
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நல அமைப்பு சார்பில் மார்ச் 7 முதல் 13-ம் தேதி வரை சென்னை, திருச்சி, வேலூர், திருநெல்வேலியில் இலவச மருத்துவ முகாம்
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டத்திற்கு உட்பட்ட, சென்னை மண்டல தொழிலாளர் நல அமைப்பு சார்பில், மார்ச் 7 முதல் 13 வரை, இலவச மருத்துவ மற்றும் கண் மருத்துவ முகாம், இ-ஷ்ரம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான பதிவு (பிரதமரின் யோகி மாந்தன் யோஜனா) போன்றவற்றுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் எனப்படும் சுதந்திரப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தொழிலாளர் நல அமைப்பு சார்பில், சென்னை வடபழனி, வண்ணாரப்பேட்டை, திருச்சி-காட்டூர், வேலூர், சத்துவாச்சேரி, வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம், திருநெல்வேலி, முக்கூடல், தென்காசி, புளியங்குடி, வி.கே.புதூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் நல அமைப்புக்குட்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிறப்பு முகாம்கள் (மருத்துவம் – கண்மருத்துவ முகாம்) காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த முகாமின்போது இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளும் வழங்கப்படும்.
மேலும் இ-ஷ்ரம், மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான சேர்க்கைப் பதிவு, தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் போன்றவையும் நடைபெறவுள்ளது.
எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் பி.அருண் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.