தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
ஏப்ரல் ஒன்பதாம் தேதி சாந்திரமானத்தின்படி புத்தாண்டு (உகாதி) பிறக்கிறது. இந்தப் புத்தாண்டின் பெயர் க்ரோதி. சூரியனின் சக்தியையும் கால சொரூபத்தையும் அனுசரித்து வைத்த அறுபது ஆண்டுகளின் பெயர்களில் இதுவும் ஒன்று. குரோதமும் பகவானின் ரூபமே. படைப்பு, அழிவு என்ற இரண்டு கோணங்களிலும் குரோதத்தைப் பார்க்க முடியம்.
உலக நன்மைக்காகவும் தர்மத்தைக் காப்பதற்காகவும் தர்மத்திற்குட்பட்டு அதர்மத்தை ஒடுக்கும் இறை சக்தியே குரோதம். ‘மன்யவே’ என்று வேத சூக்தங்களில் போற்றப்படுகிறார் இறைவன்.
அக்னி, ஒளியையும் சக்தியையும் அருளுவது போலவே குப்பையை எரிப்பதற்கும் பயன்படுகிறது. தர்ம சம்மதமான குரோதத்தோடு கூடிய ஈஸ்வரன் குரோதி எனப்படுகிறான். இந்தக் குரோதம் பகவானின் கருணைக்கு மறு உருவமே ஆதலால் இது உலகிற்கு நலனை விளைவிக்கிறது.
கால சொரூபமான பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம்.
இந்த ஆண்டு பாரதத்தின் அரசாட்சி வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டில் இந்த ஜனநாயக தேசத்தில் தர்மத்தோடு கூடிய ஆட்சி உரிய வைபவத்தோடு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும் என்று கால சொரூபனை வேண்டிக் கொள்வோம்.
அரசியல் கோணத்தில் அன்றி, தேசத்தின் குடிமகனாக, தேசத்தில் நடக்கும் மாற்றங்களை, யதார்த்தமாகப் பார்க்க வேண்டும். நடக்கும் சரித்திரத்தை அடையாளம் கண்டு அதிலிருக்கும் சிறப்புகளைப் பாராட்டுவதுதான் சரியான பண்பாடு.
கடந்த சில ஆண்டுகளாக தேசத்திலும் தேசத்தின் மூலமும் உலகில் காணப்படும் உயர்ந்த உண்மைகளை கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும். சென்று போன வரலாறில் மட்டுமின்றி நிகழ்கால வரலாற்றிலும் அற்புதங்கள் உள்ளன. அவற்றை சமகாலத்திலேயே ஆராய்ந்து கபடமின்றி வாழ்த்த வேண்டும். மகிழ வேண்டும். கர்வம் கொள்ள வேண்டும். அது உற்சாகத்தையும் தூண்டுதலையும் அளிக்கும்.
அண்மையில் ஐநா சபை பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ள பாரத தேசத்தைப் பாராட்டியுள்ளது. பத்தாண்டு காலத்தில் ஏழ்மை ஒழிப்பிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பாரதம் சாதித்த முன்னேற்றத்தை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.
உலகில் பல நாடுகளுக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடிய அளவுக்கு பன்முக வளர்ச்சியை பாரதம் பெற்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது. தொழில்துறையிலும் வாணிபத்திலும் இந்தியா எத்தனை முன்னேறியுள்ளதோ அதே அளவு சாமானிய மற்றும் சமுதாய நடைமுறை வாழ்க்கையிலும் பெருமையோடு உயர்ந்துள்ளது.
குலம், மதம், வர்க்கம், இனம் என்றவற்றுக்கு அப்பாற்பட்டு குடிமக்கள் அனைவருக்கும் அநேக சௌகர்யங்களும் உதவிகளும் கிடைத்துள்ளன. மின்சாரப் பற்றாக்குறை சற்றுமில்லாத வகையில் கிராமங்கள் பட்டணங்கள் நகரங்கள் எல்லாம் ஒளியோடு விளங்குகின்றன. விவசாயத்துறை விவசாயிகளை வளர்ச்சியின் வழியில் அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் மீது உலகளாவிய கௌரவ மரியாதைகள் பெருகியுள்ளன. கட்டுமானத் துறையில் தன்னிறைவு அடைந்துள்ளது. கல்விக்கூடங்கள் வளர்ந்துள்ளன.
உன்னதமான நம் கலாசாரம். பாரம்பரியம், சம்பிரதாயச் சிறப்புகள், கலைகளின் பெருமை எல்லாம் உலகில் தலை நிமிர்ந்து காட்சியளிக்கின்றன.
பகை நாடுகளின் தந்திர வியூகங்களைச் சிதைக்கக் கூடிய திட்டமிடும் திறன், பாதுகாப்பு அமைப்பு, ராணுவம் மட்டும் ஆயுதங்களின் சாமர்த்தியம் எல்லாம் திடமான முறையில் முன்னேறுகின்றன. பாரத தேசத்தை எந்த விதத்திலாவது அடக்கி விட வேண்டும் என்று அற்பத்தனமாக சூது செய்யும் எதிரிகளின் ஆசைகள் தூள் தூளாகின்றன.
பாரத தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உதவக்கூடிய திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் வேறுபாடு சிறிதும் இல்லை. ஏறக்குறைய ஒவ்வொரு இந்தியனுக்கும் வங்கிக் கணக்கு, தொழில்நுட்ப முறையில் பணப் பரிவர்த்தனை, கட்டுப்பட்டுள்ள ஊழல், நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை தேசம் சாதித்துள்ளது.
சுதந்திரம் அடைவதற்கு முன்பே இருந்த, அதற்குப் பிறகு பல பத்தாண்டுகளில் மேலும் முற்றிப்போன பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை சாதித்துள்ளோம்.
காஷ்மீரில் அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்து, மக்களனைவரும் சுகமாக வாழும்படியாக ரட்சணை பாதுகாப்பை வலுப்படுத்தியது மிகச் சிறந்த வளர்ச்சி,
அக்கிரமமாக தேசத்திற்குள் நுழைந்த தேசத் துரோகிகளான வெளிநாட்டு கும்பல்களை விரட்டி, குலத்தோடோ மதத்தோடு சம்பந்தமின்றி, பாரத தேசத்தைச் சேர்ந்த அனைவரின் நலனையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் சி..ஏ.ஏ. போன்றவை எல்லோரும் பாராட்டி வரவேற்கப்படவேண்டியவை.
அவரவர் மதத்தை அவரவர் அச்சமின்றி நலமாகக் கடைப்பிடித்து, பிற மதத்தவரை பாதிக்காத வகையில் வாழும் சூழ்நிலையை திடமாக ஏற்படுத்தி வருகிற முறையை கவனித்து வருகிறோம்.
அண்மைக் காலத்தில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்றோரின் தாக்குதல்களைத் தடுத்து அடக்குவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
சட்டத்திற்குட்பட்டு, அமைதியாக, எந்த மதத்தவரையும் அவமதிக்காமல் இந்தியாவின் ஆதரிசமான ஸ்ரீ ராமனின் பிரம்மாண்டமான கோவிலை புனரமைத்துக் கொண்டுள்ளோம். இந்தியா, மதத்தில் பெயரால் துண்டாடப்பட்ட போது, பாரத தேசத்தில் அழிக்கப்பட்ட கோவில்கள் மீண்டும் கட்டப்படும் என்று இந்துக்களுக்கு இருந்த ஆசை, பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நிறைவேறி இருக்கிறது. அப்போதே பட்டேல் போன்ற தலைவர்களால் கோடிக்கணக்கான மக்கள் விரும்பிய சோமநாத், அயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய கோயில்கள் புனரமைக்கப்படும் என்ற எண்ணத்தை, அன்றைய சோமனாதர் ஆலயத்திற்குப் பிறகு இன்று அயோத்தி நிரூபித்துள்ளது.
ராமர் கோயிலைக் கட்டியதில், இந்து மதத்தவருக்குத் திருப்தியளித்ததோடு பிற மதத்தவருக்கும் எந்த அச்சமோ பாதுகாப்பின்மையோ இல்லாதபடி சாமர்த்தியமான முறையில் நடந்து கொண்டதை நிதர்சனமாகப் பார்க்க முடிந்தது.
ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடாமல் அனைவரின் நலனையும் வளர்ச்சியையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடக்கின்ற நிகழ்வுகளும் வளர்ச்சித் திட்டங்களும் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றன.
பதவி மோகத்தால் ஊழலில் மூழ்கிய சில அரசியல் கட்சிகள், இந்தியாவைத் தாக்குவதற்காக அவற்றோடு கைகோர்த்த பகை நாட்டுச் சக்திகள், இந்த இருவரின் மானச புதல்வர்களான ஊடகங்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து, மேலே கூறிய வாஸ்தவமான உண்மைகளைத் தவறாக விமரிசனம் செய்வதும். தாறுமாறாகக் காட்சிப்படுத்துவதும் செய்து வந்தாலும் பாரத தேசத்தவர்களும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உண்மைகளை அறிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாரத தேசத்தின் இதயத் துடிப்பான சனாதன தர்மத்தின் மதிப்பு இப்போதுதான் பலருக்கும் புரிய வந்துள்ளது. பொறுமை, சமரசம், அனைவரையும் ஆதரிப்பது போன்ற உயர்ந்த குணங்கள் சனாதன தர்மத்தின் இயல்பான குணங்கள் என்ற உண்மை தெளிவாக வெளிப்பட்டு வருகிறது.
இவ்விதமாக, சனாதன தர்மத்தைப் பிரதானமாகக் கொண்ட ஆட்சியில் இந்தியாவில் அனைத்துப் பிரிவினரும் முன்னேற்றத்தைப் பெற்று வருகிறார்கள் என்றும் பாரதம் எல்லாவற்றிலும் தலை சிறந்து விளங்குகிறது என்றும் உரத்துக் கூறலாம். இதனை இந்தியர்கள் அனைவரும் சந்தேகமற அங்கீகரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ்,
ஏப்ரல், 2024)