸ்டுகளின் சிந்தனை. இப்படி செயல்பட்டே பல நாடுகளை அழித்து விட்டார்கள். இதே சிந்தனையை, செயல்பாட்டை இந்தியாவிலும் அமல்படுத்த காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியும் விரும்புகிறது” என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
அப்படி கூறியதை தவறு என்கிறார்கள் சில நடுநிலையாளர்கள்(?) மற்றும் எதிர்க்கட்சியினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் சொத்துக்களை மதிப்பீடு செய்து அதை சமமாக எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளதோடு, அக்கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் பேசும் போது, நாடு முழுதும் ஜாதி ரிதியான கணக்கெடுப்பு நடத்தி, சிறுபான்மையினர் குறித்த விவரங்களை அறிந்த பின்பு, யாரிடம், எந்த நிறுவனத்திடம் அதிக நிதி மற்றும் சொத்துக்கள் உள்ளது, எங்கு வைத்திருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகளை செய்து சொத்துக்களை அனைவருக்கும் பிரித்துக் கொடுப்போம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு மூர்க்கத்தனமான கொள்கை இந்தியாவை அழித்து விடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தினம் ரூபாய் 400 கொடுப்போம் என்று கூறும் காங்கிரஸ் கட்சி, ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களிடமிருந்து ரூபாய் 600 ஐ அடித்து பிடுங்குவோம் என்றே இந்த கொள்கையின் மூலம் சொல்கிறது.
தொழிற்சாலைகளை அழித்து தொழில் முன்னேற்றத்தை தடுக்கும் கோர அரசியல் கொள்கையை கடைபிடித்தால், வேலை வாய்ப்புகள் பறிபோகும், வசதி வாய்ப்புகள் பறிபோகும், வறுமை நம் நாட்டை வாட்டும், பஞ்சம் தலைவிரித்தாடும். மீண்டும் கற்கால நிலைக்கு நம்மை தள்ளி விடும் அபாயத்தை அரங்கேற்றப் போவதாக காங்கிரஸ் கூட்டணி சொல்வது அராஜகத்தின் உச்சக்கட்டம். இருப்பவர்களிடத்திலிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்ற கொள்கை, ‘வழிப்பறி’ கொள்கை. பல நாடுகளை வீழ்ச்சியில் தள்ளிய அலங்கோல சிந்தனை.
ஆனால், இயற்கை வளங்களை பயன்படுத்தி, கட்டமைப்புகளை பெருக்கி, நிதி முதலீட்டை அதிகரித்து, தொழில் முன்னேற்றத்தை அடைய வைத்து, தனி மனித வருவாயை அதிகரிக்க வைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் ஒரு நாட்டை முன்னேற வைக்கும். எல்லோரையும் வருவாய் ஈட்ட வைப்போம், அனைவரையும் முன்னேற்றுவோம், எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் வளர்ச்சி. அதை தான் பாரதிய ஜனதா கட்சியின் பத்து ஆண்டு கால அரசு செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை INDI கூட்டணியின் கொள்கை முடக்குவாதத்தை உணர்த்துவதோடு, இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கும் எண்ணம் என்பதால் தான் தெளிவாக மக்களிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தீய எண்ணத்தை, அபாயகரமான கொள்கைகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார்.
- நாராயணன் திருப்பதி.