rahul and stalin - 2026

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

அரசியல் உரத்த சிந்தனை
rahul and stalin - 2026

✍️ ஜி.எஸ். பாலமுருகன்

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் வெளிப்படும் தொடர்ச்சியான உள் எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சியை தாண்டி பொது விவாதமாக மாறியுள்ளது.

தற்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியின் திடுக்கிடும் குற்றச்சாட்டு, தி.மு.க.வையும் கலங்கடித்திருக்கிறது.

தேர்தல் வந்தாலே தமிழகத்தில் காங்கிரஸ் சுறுசுறுப்பாகும். தலைமைக்கு எதிரான அதிருப்தி, கூட்டணியை விமர்சிக்கும் பேச்சுகள், கோஷ்டி பூசல் – உட்கட்சி மோதல்கள் வெளிப்படையாக வெடிக்கும் காட்சிகள் புதிதல்ல. இந்த முறையும் அது விதிவிலக்கல்ல.

“காங்கிரஸ் தொகுதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை; கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பது வேதனையாக உள்ளது; இந்த அணுகுமுறை தொடர்ந்தால் காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கொந்தளித்திருக்கிறார் ஜோதிமணி. இந்த குற்றச்சாட்டே, காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகியிருக்கும் சிக்கலின் தீவிரத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதிலிருந்து, அவரைச் சுற்றிய எதிர்ப்பு அடங்கவில்லை. தி.மு.க. ஆதரவாளர் என்ற அடையாளம், காங்கிரசின் தனித்துவத்தை மங்கச் செய்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதே பின்னணியில், கடந்த சில மாதங்களில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முன்னணி தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், உள் முரண்பாட்டை வெளிப்படையாக காட்டியுள்ளன. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் தெரிவித்த எதிர்ப்பு, காங்கிரசை தாண்டி தி.மு.க.வையும் கடுப்பேற்றியுள்ளது.

ஏகப்பட்ட அழுத்தங்களுக்குப் பிறகு கூடுதல் தொகுதிகளை பெற்றிருந்தாலும், இப்போது வெடித்திருக்கிறது தொகுதி தேர்வு முறை. “காங்கிரசின் நலனை தி.மு.க.விடம் சமரசம் செய்து விற்றுத் திண்பதா” என்று ஜோதிமணி எழுப்பிய கேள்வி, பணம் முக்கிய பாத்திரம் வகித்ததா என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்துகிறது. தேர்தல் நேரத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடும் இந்த போக்கு, அரசியலில் இருக்கும் மரியாதையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.

நேர்மை, கட்சிப் பணி, மக்கள் சேவை ஆகியவற்றை விடுத்து, தலைமைக்கு இணக்கமும் தனிப்பட்ட நலன்களும் அடிப்படையாக கொண்டு வேட்பாளர் தேர்வு நடைபெறுமானால், இது எந்த வகையான அரசியல்? காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பும், தலைமையின் முடிவுகளும் நேருக்கு நேர் மோதும் நிலையில், காங்கிரஸ் அடித்தள அமைப்பாக செயல்படுகிறதா அல்லது தலைமை சார்ந்த அரசியலாக மாறியிருக்கிறதா என்ற கேள்வி வலுப்பெறுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் மௌனமும் கவனிக்கத்தக்கது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னரும், அதை உறுதிப்படுத்தும் அரசியல் சைகைகள் வெளிப்படாதது குழப்பத்தை அதிகரிக்கிறது. தமிழகம் பக்கம் அவரது ஈடுபாடு குறைவாக இருப்பது, தேர்தல் களத்தில் காங்கிரஸ் எந்த அடிப்படையில் மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

இதன் பின்னணியில், இப்போது எழுந்திருக்கும் ஜோதிமணி போன்றோரின் எதிர்ப்பு சத்தங்கள் வெறும் உள் மோதலாக அல்ல. இது காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தையும் எதிர்கால திசையையும் தீர்மானிக்கும் கட்டமாக இந்த தேர்தல் மாறியுள்ளது. இதன் தீர்ப்பு தான் காங்கிரஸின் அடுத்த பாதையை தீர்மானிக்கும்.

  • செய்திக்கதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.