spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்அண்ணா என் உடைமைப் பொருள் (52): அண்ணாவின் கடைசி நிமிடங்கள்!

அண்ணா என் உடைமைப் பொருள் (52): அண்ணாவின் கடைசி நிமிடங்கள்!

- Advertisement -

அண்ணா என் உடைமைப் பொருள் – 52
அண்ணாவின் கடைசி நிமிடங்கள்
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணா தி. நகரில் தனது அக்கா வீட்டில் தங்க ஆரம்பித்த சமயம் –

அந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் காலையில் அண்ணாவிடம் போயிருந்தேன். நான் வீட்டுக்குள் நுழைந்த போது அண்ணா ஹாலில் இருந்தார். உள்ளே நுழைந்ததுமே என் கையைப் பிடித்துக் கொண்டார். ‘‘உடம்புக்கு ரொம்ப முடியல. அனுக்கிரகம் பண்ணணும்னு ஒரு டிவோடீ மூலமா ஸ்வாமிக்கு லெட்டர் கொடுத்து அனுப்பி இருந்தேன். தரிசனத்தின் போது, ஸ்வாமி, நேரே அவர் கிட்ட வந்து கணபதியை சீக்கிரமா ஸ்வாமி கிட்ட கூப்ட்டுக்கறேன்-னு சொன்னாராம். அவ்ளோதான், எனக்கு வேற வினையே வேண்டாம்! ஸ்வாமி சொல்லிட்டாரோல்லியோ!! எனக்கு இப்போதைக்கு சாவே வராது. இன்னும் பத்து வருஷம் உயிரோட இருப்பேன்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அண்ணா வழக்கம் போல ஸ்வாமியைக் கேலி பண்ணுகிறார் என்று தான் நினைத்தேன். ஆனால், அதன் பின்னர் ஏறக்குறைய பத்து வருடங்கள் தான் உயிருடன் இருந்தார்.

தி. நகர் இல்லம் வந்ததுமே அண்ணா, தனது எழுத்துப் பணிகளைப் பெருமளவு குறைத்துக் கொண்டார். மறு பதிப்புக்கு வரும் புத்தகங்களை ப்ரூஃப் படிப்பதும் நின்று விட்டது.

அண்ணா ‘‘கிளம்பத் தயாராகி விட்டார்’’ என்ற உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்பட்டது.

இந்தக் காலகட்டத்தில், ‘‘நான் இப்போதைக்கு மரணமடைய விரும்பவில்லை. சில நெருங்கிய அன்பர்களுக்கு நிறைய கர்மா பாக்கி இருக்கிறது. அவர்களுக்காக இன்னும் சில வருடங்கள் மந்திர ஜபம் பண்ண விரும்புகிறேன்’’ என்று மோகன்தாசிடம் (அண்ணாவுக்குப் பணிவிடை புரிந்தவர்.) அண்ணா ஒரு தடவை தெரிவித்தார்.

இதற்கு சுமார் மூன்று வருடங்கள் பின்னர் அண்ணா உணவு அருந்துவது மிகவும் குறைந்தது. தினசரி ஓரிரு கைப்பிடி உணவு என்பது, இரண்டு மூன்று ஸ்பூன் கஞ்சி மட்டுமே என்கிற அளவுக்குக் குறைந்தது. இரவு உறக்கத்துக்கான மாத்திரை தவிர இதர மருந்துகள் அனைத்துக்கும் குட் பை சொல்லி விட்டார்.

‘‘கிளம்பிய பின்’’ யார் யாருக்கு என்ன செய்தி சொல்ல வேண்டும், யார் டெத் சர்டிஃபிகேட் கொடுக்க வேண்டும், யார் காரியம் பண்ண வேண்டும் – என்று லிஸ்ட் போட்டு, உரிய நபர்களிடம் தகவல் சொல்லி இருந்தார்.

அனேகமாக, வைகுண்ட ஏகாதசியன்று ‘‘கிளம்புவார்’’ என்று நம்பினேன். ஆனால், அண்ணா, சிவ ராத்திரியைத் தேர்ந்தெடுத்தார். (21.02.2012)

வழக்கமாக மாலையில் ஜன்னலை மூடி, திரையை இறக்கி வைத்திருப்போம். அன்று ஜன்னலைத் திறந்தே வைக்குமாறு சொல்லி விட்டார்.

மாலை ஆறு மணி முதல் வெட்ட வெளியையும் சுவரில் இருந்த ரமணர், பெரியவா படங்களையும் மாறி மாறிப் பார்த்தவாறே இருந்தார். 6.20 முதல் 6.40 வரை, நிதானமாக ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து பார்த்தார். அவரது கை சக்திவேலின் கையைப் பற்றியவாறே இருந்தது. பின்னர், சக்திவேலைப் பார்த்து மெல்லிய குரலில் ‘‘பை பை’’ என்று சொல்லியவாறு உயிர் நீத்தார்.

தகவல் கிடைத்து நான் அங்கு வந்து சேர்ந்த போது சுமார் எட்டு மணி இருக்கும்.

சிறிது நேரம் அண்ணாவின் பூத உடலைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அண்ணா ஏற்கெனவே ஒல்லியான தேகம். இப்போது இன்னும் மெலிந்திருந்தார் என்பதை அப்போது தான் கவனித்தேன். ஈரத்துணியைப் பிழிவது போல உடலைச் சக்கையாகப் பிழிந்து விட்டார் என்பது புரிந்தது.

அன்புத் தம்பியர் சிலர் வந்து சேர்ந்தனர். அன்று இரவு அனைவரும் கண் விழித்திருந்தோம். அண்ணா இருந்தார், இப்போது மறைந்து விட்டார் என்ற உணர்வு எங்களில் யாருக்கும் இருக்கவில்லை. எப்போதும் போல சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

பெரியவாளின் மகாசமாதி பற்றி அண்ணா எழுதி இருந்தது எனக்கு நினைவு வந்தது.

‘‘பெரியவா வேத தர்மப்படி நடந்தார் என்று சொல்வது சரி. ஆனால், அவர் எப்படி இருந்தார்?’’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு, ‘‘இருந்தார் என்று இறந்த காலத்தில் சொல்லப்படவே முடியாத நித்தியப் பொருளே பெரியவா’’ என்று விளக்கமும் சொல்லி இருப்பார்.

அண்ணாவுக்கும் அது பொருந்தும்.

அண்ணா இருந்தார் என்று சொல்வதும் பொருத்தமற்றது என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர் இருந்தார் என்று சொல்வதை விட இல்லை என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

ஏனெனில், அவர் எதிலும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.

துறவு என்றால் துறப்பது, விடுவது என்று சொல்கிறோம். விடுவதற்கு எதுவோ இருந்தால் தானே துறக்க முடியும்? விடுவதற்கு அண்ணாவிடம் எதுவுமே இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.

மரணம் என்ற ஒன்று தான் அவரை இல்லாமல் ஆக்கி விட்டது என்றும் எனக்குத் தோன்றவில்லை.

இதை வேறு எப்படி விளக்குவது என்பதும் புரியவில்லை. புரிந்து கொள்ளவோ, விளக்கவோ அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை.

இருந்தாலும் –

அந்தப் பிஞ்சுப் பாதங்களை இனிமேல் பிடிக்க முடியாது.

முகம் மலர்ந்த சிரிப்பைப் பார்க்க முடியாது.

கை விரல்கள் முழுவதும் விபூதியைத் தழையத் தழைய எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளும் அழகைப் பார்க்க முடியாது.

‘‘பெரியவா மாதிரி வருமாப்பா!’’ ‘‘பெரியவா மாதிரி வருமாப்பா!’’ ‘‘பெரியவா மாதிரி வருமாப்பா!’’ என்று திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்க முடியாது.

இது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.


அண்ணா சித்தியாகி சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, பெரியவா அன்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அண்ணா இறந்த விதம் பற்றி அவர் என்னிடம் விசாரித்தார்.. அண்ணாவுக்கு இறுதி மூச்சு வரை சுயநினைவும் பேச்சும் இருந்தது என்பதைக் கேட்டதும், அவர், இத்தகைய மரணம் மிகப்பெரிய யோகிகளுக்குமே கிடைக்காது, மிக அரிய வகை மரணம் இது என்று குறிப்பிட்டார்.


சக்திவேலைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியது அவசியம்.

யோகியார் அன்பரான சக்திவேலை, யோகியார், அண்ணாவுக்கு தாரை வார்த்து விட்டார்.

ஆரம்ப நாட்களில் அண்ணாவுக்குப் பணிவிடை செய்வதில் அவருக்கு இஷ்டமே இல்லை. அவர் மனம் முழுவதும் யோகியாரிடம் மட்டுமே இருந்தது.

அவர் அண்ணாவுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்த நாட்களில் அவருக்கு நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக, அவர் வேலை பார்க்கும் இடத்துக்கும் அண்ணா தங்கி இருந்த இடத்துக்கும் இடையே இருந்த தூரம் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தது.

அண்ணாவிடம் மனம் ஒட்டாத நிலையிலும், மிகுந்த ஈடுபாட்டுடன் அண்ணாவுக்கு அவர் பணிவிடை புரிந்து வந்தார். ‘‘பெரியவாளுடன் இருந்தவர், தெய்வத்தின் குரலைத் தொகுத்து வருபவர்… இப்படிப்பட்ட ஒருவருக்கு சர்வீஸ் பண்ணுவது மிகவும் புண்ணியம்’’ என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணுவார்.

ஒருநாள், யோகியார் அவருக்குச் சில பணிகள் கொடுத்து அனுப்பி இருந்தார். வழியில் எந்த இடத்திலும் சாப்பிடக் கூடாது என்று கட்டளையும் போட்டிருந்தார். அனைத்தையும் முடித்து விட்டு அண்ணாவிடம் செல்ல வேண்டும் என்றும் உத்தரவு.

வரிசையாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இரவில் அண்ணாவிடம் வந்து சேர்ந்தார், சக்திவேல். பின்னிரவு நேரமாதலால், கதவைத் தட்ட விருப்பம் இல்லாமல் படியிலேயே அமர்ந்து உறங்கத் தீர்மானித்தார்.

அவர் அமர்ந்ததும் கதவு திறந்தது. வெளியே வந்த அண்ணா அவரை உள்ளே அழைத்தார்.

உள்ளே நுழைந்ததும், இலையைப் போட்டு அண்ணாவே அவருக்கு உணவு பரிமாறினார்.

இதன் பின்னர், வேறொரு சந்தர்ப்பத்தில், அண்ணா, ‘‘இதோ பார், சக்திவேல். உனக்கு நான் தான், எனக்கு நீ தான். இதை யாராலும் மாற்ற முடியாது’’ என்று சொன்னார்.

கடைசி வரை இந்த உறவு தொடர்ந்தது. அண்ணா உயிர் பிரிந்த போது சக்திவேல் மட்டுமே அவருடன் இருந்தார்.

இந்த அத்தியாயம் எழுதும் போது சக்திவேலைத் தொடர்பு கொண்டு அண்ணாவின் இறுதி நிமிடங்களை விவரிக்குமாறு வேண்டினேன். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் படிப்படியாக விவரித்தார். அப்போது, அண்ணாவின் இறுதி நிமிடங்களில், அவர் தன்னுடைய கையைப் பிடித்திருந்த போது தனக்கு ஏற்பட்ட அதீத உணர்வை விளக்க முடியவில்லை என்று சொன்னார். அதேநேரத்தில், ‘‘முதன் முதலாக யோகியார் என் கையைப் பிடித்த போதும் இதே போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது’’ என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe