joseph vijay oath taking ceremony in chennai - 2026

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

உரத்த சிந்தனை
joseph vijay oath taking ceremony in chennai - 2026

இலங்கை ஜெயராஜ் – இலக்கியப் பேச்சாளர்

கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்: வாழ்த்துரைப்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? ஆனால் அதைச் சொன்ன பிறகு மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதிர்ஷ்டத்தால் வரும் வெற்றிகள் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டுமானால், அதற்காக நிறையப் பாடுபட வேண்டியிருக்கும். விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியையும் அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

மக்கள் தொண்டு, சிறந்த இலட்சியம், கொள்கைப்பிடிப்பு, கொடைத்தன்மை, தனி வாழ்க்கைத் தூய்மை போன்ற எதுவும் இல்லாமல் கிடைத்திருக்கும் வெற்றியை, அதிர்ஷ்டத்தால் அமைந்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமில்லை, மக்கள் விஜய்க்கு அளித்திருக்கும் இந்த வெற்றியை, அவர்மீதான பற்றுதலால் மட்டும் விளைந்தது என்று சொல்ல முடியாது. அது பழைய ஆட்சியாளர்களின் மீதான பகையாலும் விளைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் இதுவரை தனது தலைமைப்பண்பை சினிமாவில் மட்டும்தான் காட்டியிருக்கிறார். நிஜத்தில் அதனை இதுவரை அவர் காட்டியதாய்த் தெரியவில்லை. பதவியேற்றதன் பின்னான இந்த சில நாட்களிலும் அவரது அப்பண்பு முழுமையாய் வெளிப்படவில்லை.

பதவி ஏற்பின்போது அவர் பேசிய விதத்திலும், ஊழியர்களோடு சேர்ந்து மேசை தூக்கிய விதத்திலும், நாடகத்தன்மைதான் மேலிட்டுத் தோன்றியது. அன்று கம்பீரமாய் அவர் பேசிய பேச்சில், இயற்கையைவிட செயற்கையே அதிகரித்திருந்தது. அவர் பதவிப்பிரமாணம் செய்தபோது, “பாகுபலியை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழினத் தலைவராய் சட்டசபைக்குள் “கோட்டும் சூட்டுமாய்” அவர் நுழைந்த விதம் ரசிக்கும்படியாய் இல்லை. அத்தனை பேரும் தமிழர் கலாசார உடையில் இருக்க, முதல்வர் மட்டும் மேற்கத்திய உடையில் வந்ததன் காரணம் புரியவில்லை. இவ்வுடை ஒருவேளை இளையோரை ஈர்க்கலாம். ஆனால் அது அவரை ஒரு தமிழ்த் தலைவராய்ப் பாமர மக்களின் நெஞ்சில் பதிய விடாதென்றே தோன்றுகிறது.

அடுத்து, விமர்சனத்துக்குரிய அவரது தோழிக்கு பதவியேற்பு வைபவத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெருமைக்குரிய ஒன்றாய்த் தோன்றவில்லை. இன்னொரு ஜெயலலிதா உருவாக்கப்படுகிறாரோ? என்று எண்ணத் தோன்றியது. அரசியலில் புதிய பாதை அமைக்க நினைக்கும் விஜய், தன் தனி வாழ்க்கையில் பழைய தலைவர்களின் பாதையிலேயே நடக்க நினைப்பது துரதிர்ஷ்டமே!

பதவியேற்றதும், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் ஆசி பெற்ற செயலில் அரசியற்பண்பாடு இருந்ததாய்ப் பலரும் சொல்கிறார்கள். அது உண்மையெனின், அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் சந்தித்திருக்க வேண்டும். அங்ஙனம் சந்திக்காததால், அவரது மற்றைய சந்திப்புகளெல்லாம் தனது பதவி நிலைப்புக்காகச் செய்யப்பட்டவை என்றே கருத வேண்டியிருக்கிறது.

தனது ஆஸ்தான சோதிடரை உதவியாளராய் நியமித்து, பின் மற்றவர்களின் எதிர்ப்பால் அவருக்குக் கொடுத்த பதவியை இரத்துச் செய்த விதம், அவரது எண்ணித் துணியாத இயல்பை வெளிப்படுத்தியது.

சட்டசபையில் விஜய்யை வைத்துக்கொண்டே, அவரையும் அவரது கட்சியின் செயற்பாட்டையும் உதயநிதி வெகு சாவகாசமாக இழித்துரைத்த போது, அதனை உடன் எதிர்கொள்ளாமல் விஜய் தலை கவிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த விதம் எரிச்சலூட்டியது.

அந்த இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. “பூனை மெலிந்தால் எலியும் எட்டி உதைக்குமாம்” என்ற கதைதான். சபையில் பதிலுரைக்காமல், பின்னர் உதயநிதியின் தூற்றுதலுக்கான எதிர்வினையை அவர் ஆற்றியிருக்கும் விதம் மதிப்புக்குரியதாய் இல்லை.

மேலதிக வாக்குகளுக்காக பழைய பகைவர்களிடம் கையேந்தினால், இப்படித்தான் இருக்க வேண்டி வரும். “நக்கினார் நாவிழந்தார்” என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

சிங்கம், முயல், புலி, மான், பாம்பு, கீரி, நாய், பூனை என ஒன்றுக்கொன்று பகையான அனைத்தையும் ஒரு கூட்டிற்குள் அடைத்து, அக்கூட்டின் மேல் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் விஜய். அதனால் தினம் தினம் அவரது சிம்மாசனம் ஆடிக்கொண்டுதான் இருக்கப் போகிறது.

நிர்வாகம் என்பது இலேசான வேலையில்லை. இலட்சியங்களைச் சுலபமாக வாயால் பேசிவிடலாம். அவற்றை நிறைவேற்றுவதில்தான் ஆளுமை தங்கியிருக்கிறது. ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் அவர் இட்டிருக்கும் சில கட்டளைகள் மகிழ்வு தருவதென்னவோ உண்மைதான். ஆனால் அவற்றை அவரால் தொடர்ந்து உறுதியாய்க் கடைப்பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை.

விஜய்க்கு இனி சம்பாதிக்க வேண்டிய தேவையேதுமில்லை என்பது நிஜமே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்களை வைத்துக்கொண்டு, இவரால் தூய அரசியல் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமே! மிளகாய்ப் பொடியைப் போட்டு, பாயாசத்தை இனிக்க வைப்பேன் என்பது போல்தான் இதுவும் இருக்கிறது. “மந்திரத்தால் மாங்காய் விழுத்தத்” தெரிந்தால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

சினிமா கதாநாயகனான விஜய்யை, உண்மைக் கதாநாயகனாய் நினைத்துக் கொண்டுதான் இளைஞர் கூட்டம் அவர் பின்னால் திரண்டிருக்கிறது. மாற்றம் வேண்டியே தமிழ்நாட்டு மக்கள் விஜய்யை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அவர்களைத் திருப்தி செய்ய விஜய் நிறையப் போராட வேண்டியிருக்கப் போகிறது. மேற்சொன்னவற்றை நிதர்சனம் உணர்ந்தே கூறியிருக்கிறேன். இத்தகைய எதிர்ப்புக் கடல்களை விஜய் நீந்திக் கடப்பாரானால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.