தென்காசி ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில்

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை தூர்வாரிய போது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமியின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது; பின்னர் அந்த சிலையானது முருக பக்தரான சித்தர் ஒருவரின் சமாதிக்கு மேலே வைக்கப்பட்டு தற்போதுள்ள கோயில் எழுப்பப்பட்டது என்கிறார்கள்.


இந்தக் கோவிலின் தலவிருஷம் ஐந்தாகும். சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, விநாயகர் ஆகிய ஐந்து இறைசக்தியும் இக்கோயிலில் உள்ள அரசு, வேம்பு, மாவிலிங்கம், மாதுளை, கருவேப்பிலை ஆகிய ஐந்து மரங்களில் எழுந்தருளியிருக்கிறார்கள். அந்த மரங்களின் கீழ் மூலவரான பாலசுப்ரமணியசுவாமி மயில் வாகனத்திற்கு அருகில் குழந்தை வடிவில் வீற்றிருக்கிறார்.

குழந்தைப்பேறு வேண்டுவோர் இங்கு வழிபட்டால் விரைவில் மழலைப் பேறு கிட்டும். வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிய பிறகு, பாயசத்தை நிவேதனமாகப் படைத்து, அதனை கோயிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி, சிறுவர்களை அருந்தச் சொல்கிறார்கள். இதனை படிப்பாயச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயச நிவேதனத்தை ஏற்பதாக ஐதீகம்.