
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஒரு தம்பதி, தங்களது திருமண தாம்பூலப் பையில் வெத்தலை பாக்குடன் முகக் கவசத்தையும் சேர்த்து அளிதிருப்பது ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மாரியப்பன். சி.ஆர்.பி.எப் வீரர். இவரது தங்கை கோகிலா – நாகமணி திருமணம் எளிமையாக நடந்தது.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உறவினர்கள் முகக் கவசங்களை அணிந்து விழாவில் பங்கேற்றனர். மணமக்களும் முகக் கவசம், கையுறையுடன் கல்யாண சடங்குகளைச் செய்தனர். இதன் பின்னர் இந்தத் திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூலக் கவரில் வெற்றிலை பாக்குடன் முகக் கவசமும் வைத்து வழங்கப்பட்டது. இது பலரையும் ஆச்சரியத்துடன் ஈர்த்தது.
இந்த யோசனை இது குறித்து சி.ஆர்.பி.எப் வீரர் காசி கூறிய போது, திருமணத்தை விமர்சையாக நடத்த வேண்டும் என்று தான் யோசித்திருந்தோம். ஆனால், கொரோனா பரவலாலும் லாக்டவுன் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்பதாலும் திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளோம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த அனைவருக்கும் தாம்பூல கவரில் முகக்கவசமும் வைத்து வழங்கி,அனைவருக்கும் கொரோனா குறித்த விழிப்பு உணர்வையும் ஊட்டியுள்ளோம் என்றார்.