
கட்டுரை: கமலா முரளி
கல்வி வளர்ச்சி
”கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாகும் தனக்குப் பாழ் கற்றறிவிலா உடம்பு” – எனக் கல்வியின் சிறப்பை இடித்து உரைக்கிறது, பதினெண்கீழ்கணக்கு நூலாம், விளம்பி நாகனார் எழுதிய நான்மணிக்கடிகை.
கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியாமான ஒன்று !
நம் பாரதத்தில் கல்வி கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, கொடுக்கப்படுகிறது, இன்னும் கொடுக்கப்பட வேண்டும். நம் நாட்டின் கல்விச்சூழல் பற்றி சில செய்திகளை, தரவுகளை கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன் !
தனிமனிதனை, சமுதாயத்துக்கேற்றவனாக, நம் முன்னோர்கள் நெறிப்படுத்தி வைத்துள்ள நன்னெறிகளைக் கற்பித்து, அறிவாற்றலை அதிகரித்து, சமுதாயத்துக்கு ஏற்றவனாக ஆக்கும் சீரிய பணி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.
கல்வி எந்த இடத்தில் கற்பிக்கப்பட்டது , யாரால் யாருக்குக் கல்வியின் கூறுகள் கிடைக்கப் பெற்றன, கல்வியின் நோக்கம் என்ன, அணுகுமுறை என்ன என்பவை காலத்துக்கேற்ப, சூழல்களுக்கு : அரசியல் மற்றும் சமூக சூழல்களுக்கு ஏற்ப, மாற்றங்கள் அடைந்து வந்துள்ளது.
உதாரணமாக, பௌத்தக்கல்வி காலத்தில், வேத கால கல்வி, இதிகாச கால கல்வி, புராண கால கல்வி, குருகுல கால கல்வி, இஸ்லாமிய கால கல்வி, கிழக்கிந்தியக் கம்பெனி கால கல்வி … போன்ற வரிசையில், பௌத்தக் கல்வி காலத்தில், புத்த பிக்குகள் தங்கி யிருக்கக் கூடிய விகாரங்கள் கல்வி கற்கும் இடமாக இருந்தன. புகழ்பெற்ற பௌத்த தலங்களில், கல்வி மிகச் சிறந்து காணப்பட்டது. நாலந்தா, தக்ஷசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பள்ளி என்ற சொல் கூட சமண கல்வி முறையின் காலத்தில் வந்தது எனச் சொல்லுவார்கள்.
பள்ளி கொள்ளுதல், பள்ளி எழுதல் , என பள்ளி என்ற சொல் தூங்கி எழும்,படுத்து எழும் செயலுடன் தொடர்பு உடையதாகவே இருந்து வந்திருக்கிறது. சமணர்கள் குகைகளில் தங்கி, தூங்கி, எழுபவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த இடமே பள்ளி என அறியப்படலாயிற்று.
இன குல பேதமின்றி, சமணர்களும் பௌத்தர்களும் அனைவருக்கும் கல்வியைப் போதித்தனர். சமணர்களின் பள்ளிக்குச் சென்று அங்கேயே தங்கி, … பள்ளியிலேயே தங்கி கல்வி பயின்றனர் பிள்ளைகள்.
பள்ளிக்குச் சென்றனர் பிள்ளைகள். கல்விக்கூடம் பள்ளிக்கூடம் என வழங்கலாயிற்று. அது போல கல்வியின் நோக்கம் என்பதை எடுத்துக் கொண்டால், இறையருளைப் பெறுதல், ஆன்மீகம், தர்ம நெறி, ஒழுக்கம் போன்றவை நம் நாட்டில் முக்கிய நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.
இருப்பினும், தனுர் வேதம், ஆயுர் வேதம், சிற்பக் கலை மற்றும் பிற கலைகளும் கற்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டில், சங்க இலக்கியங்கள் நமது கல்வியின் சிறப்புக்குச் சான்றாக அமைகின்றன. இத்துணை நூல்கள் அக்காலத்தில் இருக்குமானால், எத்தனை சிறப்பாக தமிழகத்தின் கல்வி இருந்திருக்க வேண்டும் !
பண்டைக் காலத்தில் இருந்தே, கல்வியில் சிறந்த நாடெனினும், பெரும்பாலும் கல்வி என்பது தனி மனிதர்களுக்கான வாய்ப்பாகவோ அல்லது, சில இன குல சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்பாகவோ தான் பெரும் பாலும் இருந்து வந்திருக்கிறது.
சிறந்த நூல்களைப் படித்தல், தத்துவ விவாதங்களில் பங்கேற்றல், தானே நூற்களை எழுதுதல் என்பது அனைத்து மக்களுக்கும் சாத்தியப்பட வில்லை. நாம் கல்வி என்பதையும், எழுத்தறிவு என்பதையும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
தொழில் சார்ந்த, வியாபாரம் சார்ந்த சொற்கள் , எண்கள், அளவைகள் பற்றியும், கலைகளின் நுணுக்கங்கள் பற்றியும் நம் நாட்டு மக்கள் அறிந்து இருந்தனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! அதனையே, வரி வடிவத்தில் எழுதத் தெரியுமா படிக்கத் தெரியுமா என்றால் விடை இருக்காது.
இது ஆங்கிலத்தில் literacy எனச் சொல்லுவார்கள். முதலில் சொன்ன தொழில் சார்ந்த அறிவு skill எனச் சொல்லலாம்.
பொது அறிவு, ஒரு துறையின் நுணுக்கங்களை அறிந்து கொள்வது, ஆய்ந்து உட்பொருளை அறிந்து கொள்வது போன்றவை தொடர்ந்த கல்விப் பயிற்சியின் பலன். இதை education எனச் சொல்லாம்.
இப்படி, இந்தியாவில் கல்வி வளர்ச்சியின் வரலாறு பற்றிச் சொல்ல , வெவ்வேறு கால கட்டங்களில் இருந்த சூழல்கள், கற்றோர்-கற்பிப்போர், கற்றலின் அணுகுமுறை, உபகரணங்கள், ஊதியம் , நோக்கம் , இன பேதங்கள்,ஆண் பெண் பேதம் என எண்ணற்ற தரவுகளைப் பற்றி முற்றிலுமாக எழுதுவது மிக நீண்ட கட்டுரையாக ஆகும்.
உலக அளவில் அச்சுப் புத்தகம், கூடன் பெர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் வந்த பின் கல்வி கற்றல் மிக அதிகமாகப் பரவியது என்றால் மிகையாகாது.
அது போலவே, இந்தியாவில், போர்ச்சுகீசியர்கள், பிரென்ச் நாட்டவர், கிழக்கிந்தியக் கம்பெனி வருகைக்குப் பின் கல்வி கற்றல் பரவலானது என்பதை மறுக்க முடியாது. பின்னாளில், மெக்காலே அவர்கள் வகுத்து தந்த கல்வித் திட்டம் நமது நாட்டில் பல ஆண்டுகள் கோலோச்சியது.
சுதந்திர இந்தியாவில்,கல்வி மாநில மற்றும் மைய அரசு இரண்டிலும் இடம் பெற்று இருக்கக் கூடிய ஒரு துறை ! அரசும், தனியாரும் கல்விச் சேவை தரும் பணியைச் செய்கின்றனர். மைய அளவில் கேபினட் அந்தஸ்து அளவில் ஒரு அமைச்சரும், ஸ்டேட் அந்தஸ்து நிலையில் ஒரு அமைச்சரும் உள்ளனர்.
கல்வி அமைச்சகம் என்ற பெயர் மாற்றப்பட்டு, 1985 ல், திரு ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது மனித வள மேம்பாட்டுத் துறை எனப் பெயர் மாற்றப்பட்டது.
தமிழகத்தில் 1957 ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்வித்துறை தொடங்கப்பட்டது. 1997 ல் உயர்கல்வித் துறை என்ற அமைச்சகம் உருவாயிற்று. பள்ளிக்கல்வித் துறை அமைச்சகமும் உள்ளது.
வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் மத்திய அமைச்சரவை கல்விக் கொள்கைகள், மொழிக்கல்வி, கற்றல் மொழி, கல்வி முறைக் கட்டமைப்பு10 +2+3 போல, மாணாக்கர் தேவைகள், ஆசிரியப்பணி, உள்கட்டமைப்புத் தேவைகள் போன்றவற்றை வரையரை செய்கிறது. மாநில அரசுகள் அந்தந்த பகுதியின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து கல்வியை மேம்படுத்தும் பணியைச் செய்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் எழுத்தறிவு இல்லாது இருந்தனர். எனவே, ஒரு புறம் அனைத்து சிறார்களுக்கும் கல்வி அளிப்பதோடு, எழுத்தறிவில்லாத பெரியவர்கள் ஓய்வு நேரத்தில் கல்வி கற்க திட்டங்கள் இயற்றப்பட்டன.
எழுத்தறிவு இயக்கம் ( literacy movement ) அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சிறப்பான களப் பணியை மேற்கொண்டனர்.
20 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு மாநிலத்திலும் எழுத்தறிவு விகிதத்தை ( literacy rate )உயர்த்த எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. சிறார்களுக்கான கல்வி முறைப்படுத்தப்பட்டது. ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவு அளிக்கக் கூட இயலாத நிலையில், பிள்ளைகள் சற்று வளர்ந்தால், தங்களுக்கு உதவி புரிந்தால் , சிறிது ஊதியம் கிட்டுமே என பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதில் சுணக்கம் காட்டினர்.
அனைவரையும் பள்ளிக்கு அழைத்து வந்தது மதிய உணவு ! சுதந்திரத்துக்கு முன்னரே சென்னை மாகாணத்தில் சில பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டது. பிறகு அது நிறுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் நினைத்தவுடன் , ஒரு கையெழுத்தில் மதிய உணவு திட்டத்தைக் கொணர்ந்தாரா ? அவரது திட்டம் சிறப்பானது என்றாலும், சில்லரைக்கு எங்கே போவது ? நிதி ஒதுக்கீடு எப்படிச் செய்வது ? ஆயினும், அய்யா காமராஜர் பெரு முயற்சி எடுத்து, மதிய உணவுத்திட்டத்தைச் செயல்படுத்தினார்.
காமராஜரின் பரப்புரைகளால், மக்களும் உதவ முன் வந்தனர். எறும்புறக் கல்லும் கரையும் என்பதைப் போல, மத்திய அரசு முதலில் செவி சாய்க்காவிட்டாலும், மத்தியத் திட்டக்குழுவின் பரிந்துரையுடன் “மதிய உணவுத் திட்டம்” வந்தது. இன்று வையகமே போற்றும் மாண்புறு திட்டமாக ‘குழந்தைகளுக்கு சத்துணவு அவர்களின் உரிமை” எனும் கோட்பாடு நம் தமிழ்நாட்டின் தலைமகன் காமராஜர் போட்ட விதை !
கர்ம வீரர் காமராஜ் அவர்களை கல்விக்கண் திறந்த அண்ணல் என்று சொல்லுவர். அவரது ஆட்சிக்காலத்தில், மதிய உணவு திட்டம் மட்டும் அல்ல, பள்ளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.
நம் பாரதத்தில்,6 முதல் 14 வயதிலான குழந்தைகளுக்கான இலவசக் கல்வி என்பது பல ஆண்டுகளாக அரசின் மைய மற்றும் மாநிலங்களின் கொள்கையாக இருந்தாலும், 2000 ஆம் ஆண்டில் திரு.வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான அரசு கொணர்ந்த அனைவருக்கும் கல்வி – சர்வ சிக்ஷா அபியான் என்ற திட்டம் , மிக அதிக அளவிலான நிதி ஒதுக்கீட்டுடன் கொண்டுவரப்பட்டது.
6- 14 வரையிலான குழந்தைகள், கல்வி எனும் குடைக்குள் கட்டாயமாக வருவதை இத்திட்டம் உறுதி செய்தது. முதலில், தொடக்கக் கல்வி எஸ்.எஸ்.ஏ, பின்னர் இடைநிலைக் கல்வி வரை ( ஆர்.எம்.எஸ்.ஏ )இத்திட்டம் உயர்த்தப்பட்டது.
இதற்கு முன்னரே, தமிழ்நாட்டில், சத்துணவுத் திட்டம், இலவசச் சீருடை, பாடபுத்தகம் போன்ற திட்டங்கள் அமலில் இருந்தன. என்றாலும், எஸ்.எஸ்.ஏ மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ நிதி ஒதுக்கிடு மாணாக்கர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
மாணாக்கர்கள் பள்ளிக்கு வந்து கல்வி கற்பதில் எந்த இடையூறும் இல்லா வண்ணம், இடை நிற்றல் குறையவும் வழி வகை செய்யப்பட்டன. வல்லுநர்களால், ஆராய்ந்து பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகள் , கற்றலில் செயல்பாட்டு முறை, கலைகள் உடற்பயிற்சி, விளையாட்டு கல்வி , புது பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அனைவரையும் உள்ளடக்கிய கல்வி : இன்க்ளுசிவ் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி கல்வி கற்க, பெண்களுக்கான கல்வி மற்றும் உயர் கல்வி, திறன் கல்வி, சமுகத்தின் பின்தங்கியோருக்கான சிறப்பு சலுகைகள் என நம் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப் பட்டுள்ளன.
உயர்கல்வித் துறையிலும் நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஆராய்ச்சி நிறுவனங்கள், அதிக அளவிலான கல்லூரிகள், மருத்துவக் கல்வி, பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட்டன.
2015 ஆம் ஆண்டு, இந்தியாவில், முதன் முதலாக திறன் வளர்ப்புத் துறை எனும் அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற, ஊரக, நகர்ப்புற என அனைத்துப் பகுதிகளிலும், தற்போதைய உலகாளவிய தரத்துக்கு, கணினி அறிவுடன் இளைஞர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள , திறன் கல்வி மற்றும் தொடர் திறன்வளர் பயிற்சிகள் தர திட்டங்கள் திட்டப்பட்டு ஸ்கில் இந்தியா செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், 2015 ஆம் ஆண்டில் ஐஐஐடி ( ஐஐடி அல்ல) எனப்படும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் 25 நிறுவனங்கள் தொடங்கி (மத்திய அரசு 50% ,மாநில அரசு 35% தனியார் 15% முதலீடு ) மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி அளிக்கப்படுகிறது.
நம் மாநில மாணாக்கர்கள் அத்தகைய சிறப்புத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும். இன்றைய காலம் கணினி காலம் ! கணினியின் ஆதிக்கம் எல்லாத் துறைகளிலும் !
கல்வித்துறையில் கணினி ஒரு துணை உபகரணமாக உள்ளே நுழைந்தது. அலுவலகக் கருவியாக உருமாறி இன்றோ அத்தியாவசியக் கருவியாக மாறிவிட்டது. இன்று வலைப்பின்னல் இல்லா வாழ்க்கை இல்லை ! இதற்கான மாற்றங்களுக்குத் தயாராக வேண்டாமா ?
தனியார் பள்ளிகளில் இந்த மாற்றங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே மெல்லத் தொடங்கிவிட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் நான் பணியாற்றிய கேந்திரிய வித்யாலயாவில் பல கணினி பயிற்சி பட்டறைகளில் நான் பங்கேற்றிருக்கிறேன்.
இன்று தமிழ்நாடு கல்வித் துறை இணையப் பக்கத்தில் பார்த்தால், டி.என்.தீக்ஷா : பாட புத்தகங்கள் க்யு.ஆர் கோடுடன் தரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான கணிணி பயிற்சி, அவர்களுக்கான உதவித் தளம் டி.என்.டி.பி. தமிழ்நாடு டீச்சர்ச் பிலாட்ஃபார்ம் கல்வித் தொலைக்காட்சி, வகுப்பறைகளை கண்காணிக்கும் ( அப்சர்வேஷன் ) வகுப்பறைநோக்கின் என்ற அமைப்பு ஏராளமான தொடர்புச் செய்திகள், காணொளிகள்… இது போன்ற கணிணி துணையுடன் கல்வி என்பது மத்திய கல்வித்துறையால் அரசியல் கலப்பின்றி இரு தசாப்தங்களாக வரைமுறைப்படுத்தப் பட்டு வந்துள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில், மாற்றங்கள் மெல்ல மெல்ல வரத் தொடங்கியது.
தற்போது, தமிழ்நாட்டிலும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த கற்றல் முறைக்குத் தங்களை வகைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்றைய கல்விச் சூழலின் சவால்கள் என்ன ? அனைவரிடமுன் கணினி அல்லது திறன் பேசி இருக்குமா ? அனைவரிடமும் இணையவழி இணைப்பு இருக்குமா? பிள்ளைகள் பாடங்களை முழுமையாகக் கவனித்து, புரிந்து கொள்வார்களா?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வியின் உயரிய நோக்கமான ஒழுக்கம், அறநெறி , சிறந்த குண நலப்பண்புகள் சற்றே பின்தள்ளிப் போய்விடுமோ ?
இந்த கேள்விகளுக்கு வல்லுநர்கள் விடை தேடிக் கொண்டு இருக்கின்றனர். கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது அல்ல ! அது, சிந்திப்பதற்காக மனிதனைப் பயிற்றுவிப்பது என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வாழும் இந்த உலகமானது தொடர்ச்சியான மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வருகிறது.
- எனவே சவால்களை எதிர்கொள்ளுவோம் !
- திறன் வளர்ப்போம் !
- மனிதனை மேம்படுத்தும் செயலில் கல்வி எனும் ஆயுதத்தை சரிவரப் பயன்படுத்துவோம் !
- கல்வி வளர்ச்சி இன்று மட்டுமல்ல , என்றென்றும் தொடரட்டும்.