வாக்களிப்பும் வாய்க் களிப்பும்!

2019 மக்களவைத் தேர்தல் வித்தியாசமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவில், மத ரீதியான பிளவுகளைக் காட்டிக் கொண்டும், சாத இன ரீதியான பிளவுகளை வெளிப்படுத்திக் கொண்டும்! எல்லாவற்றுக்கும் காரணம், மோடி என்ற நேர்மையான மனிதர் எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகள்!

இந்திய நாடு எந்த வித முறைகேடுகளுக்கும் திறந்த வெளி கொண்டது என்ற எண்ணப் போக்குக்கு கடிவாளம் கட்டியது முதல், நாட்டில் சுதந்திரமாய் எங்கும் திறந்த வெளியில் மலம் கழிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட நபர்கள் மோடிக்கு எதிராக கம்பு சுற்றத்தொடங்கி விட்டனர். அதன் விளைவு, தங்கள் தவறுகளை மறைக்க, தங்கள் இனத்தை சாதியை மதத்தை முன்னிறுத்தி, தங்கள் மக்களை ஒருங்கிணைத்து, தாங்கள் சொல்லும் கட்டளைக்கு ஏற்ப வாக்களிக்கவும் செயல்படவும் வைத்துள்ளனர். இதற்குப் பெயர் ஜனநாயகம் என்ற எண்ணத்தை வேறு விதைத்துள்ளனர்.

கிறிஸ்துவ பாதிரிகள் கூட்டமைப்பு, பாதிரிகள், சர்ச்சுகள் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிட்டு, தங்கள் வெளிநாட்டு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டன. இஸ்லாமிய அமைப்புகள், பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு, மத வழிபாட்டு இடங்களில் அரசியல் பேசின.

இந்த நிலையில், இந்து மதம் என்றால் அனைவரையும் அரவணைத்துப் போகும் என்று சொல்லிக் கொண்டு, தனது உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை உணர்ந்த ஹிந்து மதத்தின் சந்யாசிகளும், சாத்விகளும் தாங்களும் ஒருங்கினைய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தனர்.

இதுவரை வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்காமல், மடங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மடாதிபதிகளும் சந்யாசிகளும் வெளிப்படையாக வெளிவந்து, தாங்களும் ஜனநாயகக் கடமை ஆற்றுகிறோம் என்று வாக்களித்தனர். இத்தகைய சூழல் ஏற்பட, மேற்படி கிறிஸ்துவ இஸ்லாமிய அமைப்புகளின் மத ரீதியான ஒருங்கிணைப்பும் இந்து மத எதிர்ப்புக் கருத்துகளுமே!

தமிழகத்தில், திமுக., திக., விசிக., உள்ளிட்ட கட்சிகள் இயக்கங்களின் ஹிந்து மத விரோதக் கருத்துகளும், சீண்டல்களும் பெரும்பான்மை சமூகத்தை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வர வைத்துள்ளது.

யாரோ ஒருவருக்கு வாக்கு அளித்தால், தாங்கள் ஏதோ நடுநிலை தவறிவிட்டதைப் போல் தாங்களே உணர்ந்து கொள்வோமோ என்ற மாயையில் இருந்து விடுபட்டு, தர்மவான்கள் களம் இறங்கியிருப்பது ஒருவகையில் மகிழ்ச்சியே!

வைணவ மடாதிபதிகளான, யதுகிரி யதிராஜ ஜீயர் (திருநாராயணபுரம்), மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் உள்ளிட்டோர் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

உடுப்பி பெஜாவர் சுவாமிகள் அந்தத் தள்ளாத வயதிலும் நடையாய் நடந்து வந்து, வாக்களித்துச் சென்றார்.

சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்தினார் மதுரை ஆதீனம்! தெற்கு சித்திரை வீதி வாக்குச்சாவடிக்கு வந்தவர், பின்னர் சக்கர நாற்காலி மூலம் வாக்கு செலுத்தி விட்டுச் சென்றார்.

இப்படி சந்யாசிகள் மடாதிபதிகளையும் வாக்குச்சாவடிக்கு வர வைத்த பெருமை, இன்றைய அரசியல் சூழலுக்கு உண்டு! இருப்பினும், இன்னும் பெருவாரியான சாது சன்யாசிகளும், தர்மவான்களும், நியாயமெனப் பேசிக் கொண்டு திரியும் நடுநிலையாளர்களும் வாக்களிக்க வந்தே தீர வேண்டும்! அந்தச் சூழ்நிலை நிச்சயம் வரும்!

இந்த முறை புதுவையில் வாக்களிக்க வரிசையில் வந்து நின்றார் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. அவர் வாக்களிக்க வரிசையில் நின்ற படம் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்க, அதையே பலரும் விமர்சனம் செய்தனர். ஒரு மாநிலத்தை ஆளும் பொறுப்புள்ள நபர், ஒரு சார்பாக வாக்கு அளிப்பது நடுநிலை தவறுவது என்று கூறினர்.

இது ஏதோ விவாதத்துக்கு சரியான கருத்தாக இருந்தாலும், அவரது வாக்குரிமையை அவர் செலுத்துவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்!? நடத்தையில் தான் நடுநிலை இருக்க வேண்டுமே தவிர, வாக்களிப்பதில் அல்ல!

அதுபோல், தேர்தலில் நடுநிலை வகிக்க வேண்டும் என்றும், வாக்களிக்க வேண்டும் என்றால் யாருக்காவது ஒரு பக்கச் சார்புடன் வாக்களித்துத்தானே ஆகவேண்டும் என்பதால், குடியரசுத் தலைவர்கள் வாக்களிக்கத் தேவையில்லை என்ற மரபு கடைபிடிக்கப் பட்டு வந்தது.

ஆனால், 1998 இல் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், முதல் முறையாக மரபுகளை உடைத்து வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

2004ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தேர்தல் ஆணையத்தின் தூதராக இருந்து வாக்களியுங்கள் என்று நாட்டுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், தானே வாக்களித்தும் அதை நிறைவேற்றினார். நாட்டின் முதல் குடிமகன், நாட்டின் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

அவரது பாணியில், பின்னர் வந்த பிரதீபா பாட்டீல், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப் பட்டிருந்த சிறப்பு வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ஆனால், பின்னர் வந்த பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர்கள் வாக்களிப்பதில்லை என்ற பண்டைய மரபை தாமும் பின்பற்றப் போவதாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். ஆனால் காங்கிரஸைச் சேர்ந்த இவர்தாம் பின்னாளில் மோடியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது; நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்று ஊடகத்தில் பேட்டி அளித்தார்.

வாக்களிப்பு என்பது ஒருவரின் மன விருப்பத்தின்படி செயல்பட வைப்பது. அந்த உரிமையை மறக்காமல் மறுக்காமல் ஆற்ற வேண்டியது ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை! ஆனால், கடமைகளைச் செய்வதற்காகவே தங்களை கட்டமைத்துக் கொண்ட சமூகம், தங்களது கடமைகளைத் துறந்து, வெட்டிப் பேச்சிலும் வாய்க் களிப்பிலும் ஈடுபட்டு, சமூகத்தை திசை திருப்பி சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது வருந்தத் தக்கது!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...