கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி புஷ்பா படம் திரைக்கு வந்து மக்களிடையே ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பு குறித்து பல முன்னணி நடிகர்களும் புகழ்ந்துவரும் நிலையில், தெலுங்கின் முக்கிய நடிகரான மகேஷ்பாபு புஷ்பா படத்தைப் பார்த்து மிரண்டு விட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகேஷ்பாபு,” புஷ்பா படம் அல்லு அர்ஜுனின் அசலான மற்றும் அசத்தலான படம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புஷ்பா படத்தின் இயக்குனரான சுகுமாரின் உழைப்பைப் பாராட்டியுள்ள மகேஷ்பாபு, அவருடைய படங்கள் மிகவும் நேர்த்தியானவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றிய தேவி ஸ்ரீ பிரசாத்தைப் புகழ்ந்த மகேஷ்பாபு தனது ட்விட்டர் பதிவில்,” உங்களைப்பற்றி என்ன சொல்வது.. நீங்கள் ஒரு ராக் ஸ்டார்.. மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்த அல்லு அர்ஜுன் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாராட்டு உங்களுடையது என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மகேஷ்பாபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில்,” நான் மிகவும் மதிக்கும் உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி. நான் எப்போதும் சொல்வதைப்போல உங்களுக்கு பெரிய மனது. லவ் யூ சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் டிசம்பர் 17 ஆம் தேதி தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம், அதே நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது.
புஷ்பா : தி ரைஸ் என்னும் பெயரில் வெளியான படத்தின் முதல் பகுதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்றே சொல்லவேண்டும். இதன் காரணமாக படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா : தி ரூல்-க்கு இப்போதே மக்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.