திருமணக் கனவுகளுடன், அந்த இனிய நாளுக்காக காத்திருந்தவர் சைத்ரா (வயது 26). அந்த இனிய நாளும் வந்தது
திருமணக் கோலத்தில், மணமகனுடன், விருந்தினர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று, புகைப்படங்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்த மணமகள், திடீரென மயங்கி உறவினர்கள் முன்னிலையில் சரிந்தார்.
மணப்பெண் மயங்கி சரிந்து விழுந்ததை கண்டு உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணமகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகக் கூறிவிட்டார்.
கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. திருமண வீடே சோகத்தில் மூழ்கியது. தனது மகள், தங்களை விட்டுப் பிரிந்து கணவர் வீட்டுக்குச் செல்லப் போகிறார் என்பதையே தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு, மகள் தங்களை விட்டு நிரந்தமாக போய்விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவர்களைத் தேற்ற முடியாமல் உறவினர்கள் பரிதவித்தனர்.
இந்த நிலையிலும், தங்களது மகளின் மரணம் ஒரு முடிவாக இருக்கக் கூடாது, பல உயிர்களின் துவக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.
அதனால், தங்களது மூளைச்சாவடைந்த பெண்ணின் முக்கிய உடல் உறுப்புகளை தானமளிக்க முன் வந்தனர். மகளை இழந்த நேரத்திலும் அந்த பெற்றோர் எடுத்த முடிவு பலரும் தங்களது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக மாநில மந்திரி சுதாகர், பெற்றோரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, அவர்களது இந்த முடிவுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.சுதாகர் கூறியதாவது:-
சைத்ராவின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நாள். ஆனால் விதி வேறு திட்டங்களை தீட்டிவிட்டது. இதயத்தை நொருக்கும் சோகத்திற்கு இடையே, உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்துள்ளனர். இந்த செயல் பல உயிர்களை காப்பாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமண நாளில் மணப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
It was a big day for the 26-year Chaitra but destiny had other plans. She collapsed during her wedding reception at Srinivasapur in Kolar district. She was later declared as brain dead at NIMHANS. Despite the heart breaking tragedy, her parents have decided to donate her organs. pic.twitter.com/KQZff1IEoq
— Dr Sudhakar K (@mla_sudhakar) February 11, 2022