
பாரதத்தின் அடையாளமாகத் திகழும் ரத்தன் டாடாவின் மனதை உடைத்த சம்பவமாக கர்பிணி யானை கொல்லப்பட்டது ஆகியிருக்கிறது. அந்த துக்கம் தாங்க முடியாமல் அவர் டிவிட்டரில் வெளியிட்ட செய்தி பலத்த விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
கேரளாவில் கர்ப்பிணி யானையை அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொன்ற சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. யானை கொல்லப் பட்ட சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், திரைத்துறையினர் என பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விலங்குகள் பிரியரான ரத்தன் டாடாவும் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது துக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி விலங்குகளிடம் இதுபோன்று நடந்துகொள்வது மனிதர்களை கொல்வதற்கு சமம், என தெரிவித்துள்ளார்.
தண்ணீரில் நின்று தத்தளித்து உயிருக்குப் போராடிய யானையின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி பார்த்த அனைவரின் மனதையும் நொறுக்கியது.